நமது முக்கியமான பண்டிகைகளும் விசேஷ நாட்களும் தட்சிணாயன புண்ய காலத்தில்தான் இடம் பெறும். இந்த தட்சிணாயனம் மார்கழியோடு நிறைவுறுகிறது. மற்ற மாதங்களில் ஓரிரு நாட்கள் மட்டுமே இறைவனுக்கு உகந்த நாட்களாக இருக்கும். ஆனால், தனுர் மாதமான மார்கழியிலோ மாதம் முழுவதும் இறை வழிபாட்டுக்கு உரியதாகப் போற்றி வணங்கப்படுகிறது.
ஆன்மிகத்திற்கு என்று ஒரு மாதம் முழுவதும் சிறப்பு வாய்ந்தது என்றால் அது மார்கழிதான். மனிதர்களாகிய நாம் ஒரு வருடம் என்று சொல்வது தேவர்களுக்கு ஒரு நாளாகும். தை முதல் ஆனி வரையுள்ள மாதங்கள் பகலாகவும். ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் இரவாகவும் தேவர்களுக்கு இருக்கிறது. இதன்படி தேவர்களின் இரவுப் பொழுது முடிந்து வைகறைப் பொழுது மார்கழி மாதமாக விளங்குகிறது. நம்முடைய ஒரு வருடம் தேவர்களின் ஒரு நாள் என்று கூறும்போது. அந்த ஒரு நாளின் அதிகாலை (காலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை) பிரம்ம முகூர்த்தப் பகுதியாக மார்கழி மாதம் தேவர்களுக்கு விளங்குகிறது. இப்பேர்ப்பட்ட புனிதமான மார்கழி மாதம் நாளை (17.12.2023) பிறக்க உள்ளது.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் பனிப்பொழிவும் குளிரும் இருக்கும். ஆனால், அந்த அழகான அதிகாலையில்தான் நம் தமிழகப் பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு தத்தம் வீட்டு வாசலை சாணத்தால் மெழுகி பெரிய பெரிய கோலங்கள் போட்டு, அந்தக் கோலங்களில் நடுவில் ஒரு பூசணிப்பூவை அலங்காரமாக வைப்பார்கள். பொழுது விடியும் தருணத்தில் வீதி முழுதும் கண்களுக்கு ரம்யமான பெரிய பெரிய கலர் கோலங்களுடன் மார்கழி மாதமே களைகட்டும் என்றால் அது மிகையாகாது.
மார்கழி மாதம் அதிகாலையில் நகர சங்கீர்த்தனம் என்று பஜனைப் பாடல்கள் பாடிக்கொண்டே பக்தர்கள் வீதிகளை வலம் வருவார்கள். அந்தக் காலத்தில் மயிலாப்பூர் மாட வீதிகளில் பெரிய பெரிய சங்கீத வித்வான்கள் நாலு மாட வீதிகளையும் சுற்றி அதிகாலை நேரத்தில் பஜனை செய்வது வழக்கமாக இருந்தது. அந்த பஜனையில் ஏராளமான பக்தர்களும் உற்சாகமாகப் பங்கு கொள்வார்கள். வீதிகளில் மங்கலகரமான பெரிய பெரிய கோலங்களும் பஜனைப் பாடல்களுமாக மார்கழியின் அதிகாலை நேரம் தெய்வாம்சம் பொருந்தி காணப்படும்.
சாதாரண மனிதர்கள் தம்முடைய தினசரி வாழ்க்கையில் தினமும் வரும் அதிகாலை நேரத்தையே பிரம்ம முஹூர்த்தம் என்று சிறப்பித்து வழிபாடுகள், பூஜைகள் செய்வது வழக்கம். அப்படி இருக்கும்போது தேவர்களின் பிரம்ம முஹூர்த்தமான மார்கழி மாதம் முழுவதும் எவ்வளவு விசேஷமானது என்பதை நன்குணர்ந்த நம் முன்னோர்கள் இந்த மாதம் முழுவதையும் இறை வழிபாட்டுக்கென்றே அர்ப்பணித்தார்கள். அதனால்தான் திருமணங்கள் போன்ற விசேஷங்களை இந்த மாதத்தில் நடத்தாமல் விலக்கி வைத்தார்கள்.
அனைத்து சிவன் கோயில்களிலும், பெருமாள் கோயில்களிலும் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். மங்கல வாத்தியங்கள் முழங்க சிவன் கோயில்களில் திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சியும், விஷ்ணு கோயில்களில் திருப்பாவையும் அதிகாலையில் ஏராளமான பக்தர்களால் பாடப்படுகிறது. மார்கழி மாத அதிகாலையில் கோயிலில் வழிபட செல்பவர்களுக்கு சுடச்சுட பொங்கல் பிரசாதம் கண்டிப்பாக உண்டு.
பிரசித்தி பெற்ற பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் கோதை நாச்சியார் ஒருவரே பெண் ஆழ்வாராகப் போற்றப்படுகிறார். இவரை தனது வீட்டுத் தோட்டத்தில் துளசி செடியின் அடியில் கண்டெடுத்தவர் மற்றொரு ஆழ்வாரான விஷ்ணு சித்தர் எனப்படும் பெரியாழ்வார். ஆண்டாள் என்று அன்புடன் அழைக்கப்பட்ட கோதை நாச்சியார் பாடிய திருப்பாவை மார்கழி மாத முப்பது நாட்களும் கோயில்களில் குழந்தைகளாலும் பெரியவர்களாலும் அதிகாலையில் பாடப்படுகிறது. ஆண்டாள் தினமும் அதிகாலையில் தனது ஊரிலுள்ள பெண்களைத் துயிலெழுப்பி பெருமாளின் தரிசனத்திற்காகக் கூட்டிக் கொண்டு போகும்போது பாடப்பட்ட பாடல்களே திருப்பாவை முப்பது பாடல்களாகும். மார்கழி முப்பது நாட்களும் திருப்பாவை பாடப்படுவது, 'பாவை நோன்பு' என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
சமயக்குரவர்களில் மூவர் பாடியது தேவாரம். நாலாவது சமயக் குரவரான மாணிக்கவாசகர் பாடியது திருவாசகம், திருக்கோவையார் என்று அழைக்கப்படுகிறது. இதைத்தவிர இவர் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் பாடியுள்ளார். திருப்பெருந்துறை சிவன் கோயிலில் இறைவனை துயிலெழுப்பப் பாடிய பாடல்களே திருப்பள்ளியெழுச்சி எனப்படுகிறது.
மார்கழி மாதத்து விசேஷங்களில் முக்கியமானவை சிதம்பரத்தில் பௌர்ணமியன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் பௌர்ணமியை அடுத்த தேய்பிறை ஏகாதசியன்று நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும், அமாவாசை தினத்தன்று வரும் ஸ்ரீ ஹனுமத் ஜயந்தியுமாகும்.
தட்சிணாயானத்தின் முடிவை அறிவிக்கும் இந்த மார்கழி மாதம் முழுவதும் இறை வழிபாட்டில் கவனம் செலுத்தி, 'மாதங்களில் நான் மார்கழி' என்று திருவாய் மலர்ந்தருளிய ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் பேரருளைப் பெறுவோம்.