நம் அனைவருக்கும் உறவினர் வட்டத்தைத் தவிர்த்து, ஒரு நட்பு வட்டமும் இருப்பது இயல்பு. அந்த நட்பு வட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நெருங்கிய நண்பர்கள் இருக்கக்கூடும். அவர்கள் அனைவருமே அவ்வப்போது 'ஹேங் அவுட்' (Hang out) என்ற பெயரில் ஓரிடத்தில் ஒன்றுகூடிப் பேசி மகிழ்வதும், உணவகங்களில் சேர்ந்து சாப்பிட்டுப் பின் பிரிந்து செல்வதும் உண்டு. அப்படி இருக்கும்போது உங்கள் நட்பு சிலருக்குப் பிடிக்காது போகுமானால் அதை நீங்கள் 10 அறிகுறிகள் மூலம் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். அந்தப் பத்து அறிகுறிகள் என்னென்ன என்பதை இப்பதிவில் காணலாம்.
1. 'ஹேங் அவுட்'டிற்கு எப்பொழுதும் நீங்களே தன்னார்வலராய் முயன்று, திட்டமிட்டு மற்றவரை அழைக்கவேண்டிய சூழ்நிலை. பேச்சினிடையே பிறர் மௌனம் சாதிப்பதும் நீங்களே பேச்சை தொடர முயல்வதும் மற்றவருக்கு உங்கள் மீது ஆர்வமின்மையை உணர்த்தும்.
2. நன்கு பழகிக் கொண்டிருந்த ஒருவர் திடீரென உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கேட்பதில் அக்கறை காட்டாதிருத்தல். உங்கள் பிரச்னைகள், வெற்றிகள், நீங்கள் ஆர்வம் காட்டும் விஷயங்கள் என எதைப் பற்றின பேச்சிலும் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிக்கொள்வது.
3. கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் மற்றவர்களுக்கு துணையாய் நின்று உதவி புரிவதுபோல், நீங்கள் அந்த மாதிரியான இக்கட்டில் இருக்கும்போது அவர்கள் மொத்தமாக காணாமல் போய்விடுவது.
4. நீங்கள் அவர்களுடன் சிறிது நேரத்தை செலவு பண்ணிவிட்டு வந்தபின் சந்தோஷமாகவும் புத்துணர்வு பெற்றாற்போலும் இருக்க முடியாமல், சக்தி இழந்தது போல் சோர்வுற்றிருப்பது.
5. அவர்களுக்கு உங்களிடமிருந்து ஏதாவதொன்று தேவைப்படும்போது அல்லது ஏதாவது முக்கியமானதொரு விஷயத்தில் உங்களின் ஆலோசனையைப் பெற விரும்பும்போது அல்லது உங்களால் அவருக்கு ஒரு காரியம் ஆக வேண்டிய சூழ்நிலை உருவாகும்போது மட்டும் உங்களை அணுகுவது, மற்ற நேரங்களில் பாராமுகம் காட்டுவது.
6. உங்களின் அன்பான பேச்சு அல்லது உதவி அவர்களால் துச்சமாக மதிக்கப்பட்டு பதிலுக்கு உங்களுக்கு எதுவும் செய்யாமல் அதை அப்படியே மறந்துவிடுவது.
7. ஏதாவது சாக்கு போக்கு சொல்லி உங்களுடன் நேரம் செலவிடுவதைத் தவிர்த்து மற்றவர்களுடன் அதிக நேரம் கழிப்பது.
8. உங்களின் நேரம், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, உணர்வுகள் என எதற்கும் மதிப்பளிக்காமல் அவர்கள் விரும்பியபோதெல்லாம் நீங்கள் அவர்களுடன் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது.
9. நீங்கள் உடனிருக்கும்போது நீங்கள் அங்கு இருப்பதையே மறந்து, கண்டு கொள்ளாமல் பிறரிடம் சிரித்துப் பேசி உங்கள் உணர்வுகளை காயப்படுத்தி ரசிப்பது.
10. நீங்கள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நபரே அல்ல என்ற தோரணையில் உங்களை தாழ்த்திப் பேசுவது அல்லது மற்றவருடன் ஒப்பிட்டுப் பேசி இழிவுபடுத்துவது.
மேலே கூறிய 10 வழிகளில் உங்கள் நண்பரோ அல்லது நண்பர்களோ உங்களை சமநிலையில் வைத்துப் பழகுவதைத் தவிர்க்கும்போது நீங்களும் அவர்களை மொத்தமாக தவிர்த்துவிடுவது உங்களின் வளமான எதிர்காலத்திற்கு நல்லது.