நினைவூட்டல்! பரீட்சைக்கு நேரமாச்சு!

நினைவூட்டல்! 
பரீட்சைக்கு நேரமாச்சு!

னவரி மாதம் வந்து விட்டால் அடுத்தடுத்து ரிவிஷன் டெஸ்ட் தொடங்கிவிடும். பத்து, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள்  ஒருவித பதற்றத்துடனே இருப்பதைக் காணலாம். பதற்றம் தவிர்க்க பெற்றோர்கள் செய்ய வேண்டியதற்கும், அதைப் பிள்ளைகள் பின்பற்ற வேண்டியதற்குமான குறிப்புகள் இதோ! 

தாய்மார்கள் ஊட்டச்சத்து தரும் உணவுகளையே செய்து கொடுங்கள். அவர்களை சோம்பலில் ஆழ்த்தும் உணவுகளை கவனமாகத் தவிர்த்து விடுங்கள். 

நல்ல காற்றோட்டமான, வெளிச்சமான, அமைதியான சூழலை வீட்டில் குழந்தைகள் படிப்பதற்கு ஏற்படுத்திக் கொடுங்கள். 

தேர்வு டென்ஷனால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன இறுக்கத்தைப் போக்க அவர்களோடு ஜாலியாக உரையாடுங்கள். சாப்பிடும் நேரம் குளித்து முடித்து ரெடியாகும் நேரம் என படிக்காத நேரங்களில் ஏதாவது ஜோக்குகள், கதைகள் சொல்லி அவர்களை சந்தோஷப்படுத்துங்கள். 

படிக்கும் பிள்ளைக்கு சந்தோசம் தரும் விஷயம் எதுவென்று பாருங்கள். ஒரு பாட்டு, ஒரு உணவு, ஒரு வீடியோ காட்சி எதுவாகவும் இருக்கலாம். அதை அவ்வப்போது அவர்களை ரசிக்கச் செய்து சந்தோஷம் தாருங்கள். 

தனி அறையில் நிம்மதியாக படிக்கும் வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுங்கள். அவர்களுக்கு தெரியாமலேயே அடிக்கடி எட்டிப் பார்த்து அவர்கள் படிக்கிறார்களா இல்லையா என கண்காணிக்காதீர்கள். இது அவர்களை எரிச்சல் படுத்தும். 

இரவு வெகு நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் உள்ள பிள்ளைகள் காலையில் கொஞ்சம் தாமதமாகத் தான் எழுந்திருப்பார்கள். இதைப் புரிந்து கொண்டு அவர்கள் விருப்பப்படி படிக்கவிடுங்கள். அதேபோல் படித்து முடித்து எந்த நேரத்தில் தூங்கினாலும் நன்றாகத் தூங்கி எழும்வரை எழுப்பாமல் விடுங்கள். பிறகு புத்துணர்ச்சியுடன் படிக்கத் தொடங்குவார்கள். 

அவர்கள் உங்களது ஆலோசனைகளைத் தேடி வரும் நேரத்தில் தயக்கமின்றி ஆலோசனை சொல்லுங்கள். ஆனால், எரிச்சலூட்டும் படி  அளவுக்கு மீறி அறிவுரைகளை சொல்லாதீர்கள். 

படிப்பு விஷயத்தில் அவர்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள். ஆனால் மற்ற விஷயங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். உதாரணமாக ஏதாவது ஒரு நண்பனுடன் நீண்ட நேரம் உங்கள் பிள்ளை அரட்டை அடிப்பதாக தெரிந்தால், படிக்க வேண்டிய பாடங்கள் ஏராளம் இருப்பதை கண்டிப்புடன் சுட்டிக்காட்டுங்கள். போனிலும் நீண்ட நேரம் செலவிடுவதை பார்த்தால் தேர்வு அருகில் இருக்கும் போது , இப்படி நேரத்தை வீணடிப்பது தவறு என்பதைப் புரிய வையுங்கள். 

பிள்ளைகளை டி.வி. பார்க்கக்கூடாது, கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடக் கூடாது என தடை போட்டு அறையில் அடைத்து படிக்க சொல்லிவிட்டு, நீங்கள்  ஹாலில் உட்கார்ந்து டி.வி பார்க்கக்கூடாது. அவர்கள் படிக்கும்போது நீங்களும் அருகில் அமர்ந்து செய்தித்தாள்கள், நூல்கள், பத்திரிகைகள் என ஏதாவது படித்துக் கொண்டிருங்கள். 

நேர்மறையான எண்ணங்களை அவர்கள் மனதில் விதையுங்கள். உனக்கு இது வராது, இந்த பாடத்தில் உன்னால் நிறைய மார்க் வாங்க முடியாது என்றெல்லாம் அவர்களை தாழ்த்திப் பேசாதீர்கள்.

உங்கள் பிள்ளை எழுதிய தேர்வை அவர்களுக்கு முன்பாக நீங்கள் மறந்து விடுங்கள். இந்த கேள்விக்கு என்ன பதில் எழுதினாய்? அந்த கேள்விக்கான படத்தை சரியாகப் போட்டாயா? என்றெல்லாம் துளைத்தெடுக்காதீர்கள். கேள்வித்தாள் சுலபமாக இருந்ததா? என்று மட்டும் கேளுங்கள். அவர்களாகவே எல்லாமும் சொல்வார்கள். நிறைய கேள்விகள் கேட்பது, மார்க் போட்டு பார்ப்பது என்பது அடுத்த தேர்வுக்கு அவர்கள் செய்யும் தயாரிப்புகளைக் குறைத்துவிடும். 

