செங்கற்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பாடல் பெற்ற தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகிறது. திருக்கழுக்குன்றத்திற்கு கழுகாசலம், நாராயணபுரி, பிரம்மபுரி, இந்திரபுரி, உருத்திரகோடி, நந்திபுரி மற்றும் பட்சி தீர்த்தம் என பல சிறப்புப் பெயர்களும் உண்டு.
திருக்கழுக்குன்றத்தில் பக்திக்கு தாழக்கோயில் ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர், ஸித்திக்கு ஸ்ரீருத்திர கோட்டீஸ்வரர், முக்திக்கு ஸ்ரீவேதகிரீஸ்வரர் என மூன்று பழைமையான சிவத்தலங்கள் அமைந்துள்ளன. திருக்கழுக்குன்றத்தில் வேதங்களே மலையாகத் திகழும் வேதகிரி மலையில் எழுந்தருளியுள்ள ஈசன், ஸ்ரீவேதகிரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அதுபோல, இங்கு புண்ணிய தீர்த்தமாக வணங்கப்படும் சங்கு தீர்த்தக் குளக்கரையினில் எழுந்தருளியுள்ள ஈசன், ஸ்ரீதீர்த்தகிரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்து ஈசனை மார்கண்டேய மகரிஷி பிரதிஷ்டை செய்துள்ளது சிறப்பு. இத்தலத்தில் அம்பாள் ஸ்ரீபிரபராம்பிகை என்ற திருநாமம் தாங்கி அருள்புரிகிறார். சங்கு தீர்த்தக் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீதீர்த்தகிரீஸ்வரர் தலத்தில் மழைக்காலங்களில் நீர் மட்டம் உயரும்போது ஸ்ரீதீர்த்தகிரீஸ்வரர் நீரில் மூழ்கிய நிலையில் காட்சியளிப்பார்.
தாழக்கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் திருக்கோயிலின் கிழக்கு கோபுரத்திற்கு எதிரில் அமைந்துள்ள சன்னிதி தெருவின் கடைசியில் அமைந்துள்ள சங்கு தீர்த்தத் திருக்குளம் மிகவும் புகழ் பெற்றது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குளத்தில் சங்கு பிறக்கும் அதிசயம் நடைபெறுகிறது.
பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்ட மார்கண்டேயர் ஒரு முறை திருக்கழுக்குன்றத்திற்கு வந்தார். குளத்தில் நீராடி சிவனுக்கு பூஜை செய்ய தண்ணீர் எடுத்துச் செல்ல பாத்திரம் இல்லாத காரணத்தினால் ஈசனை வேண்டினார். அப்போது ஈசனின் அருளால் ஒரு வலம்புரிச் சங்கு இக்குளத்திலிருந்து பிறந்து மேலே மிதந்து வந்தது. அந்த சங்கினைக் கொண்டு ஈசனை நீராட்டி வழிபட்டார் மார்கண்டேயர். இதன் காரணமாக இத்தீர்த்தம், ‘சங்கு தீர்த்தம்’ என்று பெயர் பெற்றது. அன்று முதல் இத்தீர்த்தத்திலிருந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தோன்றுவது வழக்கமாக உள்ளது.
உப்பு தன்மையுள்ள கடலில் மட்டுமே தோன்றக்கூடிய சங்கானது, இந்த நன்னீர் குளத்தில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தோன்றுவது அதிசய நிகழ்வாகும். கடந்த 1939, 1952, 1976, 1988, 1999ம் ஆண்டுகளில் இக்குளத்தில் சங்கு தோன்றியுள்ளது. கடைசியாக, செப்டம்பர் 1, 2011 அன்று தோன்றியது. பன்னிரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது சங்கு தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குரு பகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசி என பன்னிரண்டு ராசிகளைக் கடந்து மீண்டும் அதே ராசியைக் கடக்க பன்னிரண்டு ஆண்டுகளாகிறது. குரு பகவான் கன்னி ராசியைக் கடக்கும்போது திருக்கழுக்குன்றத்தில், ‘சங்கு தீர்த்த புஷ்கரமேளா’ கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் லட்ச தீபத் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. கடைசியாக, ஆகஸ்டு 2, 2016 அன்று சங்கு தீர்த்த புஷ்கரமேளா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
திருக்கழுக்குன்றத்தில் தாழக்கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் கோயிலுக்கு எதிர்திசையில் அரை கிலோ மீட்டர் தொலைவில் சங்கு தீர்த்தக்குளம் அமைந்துள்ளது.
செங்கற்பட்டிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து பதினான்கு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருக்கழுக்குன்றம். செங்கற்பட்டு, மாமல்லபுரம், திருப்போரூர் போன்ற இடங்களிலிருந்து திருக்கழுக்குன்றத்துக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.