

ஒவ்வொரு ஆண்டும் ஆன்மிக ஈடுபாடு என்பது மக்களின் மனங்களில் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. நடப்பு 2025ம் வருடத்திலும் ஏராளமான ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்று மக்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளன. இறுதி நாட்களை எட்டும் இந்த ஆண்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், உலக அளவில் சில ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்று, அவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அதுபோன்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்த 5 ஆன்மிக நிகழ்வுகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
1. பிரக்யாராஜ் மஹா கும்பமேளா: உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மஹா கும்பமேளா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரக்யாராஜில் நடைபெற்றது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுவது வாடிக்கை. ஆனால், மகா கும்பமேளா 144 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இந்த அரிய ஆன்மிகத் திருவிழா. இதில் உலகில் உள்ள பக்தர்கள், சாதுக்கள், அகோரிகள் உள்பட ஏராளமான ஆன்மிகவாதிகள் கலந்து கொண்டனர். இதுவரை வரலாற்றில் ஒரு ஆன்மிக நிகழ்வில் 66 கோடி மக்கள் கலந்து கொண்டது இதுவே முதல்முறை. இந்த சாதனையை அவ்வளவு எளிதில் முறியடித்து விடவும் முடியாது. இந்த ஆன்மிக சங்கமம் ஜனவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற்றது.
2. அயோத்தி ஶ்ரீராமர் கோயில் கொடியேற்றம்: அயோத்தி ஸ்ரீராமர் கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் எப்போதும் உலகின் கவனத்தை ஈர்க்கக் கூடியவையாக உள்ளன. புதிதாக ஸ்ரீராமர் கோயில் கட்டப்பட்டதிலிருந்து, ஒவ்வொரு தீபாவளி அன்றும் அங்கு மில்லியன் கணக்கில் விளக்கேற்றப்பட்டு உலகின் கவனத்தை ஈர்க்கிறது. இந்த முறை கோயிலில் அனைத்து கட்டடப் பணிகளும் நிறைவடைந்ததால், புனிதக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நவம்பர் 25 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கோயிலின் கொடியை ஏற்றியதால், இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஏராளமான தாக்கங்களை ஏற்படுத்தியது.
3. பூரி ஜெகந்நாதர் கோயில்: ஒடிசா மாநிலம், பூரியில் உள்ள ஜெகநாதர் கோயில், எப்போதும் ஆன்மிக நிகழ்வுகளுக்கு உலக புகழ்பெற்றது. ஒவ்வொரு வருடமும் ஜெகநாதர் ரத யாத்திரை இந்தியாவில் அதிக மக்கள் கூடும் திருவிழாக்களில் ஒன்றாக உள்ளது. இந்த ஆண்டு ரத யாத்திரையை தாண்டி கோயிலில் ஆச்சரியமான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. ஜெகநாதர் கோயில் விமானத்தில் தினசரி கொடியேற்றும் நிகழ்வு ஒரு அதிசயத்தக்க நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. இந்நிலையில், அந்தக் கொடியை கருடன் ஒன்று எடுத்துச் சென்றது. கருடனின் இந்த செயலை பலரும் வீடியோவாக எடுத்த சமூக ஊடகங்களில் பதிவிட்டு இருந்தனர். ஒருசிலர் இதை ஜெகநாதரின் செயலாகவும், இது ஒரு நல்ல சகுனமாகவும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், வேறு சிலரோ இது ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
4. கோவாவின் உயரமான ஸ்ரீராமர் சிலை திறப்பு: கோவாவின் பர்தகாலி பகுதியில் ஸ்ரீ சமஸ்தான கோகர்ண ஜீவோட்டம் மடம் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக ஆன்மிகப் பணிகளை ஆற்றி வரும் இந்த மடம் தனது 550 ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாகக் கொண்டாட எண்ணியது. அதற்காக 77 அடி உயரத்தில் வெண்கலத்தில் ஶ்ரீராமர் சிலையை நிறுவியிருந்தனர். இந்த சிலையை நவம்பர் 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். உலகிலேயே மிகவும் உயரமான ராமர் சிலையாக இந்த சிலையே இருக்கிறது.
5. கனடாவின் உயரமான ஸ்ரீராமர் சிலை திறப்பு: வட அமெரிக்காவின் மிக உயரமான ராமர் சிலை, கனடாவில் உள்ள மிசிசிகாவில் ஆகஸ்ட் 3ம் தேதி திறக்கப்பட்டது. நான்கு வருடங்களுக்கு முன்னர் கனடாவில் வாழும் இந்து சமூகத்தினர் உயரமான ஸ்ரீராமர் சிலையை நிறுவ திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். இதன் பாகங்கள் இந்தியாவில் ஸ்டீலினால் தயாரிக்கப்பட்டு, கனடாவில் ஒன்றிணைக்கப்பட்டது. 51 அடி உயர இந்த சிலை, 200 கி.மீ. வேகத்தில் வீசும் புயலையும் தாங்கும் வகையிலும், 100 ஆண்டு காலம் நிலைத்திருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.