பிள்ளைகளுக்கு ஊக்கமூட்டுதல், தைரியமாக தேர்வை எதிர்கொள்ள வலுவூட்டுதல், நேர்மையாக தேர்வை அணுக அறிவுறுத்துதல், அவர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் நிறைவேற்றுதல் இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். அவர்களுக்காக நீங்கள் படிக்கவும் முடியாது. தேர்வு எழுதவும் முடியாது. 

அக்கறையோடு  அவர்களை அணுகுங்கள். ஆதரவு கொடுங்கள். ஆனால், அவர்களது பாடங்களில் அதிக கவனம் செலுத்தி அவர்களை நிம்மதி இழக்க வைக்காதீர்கள். அவர்களது பாடங்களைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததை விட அவர்களுக்கு அதிகம் தெரியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 

பிள்ளைகள் செய்ய வேண்டியது! 

ந்த நேரத்தில் தூங்கி எழ வேண்டும். இவ்வளவு நேரம் இந்தப் பாடத்தைப் படிக்க வேண்டும் என டைம் டேபிள் போட்டு வைத்து படிப்பது நல்லது. 

சோம்பலை உண்டு பண்ணும் உணவுகளை வீட்டினர் சாப்பிட்டாலும், நீங்கள் அதை தவிர்த்து விடுங்கள். 

ஒரு கேள்விக்கான பதிலை படிக்கும் போது எந்த இடத்தில் எப்படி அமர்ந்து படித்தோம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் படித்த விஷயங்கள் எதுவும் மறக்காது. 

ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக படித்தால் 5 நிமிடங்களாவது புத்தகத்தை மூடி வைத்துவிட்டு கொஞ்சம் ரிலாக்ஸாக நடந்து பாருங்களேன். அந்த இடைவெளி அடுத்து படிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும். 

சேர்ந்து படிக்கும் சமயத்தில் நீண்ட நேரம் நண்பனுடன் அரட்டை அடிப்பது, போனில் உரையாடுவது போன்ற வற்றை நீங்களே தவிர்த்து விடுவது நல்லது. 

அக்கம், பக்கம் வீடுகளில் இருக்கும் பிள்ளைகளோடு உங்களை யாராவது ஒப்பிட்டு பேசினால் அதை காதில் போட்டுக் கொள்ளாதீர்கள். தைரியமாக உங்கள் படிப்பில் மாத்திரம் கவனம் செலுத்துங்கள். 

எல்லா நேரமும் படிப்பு படிப்பு என இருக்கும்போது, வாரத்தில் ஒரு நாளாவது மாலையில் பெற்றோருடன் எங்காவது வெளியில் சென்று விட்டு வந்து படியுங்கள். அது மனதில் நன்கு பதியும். 

படிப்புக்கு இடையில் சிறு சிறு வேலைகளை செய்துவிட்டு படித்துப் பாருங்களேன். சோம்பலின்றி படிக்கலாம். தூக்கம் வராது. 

அக்கம் பக்கத்து வீடுகளில் படிக்கும் பிள்ளைகளோடு உங்களை நீங்களே ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஒவ்வொருவரது படிக்கும் பழக்கமும் வெவ்வேறு மாதிரி இருக்கும். உங்களுக்கு எந்த நேரத்தில், எப்படி படித்தால் எளிதில் மனதில் பதிகிறது என்பதை புரிந்து கொண்டு படியுங்கள். இதனால் பதற்றம் தவிர்க்கப்படும். சுதந்திரமாகவும் படிக்க முடியும். 

எழுதிய தேர்வு பற்றியே சிந்திக்காதீர்கள். அடுத்த தேர்வுக்கான பாடத்தை படிப்பதில் ஆழ்ந்த கவனம் செலுத்துங்கள்.

தேர்வுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களான பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், ஜாமென்ட்ரி பாக்ஸ், ஐ.டி கார்டு எல்லாவற்றையும் முதல் நாள் இரவே எடுத்து வைத்து விட்டு  உறங்குங்கள். காலையில் பதற்றம் இல்லாமல் பரீட்சைக்கு செல்லலாம். 

படித்ததை எழுதி எழுதிப் பாருங்கள். கணக்குகளை போட்டுப் பாருங்கள் .முக்கியமான பாய்ண்ட்களை குறித்து வைத்துக்கொண்டு படியுங்கள். ரிவிஷன் செய்ய ஏதுவாக இருக்கும். . டென்ஷனின்றி செயல்படலாம். 

பரிட்சைக்கு அன்றன்று படிக்க வேண்டிய புத்தகங்கள் மற்றும் குறிப்பு எழுதிய நோட்டு புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைப்பது நல்லது. குவியலாக அங்குமிங்கும் போட்டால் தேடித்திரிந்து கால விரையமாகி அவதிப்பட நேரிடும்.

இப்படி பெற்றோர்களும், பரீட்சைக்கு படிக்கும் பிள்ளைகளும் அவரவர் வேலையை அவரவர் சிறப்புடன் செய்தால், அதுவே ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிகரமாக மாறிவிடும். இருவருக்கும் டென்ஷன் இல்லாமல்  பரீட்சையை எழுதி மார்க்குகளை அள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com