ஜாதக ரீதியாகவோ, கிரக தோஷங்களாலோ அல்லது பொதுவாக திருமணம் நடப்பதில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ, காரணமே தெரியாமல் திருமணம் கைகூடாமல் இருப்பவர்கள் தரிசிக்க வேண்டிய 3 திருத்தலங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்
1. திருப்பரங்குன்றம் - தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்த திருத்தலம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வகையில் திருச்செந்தூரில் முருகன் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு தெய்வானையை திருப்பரங்குன்றம் கோவிலில் தான் திருமணம் செய்து கொண்டார். ஆதலால் திருப்பரங்குன்றம் கோவிலில் அருள் பாலிக்கும் முருகப்பெருமானை தரிசனம் செய்தால் திருமணம் கைகூடும் . திருப்பரங்குன்றம் சுக்கிரனின் தலமாகவும் அறியப்படுவதால், திருமணத்திற்கு உதவக்கூடிய முக்கியமான கிரகங்களில் ஒன்றான சுற்று தோஷமும் நீங்கும் என்பதால் திருப்பரங்குன்றம் கோவிலில் நடக்கும் திருக்கல்யாண வைபவத்தை தரிசித்தாலே திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
2. திருமணஞ்சேரி: பார்வதி தேவி சிவபெருமான் திருமணம் செய்த கோவில்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற திருமணஞ்சேரி திருத்தலம். பல காலமாக மணமகனோ அல்லது மணமகளோ அமையவில்லை, திருமணம் தாமதம் ஆகிக்கொண்டே இருக்கிறது என்று வருத்தப்படுபவர்கள். திருமணம் செய்த சிவனையும் பார்வதியும் வணங்கினாலே உடனடியாக தடைகள் நீங்கி திருமணம் நடக்கும். சிவபெருமானை திருமணம் செய்து கொள்வதற்காக பார்வதி தேவி தவம் செய்து, திருமணஞ்சேரி கோவிலில் தான் திருமணம் செய்து கொண்டார். சிவ பார்வதி திருமண நடந்த இடம் என்பதால் இந்த கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்தாலே திருமணம் நடப்பது எளிதாகும்.
3. ஸ்ரீனிவாச மங்காபுரம்: ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்யுங்கள்
திருமணம் நடைபெறாமல் இருப்பவர்கள் என்ன காரணம் என்றே தெரியவில்லை, ஆனால் திருமண பேச்சு நடைபெறும்போதெல்லாம் ஏதோ ஒரு பிரச்சனை ஏற்படுகிறது என்ற நிலையில் இருப்பவர்கள், திருப்பதிக்கு சென்று, திருப்பதியின் அருகில் இருக்கும் சீனிவாச மங்காபுரம் என்ற ஊரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்தால் திருமணப் பிரச்சினைகள் நீங்கும் என்ற ஐதீகமாக உள்ளது.
மேற்கூறிய மூன்று திருத்தலங்களுமே தெய்வீக திருமணங்கள் நடைபெற்ற இடம் என்பதால் திருமண தடை இருப்பவர்கள் இம்மூன்று தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்தாலே கண்டிப்பாக திருமணம் நடைபெறும்.