

குமரி இட்டகவேலி அம்மன் கோயிலின் விநோத வழிபாடுகள்:
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவில், மாமியார் கொடுமையால் இறந்து தெய்வமாக மாறிய நீலகேசி அம்மனை வணங்கும் 700 ஆண்டுகள் பழமையான வழிபாட்டுத் தலமாகும். இங்கு பங்குனி மாதத்தில் 10 நாள் திருவிழா நடைபெறும், அதில் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அந்தரத்தில் தூக்கி அம்மனை வழிபடும் 'தூக்க நேர்ச்சை 'எனும் விநோத வழிபாடு நடைபெறும்.
மற்றொரு முக்கிய நிகழ்வாக கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கும். இது மருமகள்களை கொடுமைப்படுத்தும் மாமியார்களுக்கு தண்டனை வழங்க கோரும் விநோத வழிபாடாக நடத்தப்படுகிறது.கோயிலுக்கு எதிரேயுள்ள பாக்குமர தோப்பில் இருக்கும் ஒரு கமுகு மரத்தின் (பாக்கு மரம்) மூட்டில் பூஜைகள் செய்து, பின் அந்த மரத்தை வேரோடு பெயர்த்து எடுத்துக் கொண்டுவருவார்கள்.
அதன் வேர் பகுதியை மாமியார்கள் அணியும், மேல் பகுதியை மருமகள்கள் அணியும் (இவர்கள் அம்மன் அணியினர்) சேர்ந்து இரு அணிகளுக்கும் இடையே இழுக்கும் போட்டி நடைபெறும்.எப்போதும் மருமகள்கள் அணி தான் வென்றதாக அறிவிக்கப்படும்.வெற்றி பெற்ற கமுகு மரத்தைக் கோயில் முன் நட்டு வைப்பார்கள். பின்னர் மரத்தின் கொண்டைப் பகுதியில் தீ வைத்து எரிப்பர். இது மருமகள் தனது மாமியாரையும் அவள் குடும்பத்தையும் வேரோடும் வேரடி மண்ணொடும் அழித்ததன் அடையாளம் எனத் தலவரலாறு கூறுகிறது.
வித்தியாசமான பூசாரி நடைமுறை:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் கருமாத்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவில் அருள்மிகு கடசாரி நல்ல குரும்பர் (நல்லகுரும்பன்) கோவில் ஆகும். பிரம்மனின் அம்சமாகக் கருதப்படும் இக்கோவில், இப்பகுதி மக்களின் முக்கிய குலதெய்வமாகவும், கள்ளர் நாடுகளின் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமாகவும் விளங்குகிறது.
இங்கு சுவாமிக்கு 'மரிக்கொழுந்து ' தவிர வேறு மாலைகள் அணிவிப்பதில்லை. பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் அறவே ஆகாது. சந்தனம் குங்குமம் கொண்டு வரக்கூடாது. விபூதி மட்டுமே. இங்குள்ள பூசாரி காவி உடையும், காதில் கடுக்கனும் அணிந்திருப்பார்.
இங்குள்ள பூசாரிகளுக்கு சில கட்டுபாடுகள் உண்டு இவருக்கு குழந்தை பிறந்தால் அதை 30 நாட்களுக்கு பார்க்க கூடாது. துக்க வீட்டில் நுழையக்கூடாது. பெற்றோர் இறந்தாலும் போய் பார்க்கக்கூடாது.
மனைவியின் மாதவிடாய் சமயத்தில் இவரே தனித்து சமையல் செய்து சாப்பிட வேண்டும். புதிய பூசாரிகளை வித்தியாசமான முறையில் தேர்வு செய்வர்.பூசாரிக்கு போட்டியிட பிரம்மச்சாரிகளே களத்தில் இருப்பர்.பெரிய பூசாரி பிரம்பை சுற்றி விடுவார். அது யார் மேலே விழுகிறதோ அவரே பூசாரி.
