
புத்தி காரகன் புதன் பகவான் ஆவார். புதன் என்றால் பச்சை. பொதுவாக பச்சை நிறத்தைப் பார்க்கும்போது மன அமைதி ஏற்படும். கண்களுக்குக் குளிர்ச்சி ஏற்படும் என்று சொல்வார்கள். அதனால்தான் பசுமையான இடத்திற்கு ஒரு பாசிடிவ் எனர்ஜி இருக்கிறது. இந்த புதன் பகவானுக்குரிய கடவுள் பெருமாள். வீட்டில் கல்வி பயிலும் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க எளிமையான சில ஆன்மிகம் சார்ந்த விஷயங்களைப் செய்தாலே போதும், அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
புதன் கிழமைகளில் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோயிலுக்குச் செல்ல வேண்டும். பச்சை நிற துளசியை பெருமாளுக்கு சாத்தி உங்கள் பிள்ளையின் பெயரில் அர்ச்சனை செய்யலாம். நவகிரக சன்னிதானத்தில் புதன் பகவான் இருப்பார். புத பகவானுக்கு இரண்டு விளக்கேற்றி வழிபாடு செய்வது நல்லது வாரம் தோறும் மேற்கூறிய வழிபாட்டை செய்தால் பிள்ளைகள் நிச்சயம் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பிள்ளைகளையும் கோயிலுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
ஒவ்வொருவர் வீட்டிலும் பித்தளை பாத்திரம் இருக்கும். ஆனால், அதை புழங்குவதில்லை. பித்தளைப் பாத்திரத்திற்கு அதிபதி புத பகவான். பித்தளைப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி குடிக்க வேண்டும். பித்தளைப் பாத்திரத்தில் சமைத்தால் ஆரோக்கியம் பெருகும். உடல் ஆரோக்கியத்துடன் சேர்ந்து புத பகவானும் சிறப்பாக செயல்படுவார். அறிவு சார்ந்த விஷயங்களும் மேம்பட்டு கல்வி சிறக்கும்
உங்களுடைய வீட்டில் வெள்ளித் தட்டு, டம்பளர், ஸ்பூன் இருந்தால் பயன்படுத்துங்கள். குழந்தைகளுக்கு வெள்ளி டம்ளரில் தண்ணீர் கொடுத்து வெள்ளித் தட்டில் சாப்பிட வையுங்கள். இது போன்ற பழக்கங்களும் கல்விச் செல்வத்தை உயர்த்தும்.
அதேபோல், கடைகளில் கிடைக்கும் செம்புத் தகடை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் எதுவும் எழுதக் கூடாது. சின்னதாக இருக்கக்கூடிய செம்புத் தகடை பிள்ளைகள் புத்தகப் பையில் வைத்தால் அவர்களுடைய படிப்பறிவு மேம்படும் என்று நம்பப்படுகிறது. இதை அவர்களின் ஜாமெண்டரி பாக்சிலும் வைக்கலாம்.
கேதுவுக்கு பரிகாரம்: கேது கிரக நிலை சரியில்லாமல் இருந்தால் பிள்ளைகளுக்குப் படிப்பு ஏறுவது கடினம். கேதுவுக்கு உரிய தானியம் கொள் ஆகும். இதற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் கேது பகவானுக்கு கொள்ளை படைத்து பரிகாரம் செய்வது நல்லது.
திசை: பிள்ளைகளை எப்போதும் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி படிக்கச் செய்வதால் நேர்மறை ஆற்றல் கிடைக்கும். படிக்கும்போது ஜன்னலுக்கு நேரே உட்கார வேண்டாம். நேரடிக் காற்றின் வேகமாக கவனச்சிதறல் ஏற்படுத்தும்.. இரவு நேரத்தில் அதிக நேரம் கண் விழித்து படிப்பதைத் தவிர்த்து பிரம்ம முகூர்த்தத்தில் படிக்க வைப்பது சிறந்தது. இந்த நேரத்தில் படிப்பது நினைவில் நிற்கும்.