தெரிந்துகொள்ள வேண்டிய சமையல் குறிப்புகள்!

தெரிந்துகொள்ள வேண்டிய சமையல் குறிப்புகள்!

1) காய்கறிகளை வேக விடும்போது அதற்கு தேவையான உப்பையும் மஞ்சள் தூளையும் சேர்த்து வேக விட சீக்கிரம் வெந்துவிடும். ஆனால் அதே சமயம் காய்களுடன் பருப்பு வகைகளை பயித்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்து வேக விடும்போது உப்பு சேர்க்காமல் வெறும் மஞ்சள் தூள் மட்டும் சேர்த்து வேக விட சீக்கிரம் பருப்பு நன்கு மலர்ந்து வெந்துவிடும்.

2) உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது ரோஸ்ட் செய்யும் போது அரை கரண்டி தயிர் கலந்து பிசிறி விட்டு செய்ய கலரும் சூப்பர்; சுவையும் சூப்பராக இருக்கும்.

3) கோதுமை மாவு அரைக்க மெஷினுக்கு எடுத்துச் செல்லும் போது ஒரு கிலோவுக்கு 50 கிராம் என்ற அளவில் சோயா பருப்பு கலந்து அரைக்க சத்து கூடும்.

4) மஞ்சள் மிகவும் நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும். சாம்பார் பொடி, ரசப் பொடி அரைக்கும் போது நாலு துண்டு வரளி மஞ்சளையும் சேர்த்து அரைத்து வர நிறம், மணம், ஆரோக்கியம் பெறலாம்.

5) தோசை மாவுடன் சிறிது கடலை மாவு கலந்து வார்க்க தோசை ஹோட்டல்களில் கிடைப்பது போல் நல்ல பொன் கலரில் மொறுமொறுப்பாக வரும். ஒரு கப் மாவிற்கு ஒரு ஸ்பூன் கடலை மாவு போதும். கட்டி இல்லாமல் சிறிது நீர் விட்டு கரைத்து சேர்க்கவும்.

6) ரசம் பொங்கி வரும் போது இறக்கி சிறிது வறுத்து பொடித்த சீரகத்தூள், மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலக்க ருசி கூடும்.

7) முட்டைகோஸ் பொரியல் செய்யும்போது வரும் வாடை சிலருக்கு பிடிக்காது. இதற்கு ஒரு துண்டு இஞ்சியை துருவி சேர்த்து பொரியல் செய்ய மணமும் ருசியும் கூடும். வாடையும் இராது.

8) இட்லி பொடிக்கு வறுக்கும் போது கடைசியாக ஒரு துண்டு புளியையும் சேர்த்து இரண்டு புரட்டு புரட்டி பொடிக்க இட்லி பொடி நன்றாக இருக்கும்.

9) இட்லி பொடிக்கு கடலைப்பருப்பு ஒரு பங்கு, உளுத்தம்பருப்பு அரை பங்கு, காய்ந்த மிளகாய் காரத்திற்கு தகுந்தவாறு, கருப்பு எள் இரண்டு ஸ்பூன், உப்பு தேவையான அளவு, சக்கரை சிறிது, பெருங்காய கட்டி சிறிது, புளி ஒரு துண்டு. இவற்றை நன்கு பொன் கலரில் வறுத்து ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்க சூப்பரான இட்லி பொடி தயார். இதனை இட்லி தோசைக்கும், சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு பிசைந்தும் சாப்பிட எள்ளின் வாசமுடன் சுவையாக இருக்கும்.

10) பொடி வகைகளை கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே பிரஷ்ஷாக செய்து சமைக்க நல்ல ருசியுடன் இருக்கும் சமையல்.

தனியா பொடி, சீரகப்பொடி, மிளகுப்பொடி, இட்லி பொடி, ஏலக்காய் பொடி ஆகியவற்றை ரெடிமேடாக வாங்காமல் அவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் சிறிது சூடு வரும் வரை வறுத்து மிக்ஸியில் பொடித்து ஆறியதும் காற்று புகாத டப்பாக்களில் வைத்து உபயோகிக்க சமையலின் ருசி கூடும்.

11) ஊறுகாய் வகைகளையும் கடைகளில் வாங்காமல் இருப்பது நல்லது. அதில் சேர்க்கப்படும் பிரிசர்வேட்டிவ்கள் நம் உடலுக்கு நல்லதல்ல. எனவே எலுமிச்சம் பழம், கிடாரங்காய், மாகாளி, மாங்காய் ஆகியவற்றை வாங்கி சுத்தம் செய்து, நறுக்கி ,உப்பு மஞ்சள் தூள் சேர்த்து ஊற விடவும். இரண்டு மூன்று நாட்கள் கழித்து காரப்பொடி, வறுத்து பொடித்த வெந்தய பொடி, 1/2 கப் நல்லெண்ணெய்யில் கடுகு தாளித்து சேர்க்க ஊறுகாய் தயாராகிவிடும். மாகாளிக்கு மட்டும் மோர் ஒரு கப் சேர்க்கவும்.

முடிந்தவரை வீட்டில் தயாரித்த உணவுகளை சாப்பிடுவதே வயிற்றுக்கும், நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com