45 நாட்கள் வீட்டுக்குச் செல்லாத கோயில் காவலாளி:
திருவண்ணாமலைக்கு கிழக்கில் 25 கிமீ தொலைவில் உள்ளது. அண்டம்பள்ளம் எனும் ஊர்.இங்குள்ளது வேம்புலியம்மன் கோயில். ஏவல், பில்லி, சூனியம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தரும் கோயில். இங்கு சித்திரை மாதம் முதல் வெள்ளி அல்லது செவ்வாய் கிழமையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில் திருவிழா நடக்கும். இந்த திருவிழாவிற்கு காப்பு கட்டிய பிறகு ஊருக்குள் எவரும் கருப்பு நிற அணிய மாட்டார்கள். அதே போல நோய் வாய்ப்பட்டவர்கள் மற்றும் தீட்டுக்காரர்களும் 15 நாட்களுக்கு ஊரில் இருக்கக் கூடாது என்பது நடைமுறை.
திருவிழாக் காலங்களில் கோயிலிலேயே இருக்கும் பூசாரி.திருவிழா நிறைவுற்றதும் தான் வீடு திரும்புவார். ஆனால் கோயில் காவலாளி மட்டும் அடுத்த 45 நாட்கள் வீட்டுக்குச் செல்லக்கூடாது, மனைவியின் முகத்தை பார்க்கக் கூடாது என்பது ஐதீகம். அந்த 45 நாட்களும் காவலாளிக்கு தினமும் ஒரு வீட்டில் இருந்து சாப்பாடு வழங்குவார்கள். 45 வது நாள் ஊர் பெரியவர் வீட்டில் இருந்து உணவு வழங்குவதுடன் புதிய துணிமணிகள் எடுத்து கொடுத்து ஊரே திரண்டு வந்து கோயில் காவலாளியை வீட்டிற்கு வழியனுப்பி வைப்பார்கள்.
கிறிஸ்தவர் பூஜை செய்யும் இந்து கோயில்:
சிவகங்கை மாவட்டம், சருகனி பகுதியில் உள்ள திருத்தி கருப்பையா (கருப்பண்ணசுவாமி) கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கிராமக் காவல் தெய்வமாகும். இந்த ஆலயம் இப்பகுதி மக்களின் குலதெய்வமாகவும், வேண்டுதல்களை நிறைவேற்றும் சக்தி வாய்ந்த தலமாகவும் விளங்குகிறது. காளையார்கோவில் அருகே உள்ள சருகனி பகுதியில் சருகனி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் கருப்பையா (கருப்பண்ணசுவாமி) கையில் வீச்சரிவாள், நீண்ட முறுக்கிய மீசை மற்றும் கம்பீரமான தோற்றத்துடன் அருள்பாலிக்கிறார்.
இந்த கோயிலுக்கு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் பூசாரியாக இருந்து பூஜைகள் செய்து வருகின்றனர். இத் திருக்கோயில் தோன்றிய காலத்தில் இருந்தே கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள்தான் பூசாரிகளாக இருக்கிறார்களாம். முஸ்லீம் மதத்தினரும் இங்கு வந்து வணங்கிச் செல்கின்றனர். அநீதிகளை கேட்க இக்கோயிலில் காசு வெட்டிப்போட்டால் உடனடியாக தீர்வு ஏற்படுவதாக இங்கு நம்புகின்றனர்.
இந்தத் தொகுப்பின் மூலம் தமிழகத்தின் மறைக்கப்பட்ட கிராமிய வழிபாட்டு முறைகளின் ஆன்மீக மற்றும் சமூகப் பின்னணியை நீங்கள் ஆழமாகப் புரிந்துகொள்வதோடு, நம் மண்ணின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார விநோதங்களை மற்றவர்களோடு பெருமையுடன் பகிர்ந்துகொள்ளும் அரிய அறிவைப் பெறுவீர்கள்.