
கவசம் என்பது நம் உடலின் பாதுகாப்பிற்காக அணியப்படும் ஒரு வலிமையான போர்வை எனலாம். துர்கா தேவியின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கப் பாடப்படும் ஒரு கீர்த்தனையே துர்கா கவசம் ஆகும். இதை தினசரி பாடித் துதிக்கும் பக்தர்களை கவசம் போல் காத்தருள்வாள் தேவி. பக்தர்களுக்குக் கிடைக்கக்கூடிய முதன்மையான 5 வகை நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. மார்கண்டேய புராணத்திலிருந்து கிடைக்கப் பெற்ற இம்மந்திரங்களைக் கூறி வருவோர்க்கு நல்ல ஆரோக்கியம், மனத்தெளிவு, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு கிடைப்பது உறுதி. ஜோதிட சாஸ்திரத்தின்படி சனி, ராகு மற்றும் கேது ஆகிய மூன்று கிரகங்களும் ஒரு மனிதரின் வாழ்வில் எதிர்மறை சக்திகளின் தாக்கத்தை மிகவும் வலுவாக உண்டுபண்ணக் கூடியவை. துர்கா கவசத்தை தினசரி கூறி வருபவருக்கு, இந்த மூன்று கிரகங்களினால் எந்த வகையான தீய விளைவுகளையும் உண்டு பண்ண முடியாது. குறைந்தபட்சம் ஏற்படக்கூடிய தீய விளைவுகளின் அளவை கணிசமாகக் குறைக்கவும் முடியும்.
2. துர்கா கவசத்தை அனுதினமும், ஆத்மார்த்தமாகக் கூறி வருபவர்களிடம் உள்ள சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவை நீங்கும் எனவும், அவர்கள் அனுபவித்து வரும், வேறு கிரகங்கள் உண்டாக்கிய வெவ்வேறு வகையான கஷ்டங்களும் குறைவதற்கு வாய்ப்புண்டு எனவும் நம்பப்படுகிறது.
3. ஒருவரின் ஜாதகப்படி கிரகங்கள் அனுகூலமான இடத்தில் அமையாதிருக்கும்போது, அவரின் உடல்நிலையில் பாதிப்பேற்படக் கூடும். நோயின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பார். அந்த மாதிரியான சூழ்நிலையில் அவர் துர்கா கவசத்தை தினமும் கூறி வருவாராயின், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். உடலில் சக்தியும் தைரியமும் அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலுவடையும். நம்பியவர்களை ஒரு நாளும் கைவிட மாட்டாள் காத்யாயனி.
4. சுக்ரன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் தாக்கத்தால் சிலரின் காதல் மற்றும் கல்யாணம் போன்ற விஷயங்களில் தடங்கல்களும் பாதிப்பும் உண்டானபடியே இருக்கும். அவர்கள் தினமும் துர்கா கவசத்தை பக்தியுடன் படித்து வந்தால், கிரகங்கள் உண்டுபண்ணும் எதிர்மறை சக்திகளெல்லாம் தவிடு பொடியாகி, அவர்களின் வாழ்வில் அமைதியும், ஒற்றுமையும் ஓங்கி வளர்ந்து, அனைவருடனுமான உறவு செழித்து வளரும்.
5. ஏழரை சனி மற்றும் சனி பெயர்ச்சி போன்றவை உங்கள் ஜாதக பலன்கள் மீது குறுக்கிட்டு தீங்கு விளைவிக்கும்போது, துர்கா கவசம் உங்களைப் பாதுகாத்து, நீங்கள் பலவீனமடையாமல் இருக்கச் செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. துர்கா கவசத்தை நாள்தோறும் கூறி வரும் பக்தர்கள், சனி பகவானின் தாக்கத்திலிருந்து விடுபட்டு, பிரச்னையின்றி வாழ்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நவராத்திரி போன்ற நல்ல நாட்களில் மட்டுமின்றி, தினந்தோறும் துர்கா கவசத்தை பாராயணம் செய்து வாழ்வில் துன்பமின்றி வாழ்வோம்.