
இந்திய கிரிக்கெட் அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், அதனை கொண்டாடிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் போட்டோ ஒன்றை பதிவிட்டார். அந்த போட்டோ வெளியிட்ட 6 நிமிடங்களில், 1 மில்லியன் லைக்ஸ்களை குவித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு விராட் கோலியின் பதிவு ஏழு நிமிடங்களுக்குள் 1 மில்லியன் லைக்குகளை எட்டியதே சாதனையாக இருந்தது.
துபாய் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று மகுடம் சூடியது. இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியின் அனைத்து வீரர்களும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல் தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் கடைசியில் கோப்பையை கைப்பற்றியது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு ஹர்திக் பாண்டியாவும் முக்கியமானவர்.
இந்த போட்டியில் இன்றைய மற்றும் எதிர்கால நட்சத்திரங்களான சுப்மன் கில் (ஐந்து போட்டிகளில் ஒரு சதத்துடன் 188 ரன்கள்), ஸ்ரேயாஸ் ஐயர் (ஐந்து போட்டிகளில் இரண்டு அரைசதங்களுடன் 243 ரன்கள்), அக்சர் படேல் (ஐந்து போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளுடன் 109 ரன்கள்), கே.எல் ராகுல் (ஐந்து போட்டிகளில் 140.00 சராசரியுடன் 140 ரன்கள்), மற்றும் வருண் சக்ரவர்த்தி (ஒன்பது விக்கெட்டுகள்) போன்ற ஏராளமான வீரர்கள் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
சாம்பியன் கோப்பை வென்ற இந்திய அணி அந்த வெற்றியை பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்தனர். வெற்றிக்கு பின்னர் சாம்பியன்ஸ் கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுடன், தனித்தனியாக சாம்பியன் கோப்பையுடன் போட்டோவும் எடுத்து கொண்டனர். அப்போது கோப்பையுடன் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சோஷியல் மீடியா பிரபலம் கேபி லேம் (Khaby Lame) போன்று போஸ் கொடுத்து ஃபோட்டோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
இந்தப் படம் உடனடியாக சமூக ஊடகங்களில் வைரலானது, மேலும் இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் லைக்குகளை பெற்ற இந்தியர் என்ற பெருமையை பெற்ற விராட் கோலியின் சாதனையை இது முறியடித்தது. முன்னதாக, இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு விராட் கோலியின் பதிவு ஏழு நிமிடங்களுக்குள் 1 மில்லியன் லைக்குகளை எட்டியது. அதே சமயம் ஹர்திக் பாண்டியாவின் பதிவு 6 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்குகளை எட்டியது.
இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் லைக்குகளை பெற்ற இந்தியர் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இந்தப் பதிவு தற்போது 16 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. 2014 டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றபோதும் ஹர்திக் பாண்டியா இதேபோன்றுதான் போஸ் கொடுத்து பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.