உலகியல் வாழ்க்கையில் இன்றியமையாத பண்புகளாக நான்கினை விவரித்திருக்கிறார், ஆதிசங்கரர். அவர் காலத்திலேயே இந்தப் பண்புகளுக்கான அவசியம் இருந்திருக்கிறதா அல்லது தமக்குப் பின்னால் வருகிற மக்கள் தன் காலத்திய அந்த அரும் பண்புகளைக் கைவிட்டுவிடுவார்களோ என்ற சமுதாய நலன் பேணும் அச்சமா, எதனால் என்பது தெரியவில்லை.... ஆனாலும், இந்தப் பண்புகள் மனித குலத்தால் கட்டாயம் பின்பற்றப்படவேண்டியவையே.
அவை என்னென்ன?
1. எதிர்பார்ப்பில்லா தானம்:
எதையும் யாருக்கும் தானமளிக்கும்போது நம் மனம் மலர்ந்திருக்க வேண்டும். இன்னாருக்கு இன்னதைக் கொடுப்பது என்று தீர்மானித்தாகி விட்டது; பிறகு கொடுக்கும்போது மட்டும் மனம் சுருங்குவானேன்? கொடுப்பதாகத் தீர்மானித்த உடனேயே அந்த தானத்தை மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு கொடுக்க வேண்டும்; அதுமட்டுமல்ல, தன்னிடம் தானம் பெற்றவரிடமிருந்து தனக்கு என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்த்தல் இல்லாமல் கொடுக்க வேண்டும். கொடுக்கும்போதே, பெறுபவரிடம், ‘இதனால் உன் சிறப்புகள் மேலோங்குக’ என்று உளமாற, ஏன் வாயாரவும் வாழ்த்தி, தானமளித்தால், தானப் பொருளுக்கு மேலும் மதிப்பு கூடும்.
2. கர்வமில்லா ஞானம்:
மெத்தப் படித்ததால் மூளையில் அதிக விஷயங்கள் பதிவாகலாமே தவிர, தலையில் கனம் மட்டும் ஏறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கல்வி ஞானத்தின் சறுக்கிவிடக்கூடிய ஆபத்து இது. இதற்குக் காரணம், பிறருக்குத் தெரியாத சில விஷயங்கள் நமக்குத் தெரிந்து விட்டதால், எல்லாம் தெரிந்துவிட்ட மமதை தலைக்குள் ஏறிவிடுவதுதான். ஆனால், இன்னும் கற்க வேண்டிவை எத்தனையோ கோடி என்ற மனப்பக்குவம் வந்துவிட்டால் தலை லேசாகிவிடும். இது நம் கர்வத்தை அடக்கும். எந்த சபையிலும் உயரத் துடிக்கும் நம் ஆணவக் குரலையும், கைகளையும் கட்டிப்போடும்; பேச்சில் மென்மையும், இனிமையும் கூடும்.
3. பொறுமையுடன் கூடிய வீரம்:
விளையாட்டிலும் சரி, வேறெந்த போட்டியிலும் சரி, நம் திறமையை வெளிக்காட்டும் எந்த சந்தர்ப்பத்திலும், எந்த அரங்கிலும், பொறுமையைக் கைக்கொண்டோமேயானால், எதிராளி மட்டுமல்லாமல், பார்வையாளர்களும் நம்மை கண்ணியமாகப் பார்ப்பார்கள். இதனால் போட்டியில் வெற்றி பெற்றால் பிறர் அருவெறுக்குமளவுக்கு ஆரவாரிக்காமல் இருக்க முடியும்; வெற்றி பெறாவிட்டாலும், நிலைகுலைந்து விடாமலும் இருக்க முடியும். வெற்றி பெறத்தான் போட்டியில் இறங்கினோமென்பதால் வெற்றி நமக்கு வெறியை ஊட்டிவிடக்கூடாது; தோல்வியையும் எதிர்பார்த்தே போட்டியில் ஈடுபட்டோம் என்பதால், தோல்வி மன உளைச்சலைத் தந்துவிடக்கூடாது.
4. தியாகத்துடன் கூடிய செல்வம்:
இறைவன் நம்மிடம் சிலசமயம் நம் தேவைக்கும் மேல் செல்வம் அளிப்பதன் தத்துவமே, இல்லாத சிலருக்கு அந்த மிகையை அளித்து அவர்களை மகிழ்வுறச் செய்யத்தான். அபரிமிதமாக நாம் செல்வம் சேர்க்கும் அளவுக்கு இறைவன் நமக்குத் திறமையையும், வாய்ப்புகளையும் அளிக்கிறான் என்றால், அவை இரண்டும் கிட்டாதவர்களுக்கு நம்மிடம் அதிகமாக உள்ளதை அளித்து அவர்களை உயர்த்துவதற்காகத்தான். நம்மிடமிருந்து இவ்வாறு விடை பெறும் செல்வம் வேறு ரூபத்தில் நம்மிடமே வேறு முகாமிலிருந்துகூட வந்து சேரலாம்; அல்லது வராமலேயேகூடப் போய்விடலாம். தியாகம் என்பது அதைச் செய்த பிறகு அது குறித்து கொஞ்சமும் யோசிக்காமலிருப்பது; நம்மால் உதவி பெற்றவரை சந்திக்க நேர்ந்தால், அவருக்குச் செய்த உதவியை நாம் சொல்லிக் காட்டமலிருப்பது; அல்லது அவர் தன் நன்றியைச் சொல்லி நம்மைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காமலிருப்பது!
இந்த உபதேசங்களை, தன்னுடைய ‘ப்ரச்நோத்ர ரத்ன மாலிகா’ என்ற நூலில் ஆதிசங்கரர் சொல்லியிருக்கிறார். மேலே சொன்ன நான்கு குணங்களையும் அவர் சதுர் பத்ரம் என்று குறிப்பிடுகிறார். அதாவது நான்கு (மூலிகை) இலைகள். நம் ஒவ்வொருவரின் மன நலத்துக்கும் உகந்த பொக்கிஷமல்லவா சதுர் பத்ரம்!