
தீப வழிபாடு: தினம் தோறும் காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது அனைத்து செல்வங்களையும் தர வல்லது. நெய் தீபம் ஏற்றுவதால் வீட்டில் செல்வம் செழிக்கும், லட்சுமி கடாக்ஷம் உண்டாகும், கஷ்டங்கள் நீங்கும், வருமானம் அதிகரிக்கும், ஆரோக்கியம் பெருகும். நல்லெண்ணெய் (எள் எண்ணெய்) தீபம் ஏற்ற குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்குவதுடன், நவக்கிரக தோஷங்களும் நீங்கும். நல்லெண்ணெய் தீபம் எல்லா தெய்வ வழிபாடுகளுக்கும் ஏற்றது.
ஆடி வெள்ளி தை வெள்ளி போன்ற நாட்களில் திருவிளக்கு பூஜை செய்வது சிறப்பு பலன்களைத் தரும். இறைவனின் அருளைப் பெறுவதற்காக, ஜோதி வடிவாக இறைவனை விளக்கில் எழுந்தருளச் செய்து வழிபடும் ஒரு சக்தி வாய்ந்த வழிபாடாகும். இதன் மூலம் முப்பெரும் தேவியரின் அருளையும், மங்களகரமாக வாழ்வதற்கான ஆசிர்வாதங்களையும் பெறலாம்.
ஆலயம் செல்வது சாலவும் நன்று. தினமும் செல்ல நேரமில்லை என்றால் குறைந்தது செவ்வாய் வெள்ளிக் கிழமைகளிலாவது கோவிலுக்கு சென்று வருவது சிறப்பு. துர்க்கை அம்மனை வெள்ளிக்கிழமை 10.30-12 மணிக்குள்ளும், செவ்வாய்க்கிழமை 3-4.30 மணிக்குள்ளும் ராகு கால வழிபாடு செய்ய கணவன் மனைவி ஒற்றுமை ஓங்குவதுடன், பொருளாதார பிரச்சனைகளும் தீர்ந்து மனநிறைவான குடும்ப வாழ்க்கை கிடைக்கும்.
வெள்ளி, செவ்வாய் தவிர பிற நாட்களில் விளக்கை சுத்தம் செய்யலாம். விளக்கேற்றுவதற்கு தினமும் புது திரியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் விளக்கேற்றியதும் திரியை வெறும் கையால் தூண்டக்கூடாது. ஏதாவது குச்சி அல்லது பூவின் காம்பை பயன்படுத்தி தான் திரியைத் தூண்ட வேண்டும். அதேபோல் விளக்கில் எண்ணெய் தீர்ந்து, விளக்குத் திரி கருகி தானாக அணைய விடக்கூடாது. விளக்கை ஊதியோ கைகளால் வீசியோ அணைக்கக் கூடாது. எரியும் தீபத்தை பூவால் குளிர்விப்பதே சிறப்பு.
வீட்டில் செல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்குவது நல்லது. உப்பு மகாலட்சுமியின் அம்சமாகும். உப்பில் லக்ஷ்மி வாசம் செய்வதாக கூறப்படுவதால் மஹாலக்ஷ்மிக்கு உகந்த தினமான வெள்ளிக்கிழமை அன்று கல் உப்பு வாங்குவது செல்வ செழிப்பை அதிகரிக்கும்.
இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றி வழிபட நேர்மறை சக்திகள் அதிகரிக்கும், ஐஸ்வரியம் பெருகும், அஷ்டலட்சுமிகளின் அருளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரம்ம முகூர்த்த வேளையில் வெள்ளை நிற திரியிட்டு இலுப்பை எண்ணெயைக் கொண்டு விளக்கேற்றுவது மிகவும் சிறப்பானது. இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றி வர அஷ்ட லட்சுமிகளின் அருளும், ஐஸ்வர்யமும் கிடைக்கும். மஞ்சள் நிறத் திரியிட்டு தீபம் ஏற்றி வர குபேர அருளும், திருமணப்பேறும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
நெற்றி வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது. பெண்கள் திலகம் இடுவதும், குங்குமம் வைத்துக் கொள்வதும், ஆண்கள் அவரவர் கலாச்சாரப்படி விபூதி, சந்தனம், திருமண் போன்ற ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்துமே கண் திருஷ்டியை போக்குவதுடன் எந்த கெட்ட சக்தியையும் நெருங்க விடாது.
தூங்கி எழுந்ததும் முதலில் வாசற்கதவை திறக்காமல் கொல்லைப்புற கதவை திறக்க வேண்டும். ஃப்ளாட்களில் வசிப்பவர்களாக இருந்தால் பின்புறம் இருக்கும் பால்கனியை திறந்து விட்டு வாசல் கதவை திறப்பது நல்லது. அதேபோல் என்ன அவசரமாக இருந்தாலும் காலையில் அடுப்பை பற்ற வைத்ததும் முதலில் பாலை காய்ச்ச வேண்டும். பிறகு தான் சமையல், டிபன் எல்லாம்.
இரவு நேரத்தில் உப்பு, பால், தயிர் சம்பந்தப்பட்ட பொருட்களையோ, மஞ்சள் தூள் போன்ற பொருட்களையோ மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது. கத்திரிக்கோல், ஊசி போன்றவற்றையும் இரவில் மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கக் கூடாது.
சனிக்கிழமை புதுத் துணி எடுத்தால் பெருகும் என்பார்கள். அதனால் சனிக்கிழமை புதுத் துணி வாங்கலாம். ஆனால் கோடி (புதுத் துணி) உடுத்தக்கூடாது. அதேபோல் சனிக்கிழமை எண்ணெய் வாங்க கூடாது. ஆனால் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். புதுத் துணி வாங்கும் பொழுது எண்ணெய் பொருட்களை சேர்த்து வாங்கி வரக்கூடாது.
இவை அனைத்தும் பழங்காலம் தொட்டு இருந்து வரும் ஆன்மீகப் பழக்கங்களாகும். இவற்றை செய்தால் நன்மை நடக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.