
ஐப்பசி மாதம் வரும் மகா கந்த சஷ்டி விரதத்தில் முருக பக்தர்கள் முருகனின் அருளைப் பெறுவதற்காகவும், வாழ்வில் ஏற்படும் இடர்களையும், பிரச்னைகளையும் தீர்க்க வேண்டிய பிரதமை துவங்கி, சஷ்டி வரை மிகவும் கடுமையாக விரதம் இருந்து முருகனின் அருளைப் பெறுவார்கள். கந்த சஷ்டியில் மேற்கொள்ளப்படும் சில விரதங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தண்ணீர் விரதம்: தண்ணீர் விரதத்தில் நாள் முழுவதும் தண்ணீரை மட்டும் குடித்து விட்டு விரதம் இருப்பது ஒரு முறையாகும்.
திரவ விரதம்: இந்த திரவ விரதத்தில் பால் மட்டுமல்லாமல், தண்ணீர், பழச்சாறுகள் போன்ற திரவ உணவுகளை ஆறு நாட்களும் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
மிளகு விரதம்: கந்த சஷ்டி விரதத்தை மிகக் கடுமையாகக் கடைப்பிடிப்பவர்கள் இந்த மிளகு விரதத்தை மேற்கொள்வார்கள். இதில் முதல் நாள் ஒரு மிளகு, அடுத்த நாள் இரண்டு மிளகு என்று ஆறாவது நாள் ஆறு மிளகு என்று ஆறு நாட்கள் வரை மிளகை மட்டுமே சாப்பிட்டு தண்ணீர் குடித்து விரதம் இருப்பார்கள்.
பால் விரதம்: இந்தப் பால் விரதத்தை அனேகமாக நிறைய பேர் இருப்பார்கள். இதில் காலையும் மாலையும் பாலை மட்டும் குடித்துவிட்டு விரதம் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.
பால், பழ விரதம்: இந்த விரதத்தில் பாலும் பழமும் மட்டும் எடுத்துக் கொண்டு முருகனை நினைத்து சஷ்டி விரதம் மேற்கொள்வார்கள்.
இளநீர் விரதம்: கந்த சஷ்டி நடைபெறும் ஆறு நாட்களும், அதாவது சூரசம்காரம் நடைபெறும் வரை தண்ணீர் மற்றும் இளநீரை மட்டும் ஆறு நாட்களும் குடித்து விரதம் இருப்பவர்கள் ஏழாவது நாள் பூஜை முடித்த பின்பு வழக்கம் போல் சாப்பிடலாம்.
கந்த சஷ்டி நாளன்று தேனும் திணை மாவும், கோதுமை கேசரி, பருப்பு பாயசம், பால் பழங்கள் என தினம் ஒன்றாக முருகனுக்கு நைவேத்தியம் செய்யலாம்.
விரதம் இருக்க உடல்நிலை ஒத்துக் கொள்ளாதவர்கள் ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பார்கள். அது கந்த சஷ்டி ஆறாவது நாள் சூரசம்ஹாரத்தன்று காலையில் இருந்து மாலை வரை உபவாசம் இருந்து, பால் பழங்களை மட்டும் எடுத்துக்கொண்டு சிறிது தண்ணீரும் அருந்துவார்கள். சூரசம்ஹாரம் முடிந்த பின்பு குளித்து முருகனின் திருவுருவப் படத்திற்கு முன்பு ஆறு தீபங்கள் ஏற்றி நைவேத்தியம் செய்து விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.
ஆறு வகையான சாதங்கள் செய்து சர்க்கரைப் பொங்கல், புளியஞ்சாதம், தயிர் சாதம், எலுமிச்சம் பழ சாதம், கற்கண்டு சாதம், தேங்காய் சாதம் என செய்து நைவேத்தியம் செய்து பிறருக்கும் கொடுத்து தானும் உண்ண வேண்டும். விரதத்தை முடித்தவுடன் சஷ்டியின் கடைசி நாளில் பால் அல்லது பழம் அல்லது ஏதாவது ஒரு உணவை தங்களால் முடிந்தவற்றை மற்றவர்களுக்கு தானமாகக் கொடுக்கலாம்.