
இந்தியாவில் இந்து பண்டிகைகளான தீபாவளி, பொங்கல், நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி போன்றவை சிறப்பாக கொண்டாடப்படும். அதுவும் நம் நாட்டில் உள்ள இந்துக்கள் ஆன்மிக வழிபாடுகளில் அதிக நாட்டம் கொண்டவர்கள். பூஜை, கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது போன்ற ஆன்மிக விதிமுறைகள் நெறி தவறாமல் கடைப்பிடிப்பார்கள். இந்தியாவில் கோவில்களுக்கு பஞ்சமே கிடையாது. அதில் ஒரு சில கோவிலின் பழக்க வழக்கங்களும் புராணங்களும் அந்த கோவிலை தனித்துவமானதாகக் காட்டும். அந்த வகையில் நம்நாட்டில் உள்ள கோவில்கள் காலையில் திறந்து பூஜை நடத்தப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து வைப்பார்கள். மீண்டும் மாலையில் நடையை மூடி விடுவார்கள்.
ஆனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலை மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தான் திறக்கிறார்கள். அதுவும் வெறும் 15 நாட்களுக்கு மட்டுமே திறந்து வைத்து வழிபாடு செய்கிறார்கள். அதன் பிறகு அந்த கோவிலை மூடி விடுவார்கள். மீண்டும் அடுத்த ஆண்டுதான் திறப்பார்கள்.
அப்படிப்பட்ட கோவில் தான் கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹாசனாம்பா கோவில். கன்னடத்தில் சிரித்த முகம் என்று குறிக்கும் ஹாசனா என்ற பெயரின் அடிப்படையில் ஹாசனில் அமைந்துள்ள தெய்வம் ஹாசனாம்பா என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும், அதாவது, தீபாவளி பண்டிகையையொட்டி மட்டும் திறக்கப்படும். அப்படி அந்த கோவில் நடை கடந்த ஆண்டு அடைக்கும்போது அம்மனுக்கு சாத்தப்படும் பூக்கள் மறுஆண்டு கோவில் நடை திறக்கும் போது பார்த்தால் வாடாமல் இருக்கும் என்பதும், கோவிலின் கற்பகிரகத்தில் ஏற்றி வைக்கப்படும் தீபம் அணையாமல் இருக்கும் என்பதும் ஐதீகம்.
ஆண்டு முழுவதும் மூடிக்கிடக்கும் இந்த கோவிலை தீபாவளி சமயத்தில் மட்டும் திறக்கின்றனர். இத்தகைய பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் நடை இன்று (அக்டோபர் 9-ந்தேதி) திறக்கப்படுகிறது. இன்று முதல் (வியாழக்கிழமை) வரும் 23-ந்தேதி வரை 15 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்த கோவிலில் நடை திறக்கும் முதல் நாளும், கோவில் நடையை மூடும் கடைசி நாளும் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. மற்ற 13 நாட்களும் பக்தர்கள் 24 மணி நேரமும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் வசதிக்காக இந்தாண்டு விஐபி மற்றும் விவிஐபி பாஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய முடியும் என்பதால் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு (2024) 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ததாக கூறப்படும் நிலையில் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக, 25 லட்சத்திற்கும் அதிகமானோர் அம்மனை தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய, வயதானவர்கள் அதாவது, 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை. இவர்கள் அம்மனை வரிசையில் நிற்காமல் நேரடியாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு மணி நேரத்திற்கு 6,000 பேர் தரிசனம் செய்யும் வகையில் தினமும் 1½ லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வசதியான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
இன்று திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில் நடை 15 நாட்களுக்கு பின்னர் நடை மூடும் முன்னர் அம்மன்களுக்கு இரண்டு மூட்டை அரிசி, பூக்கள், ஏற்றி வைக்கப்பட்ட ஒரு பெரிய நெய்தீபம் மற்றும் தண்ணீர் ஆகியவை வைக்கப்படுகின்றன. அந்த நெய் தீபம் அடுத்த ஆண்டு கோவில் திறக்கும் வரை எரிவதாக மக்கள் நம்புகின்றனர்.