தஞ்சை அருகில் மகாசிவராத்திரியுடனும் மகா பிரளய கால வரலாறுகளுடன் தொடர்புடைய நான்கு தலங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தலத்தில் சிவபெருமானை வழிபடுவது அளவற்ற நற்பலனைத் தரும்.
ஒரு யுகத்தின் முடிவில் உயிரினங்கள் அழிந்தன மும்மூர்த்திகளும் மாயை வசப்பட்டுச் செய்வதறியாது திகைத்து பரம்பொருளைத் துதித்தனர். பரம்பொருள் அவர்களின் வேண்டுதலுக்கு இசைந்து தேவியுடன் ஒரு இடத்தில் தோன்றினார். ஒரு பிரம்மாண்டமான நீரில் மூழ்காத திட்டுப் பகுதியும் தோன்றியது. அதில் ஜோதி மயமாக இருளை அகற்றும் சிவலிங்கம் தரிசனம் தந்தது. ஓடத்தில் வந்த இறைவனும் இறைவியும் மும்மூர்த்திகளிடம் இருந்த மாயையை அகற்றி வேத வேதாந்த அறிவை அவர்களுக்கு அளித்தனர். அத்துடன் படைத்தல் காத்தல் அழித்தல் எனும் முத்தொழில்களையும் அவர்கள் செய்ய அருள் புரிந்தார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு மகாசிவராத்திரியில் முதல் காலத்தில் நடைபெற்றது எனவே மகா சிவராத்திரி முதல் காலத்தில் வழிபட வேண்டிய ஆலயம் தஞ்சை அருகில் உள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில்
இன்னொரு மகா பிரளயம் பிரம்ம அச்சத்தில் மயங்கி விழுந்தார் அப்போது ஹயக்ரீவன் என்னும் அரக்கன் பிரம்மனிடம் இருந்த படைப்புக்கு ஆதாரமான நான்கு வேதங்களையும் திருடிக் கொண்டு கடலுக்கு அடியில் மறைந்தார். பிரம்மன் வேண்டுகோளுக்கு ஏற்ப பரந்தாமன் மச்ச உருவம் (மீன்) எடுத்து அரக்கனை அழித்து வேதங்களை மீட்டார். ஆனால் அசுரனைக் கொன்ற தோஷத்தின் காரணமாக அவரால் சுய உருவை அடைய முடியவில்லை தேவராயின் பேட்டையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து ஒரு சிவராத்திரியின் இரண்டாவது காலத்தில் பூஜை செய்து வழிபட்டு தோஷம் நீங்கிய பரந்தாமன் சுய உருவம் அடைந்தார் எனவே மகா சிவராத்திரியின் இரண்டாவது காலத்தில் வழிபட வேண்டிய தலம் தேவராயின் பேட்டை மச்சபுரீஸ்வரர் ஆலயம்.
ராமனை யுத்தத்தில் பலரைக் கொல்ல நேர்ந்ததால் ராமபிரானுக்குத் தோஷம் ஏற்பட்டது எனவே ராமேஸ்வரத்தில் பூஜை செய்தவர் சீதை லட்சுமணன் அனுமனுடன் கீழ்த்திசை நோக்கி வந்தார். பாபநாசம் அருகில் வந்தபோது கரன் தூஷன் என்ற இரண்டு அரக்கர்களை வதம் செய்த தோஷம் மட்டும் இன்னும் தன்னை விட்டு விலகாமல் இருப்பதை உணர்ந்தார் அந்த தோஷம் விலகச் சிவராத்திரி நாளில் சிவபூஜை செய்வது அவசியம் என்பதை உணர்ந்தவர் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வருமாறு அனுமனை அனுப்பினர். அனுமன் வருவதற்குள் சீதாப்பிராட்டியார் ஆற்று மணலில் அமர்ந்து விளையாட்டாகச் சிவலிங்கங்களைச் செய்தார். அனுமன் வரக் கால தாமதமாகவே ராமபிரான் சீதாதேவி உருவாக்கிய 107 சிவலிங்கங்களையும் பிரதிஷ்டை செய்து பூஜிக்கத் தொடங்கினார். அதற்குள் சிவராத்திரியின் மூன்றாவது காலம் வந்துவிட்டது அனுமன் பல தடைகளைத் தாண்டி வருவதற்குள் ராமபிரான் பூஜையைத் தொடங்கிவிட்டார். ஆனாலும் அனுமனிடம் அனுதாபம் கொண்டு ராமபிரான் 107 சிவலிங்கங்களுடன் அனுமன் கொண்டு வந்த லிங்கத்தை 108 ஆவதாகப் பிரதிஷ்டை செய்தார் 107 சிவலிங்கங்களையும் தரிசனம் செய்து கடைசியாக அனுமன் காசியிலிருந்து கொண்டு வந்த 108 வது லிங்கத்தையும் தரிசனம் செய்தால் 108 சிவாலயங்களைத் தரிசித்து தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்று அருளினார். அவருடைய சிவராத்திரி மூன்றாவது காலத்தில் வழிபட வேண்டிய தலம் பாபநாசம் ஆகும்.
வேடன் ஒருவனின் விதிப்படி அவனுடைய ஆயுள் அன்று முடிய வேண்டும். இந்நிலையில் அவன் வேட்டையாடத் துரத்திய மான் ஒன்று தப்பி வில்வனேஸ்வரர் ஆலயத்திற்குள் நுழைந்தது. அங்கே தவம் செய்து கொண்டிருந்த தவநிதி முனிவர் மானுக்கு அபயம் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வேடன் முனிவரைத் தாக்க முயற்சிதான் முனிவர் சிவனைப் பிரார்த்திக்க இறைவன் ஒரு புலியை ஏவி வேடனை துரத்தினார்.
புலிக்குப் பயந்த வேடன் ஒரு வில்வ மரத்தின் மீது ஏறினான். புலியும் அவ்விடத்தை விட்டு நகரவில்லை வேடனைப் பசியும் மயக்கமும் வாட்டியது .மயங்கி கீழே விழுந்துவிட்டால் புலி அடித்துத் தின்று விடுமே என்ற எண்ணத்தில் அந்த மரத்திலிருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பிய்த்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தான் அந்த மரத்தின் கீழ் முனிவர் பூஜை செய்த சிவலிங்கம் இருந்தது. அன்றைய தினம் மகா சிவராத்திரி அதனால் வேடனுக்கு வில்வ இலைகளினால் சிவபெருமானை அர்ச்சித்த புண்ணியம் கிடைத்தது .மகாசிவராத்திரி நான்காவது காலம் நிறையும் வேளையில் வேடனின் ஆயுள் முடிய வேண்டும். மகா சிவராத்திரியில் ஊண் உறக்கமின்றி வேடன் வழிபட்ட புண்ணியத்தால் இறைவன் கோலுடன் தோன்றி எமனை விரட்டினார் .வேடனுக்கு மோட்சம் அளித்தார் .சிவராத்திரியில் நான்காவது காலத்தில் வழிபட வேண்டிய தலம் திருவைக்காவூர் தலமாகும்.