

வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமென்றால், உடனடியாக உங்கள் வீட்டில் ஒரு துளசி செடியை வைத்து பராமரிக்கத் தொடங்குங்கள். சனாதன தர்மத்தின்படி துளசி என்பது ஒரு சாதாரண தாவரம் அல்ல, அது மகாலட்சுமியின் ஒரு அம்சம். ‘எந்த வீட்டில் பசுமையான துளசி மாடம் இருக்கிறதோ, அங்கு துயரங்கள் நிழலாடுவதில்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. உங்கள் வாழ்க்கையில் நிலவும் பொருளாதாரத் தடைகள் அனைத்தையும் நீக்கவும், உங்கள் மனதில் அமைதியை நிலைநிறுத்தவும் துளசி செடியை வழிபடத் தொடங்குங்கள்.
மாலை நேரத்தில் விளக்கு: சாஸ்திரங்களின்படி மகாலட்சுமி பெரும்பாலும் வீட்டில் நுழையும் நேரமாக மாலை வேளை கூறப்படுகிறது. அந்த நேரத்தில் துளசி மாடத்தின் கீழ் பசு நெய் அல்லது நல்லெண்ணையில் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் மகாலட்சுமி தாயாரை வீட்டில் வரவேற்பதாக இருக்கிறது. மேலும், தீபத்தின் நல்ல மனமும் செல்வத்தை வீட்டிற்குள் ஈர்க்கிறது. அந்த ஒளியின் பிரகாசத்தில் மகாலட்சுமி தாயார் உங்கள் இல்லத்திற்குள் நுழைவார். இதனால் கிரக தோஷங்கள் விலகி, வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
மங்கலப் பொருட்கள் ஆபரணம்: துளசி மாடம் என்பது ஒரு கோயிலுக்கு சமமாகக் கருதப்பட வேண்டும். அதனால் துளசி மாடத்தை சுற்றி எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினமும் துளசி மாடத்தின் கீழே அழகிய மாக்கோலம் போட வேண்டும். துளசி மாடத்திற்கு வெள்ளை நிற வண்ணம் பூசி அதன் மேலே மஞ்சள் குங்குமம் போன்றவற்றை இடவேண்டும். துளசி செடிக்கும் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும்.
துளசி செடிக்கு வளையல் போன்ற ஆபரணங்களை சூட்டுவது, பூக்களை சமர்ப்பிப்பது போன்ற செயல்கள், அந்த வீட்டுப் பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாக ஏதுவாக அமையும். துளசி செடிக்கு சிறிய அளவில் மஞ்சள் அல்லது சிவப்பு நிற துணியினை கட்டி வழிபாடு செய்வது சிறந்தது. துளசிச் செடியில் மஞ்சளை தேய்த்த மஞ்சள் நிற கயிறு கட்டினால் அந்த வீட்டில் விரைவில் திருமண யோகம் கூடி வரும். அதேபோல், துளசி செடியில் சிவப்பு நிற கயிறை கட்டினால் வீட்டில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும். வீட்டில் உள்ளவர்களுக்கும் தீய சக்தியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
துளசிக்கு உகந்த தினங்கள்: செவ்வாய், வியாழன், வெள்ளி போன்ற தினங்கள் புனித துளசிக்கு உகந்த நன்னாளாக இருக்கின்றன. செவ்வாய் எப்போதும் மங்கலகரமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாள் எந்த ஒரு இறைவனையும் வழிபட சிறந்த நாளாக இருக்கிறது. வியாழக்கிழமை மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாள். அந்த நாளில் துளசியை வழிபடுவது இரட்டிப்பான பலனைத் தரும். துளசியை வழிபடுவதால் மகாவிஷ்ணுவின் ஆசியும் கிடைக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உரிய நாள். அந்த நாளில் விளக்கேற்றி, ஊதுபத்தி ஏற்றி, சாம்பிராணி புகையிட்டு வழிபடுவது அதிக பலனைத் தரும்.
படையல்: ஒவ்வொரு மாதமும் வரும் பஞ்சமி திதி அன்று துளசி செடிக்கு கரும்பு சாறு, பானகம் அல்லது பால் போன்றவற்றை வைத்து படையில் இட்டால் தீராத கடன் பிரச்னைகள் அனைத்தும் தீரும். வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க இது ஒரு சக்தி வாய்ந்த பரிகாரமாக இருக்கிறது.
ஏகாதசி நாட்களில் துளசிச் செடியின் வேரில் காய்ச்சாத பசும் பாலை சிறிதளவு ஊற்றுவது உங்களின் தொடர்ந்து வரும் துரதிர்ஷ்டத்தை விரட்டும். வீட்டில் செல்வச் செழிப்பை அதிகரிக்கும். மகாவிஷ்ணுவின் பூரண ஆசியை பெற்றுத் தரும்.