
நாம் எல்லோரும் மகிழ்வுடனும், ஆனந்தமாகவும் வாழ விரும்புகிறோம். அதற்கு நல்ல எண்ணங்களை மனதில் விதைக்க வேண்டும். நமது அறுவடை நாம் விதைக்கும் விதையை பொறுத்துதான் இருக்கும். நம் எண்ணங்களே நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சிகளை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆரோக்கிய எண்ணங்கள்தான் சமுதாயத்தில், அளப்பரிய செயல்களின் மூலம், தடம் பதிக்க உதவும் மாபெரும் சக்தியாக இருக்கிறது.ஆரோக்கிய எண்ணங்களை கொண்டவர்கள் என்றுமே வாழ்க்கையில் தோல்வியை தழுவியதில்லை.
உயர்ந்த எண்ணங்களை கொண்டு தங்களது வாழ்க்கையை வெற்றிப் பாதையில் செலுத்த முற்படுபவர்களுக்கு என்றுமே வாழ்க்கை வண்ணமயமான வெற்றிகளை அள்ளித்தரும்.
ஓருநாள் புத்தர் பிச்சையேற்க ஒரு வீட்டின் முன் போய் நின்றார். அவரைக் கண்ட விவசாயியான அந்த வீட்டுக்காரன் கோபத்துடன்,
''உடல் வலிமையோடு இருக்கிற நீர் ஏன் உழைக்கக் கூடாது? நான் வயலில் உழுகிறேன்; விதைக்கிறேன்; கடுமையாக உழைத்து எனக்குத் தேவையான உணவைப் பெறுகிறேன்.
என்னைப் போல நீயும் உழைத்தால் இப்படிப் பிச்சை எடுக்கும் இழி நிலை வேண்டாமே! என்னைப் போல கொளவரத்துடன் உண்ணலாமே? என்று கேட்டான்.
அதற்கு புத்தர், நானும் உழுது விதைத்துத்தான் உண்கிறேன் என்றார். அந்த விவசாயி வியப்புடன், நீர் உழவரா? அதற்கான அடையாளம் உம்மிடம் கொஞ்சம்கூட இல்லையே!? என்று கேட்டான். உடனே புத்தர், அன்பனே! கவனமாகக் கேள்.
நம்பிக்கை என்னும் விதையை விதைக்கிறேன். என் நல்ல செயல்களை அந்த விதைக்கு மழை நீராகப் பாய்ச்சுகிறேன்.
விவேகமும் வைராக்கியமும் என் கலப்பையின் உறுப்புக்கள். என் உள்ளமே மாடுகளை வழிநடத்தும் கடிவாளம்.
தருமமே கலப்பையின் கைப்பிடி. தியானமே முள்.மன அமைதியும், புலனடக்கமுமே எருதுகள். நான் மனம் என்னும் வயலை உழுது, ஐயம், மயக்கம், அச்சம், பிறப்பு, இறப்பு ஆகிய களைகளை எடுத்துஎறிகிறேன்.
அறுவடை செய்து கிடைக்கும் கனி - நிர்வாணம் என்னும் பிறப்பு இறப்பு இல்லாத நிலையாகும். இப்படி நான் அறுவடை செய்வதால் எல்லாத் துன்பங்களும் அழிந்து விடுகின்றன என்று விளக்கம் தந்தார்.
ஒரேமுறை வாழப்போகிறோம், எதை விதைக்கிறோமோ அதைத்தான் பலநூறு மடங்காக அறுவடை செய்யப் போகிறோம். நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம் அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம்.. பிறரை வாழ வைத்து வாழ்வோம்.