ஆகஸ்ட் 18 அன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சுகர் லேண்டில் புகழ் பெற்ற ஶ்ரீ அஷ்டலட்சுமி கோவில் வளாகத்தில் 90 அடி உயரம் கொண்ட ஹனுமானின் வெண்கல சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலையானது தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உருவாக்கப்பட்டு பின்னர் டெக்சாஸ் அனுப்பப்பட்டது.
இந்த ஹனுமான் சிலை அமெரிக்காவின் புதிய அடையாளமாக உள்ளது. அமெரிக்காவில் 151 அடி உயரமுள்ள சுதந்திர தேவி சிலை முதல் இடத்திலும் புளோரிடாவில் 110 அடி உயரம் கொண்ட பெகாசஸ் டிராகன் சிலை இரண்டாம் இடத்திலும் மூன்றாவது இடத்தில் புதிய அனுமான் சிலையும் உள்ளது. இந்தச் சிலை பல கிமீ தூரத்திற்கு இருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியும் வண்ணம் உள்ளது.
இந்த ஹனுமான் சிலை பெரிய தாமரை வடிவ பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் பெரிய அணில் சிலை ஹனுமனை வணங்கும்படி உள்ளது. இந்த பீடத்தின் கிழே இரு பெரிய யானை சிலை அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஹனுமான் தனது கையில் காதாயுதத்தை தூக்கியபடி காட்சி அளிப்பார். ஆனால் இந்த சிலையில் இரண்டு கைகளாலும் பக்தர்களை ஆசீர்வதிக்கும் படி இருக்கிறார்.
பிரான பிரதிஷ்டை தொடர்பாகக் கோயில் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"இந்த பிரமிக்க வைக்கும் சிலை, பத்ம பூஷன் விருது பெற்றவரும் புகழ்பெற்ற வேத அறிஞருமான ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிஜி எடுத்த முன்னெடுப்பால் கட்டப்பட்டது. வட அமெரிக்காவின் மிக உயரமான ஹனுமான் சிலை, வலிமை, பக்தி மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் உருவகமாக இருக்கிறது. இராமாயணத்தில் ஸ்ரீ ராமரை சீதையுடன் இணைத்ததன் ஞாபகமாக இருக்கும் வகையில் இந்த ஹனுமன் சிலைக்கு ஒற்றுமை சிலை (Statue of Union) என்று பெயர் வைத்துள்ளனர். இந்த ஹனுமான் சிலை திறப்பு 'அமெரிக்காவின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தில் ஒரு புதிய மைல்கல்' ஆக இருக்கும். இது வட அமெரிக்காவில் மிக முக்கியமான இடமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த ஆகஸ்ட் 15 முதல் 18 வரை நடைபெற்ற பிரம்மாண்டமான மூன்று நாள் பிராண பிரதிஷ்டை விழாவின் போது சிலை திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஹெலிகாப்டர் மூலம் சிலை மீது மலர் தூவி, புனித நீர் தெளிக்கப்பட்டது. 72 அடி நீள பிரம்மாண்டமான மாலை அனுமனின் கழுத்தில் அணிவிக்கப்பட்டது. பக்தர்களின் ஜெய் ஶ்ரீராம், ஜெய் பஜ்ரங் பலி கோஷம் விண்ணை முட்டியது. இதற்கு முன்னர் 2020 இல் டெலாவரில் அமைக்கப்பட்ட 25 அடி உயர ஹனுமான் சிலை தான் அமெரிக்காவில் உயரமான ஹனுமான் சிலையாக இருந்தது.