சபரிமலை ஐயப்பன் கோயில் மற்ற கோயில்களைப் போல கிடையாது. இங்கு ஒவ்வொரு மாதமும் நடை திறக்கும்போது சில அதிசயங்கள் நிகழும். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
சபரிமலையில் வழக்கமாக ‘ஹரிவராசனம்’ என்ற ஸ்லோகத்தை சொல்லி நடையை சாத்துவார்கள். நடையை சாத்துவதற்கு முன்பு கிலோ கணக்கில் ஐயப்பனின் மீது பசுஞ்சான விபூதியை கொட்டுவார்கள். ஐயப்பனின் வலது கையில் இருக்கும் சின் முத்திரையின் மீது ருத்திராக்ஷ மாலையை போடுவார்கள்.
இதற்குக் காரணம் சுவாமி ஐயப்பன் தவக்கோலத்தில் இருக்கப்போகிறார் என்பதற்காகவேயாகும். மேலும், சுவாமி ஐயப்பனின் இடது கையில் தண்டம் கொடுத்து ஒரே ஒரு விளக்கை மட்டும் ஏற்றிவிட்டு வெளியே வந்து நடையை சாத்திவிடுவார்கள்.
மறுபடியும் ஒரு மாதம் கழித்து நடையை திறக்கும்போது, அதிசயமாக அப்போதும் அந்த விளக்கு எரிந்துக் கொண்டிருக்கும். கோயிலின் நடை திறந்து உலகத்தினுடைய பார்வை கோயில் நடையில் பட்டதுமே சுவாமி ஐயப்பனின் தவக்கோலம் கலைந்துவிடும். ஐயப்பனின் வலது கையில் இருக்கும் ருத்ராக்ஷமும், இடது கையில் இருக்கும் தண்டமும் கைமாறி இருக்கும்.
பூசாரி உள்ளே வந்ததும், எரிந்துக் கொண்டிருந்த விளக்கு அணைந்து விடும். ஐயப்பன் மீதிருக்கும் விபூதி கீழே கொட்டிவிடும். இந்த அதிசயம் ஒவ்வொரு மாதமும் நடப்பதாக சொல்லப்படுகிறது. சுவாமி ஐயப்பன் சபரிமலையிலே உயிர்ப்புடன்தான் இருக்கிறார் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சபரிமலையில் மகரஜோதி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ம் தேதி காணப்படுகிறது. மகரஜோதி என்பது வானில் தெரியும் நட்சத்திரமாகும். இந்த அதிசய நிகழ்வை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் எண்ணற்ற ஐயப்ப பக்தக்கள் சபரிமலையில் குவிகிறார்கள். மகரவிளக்கு என்பது சபரிமலையில் உள்ள பொன்னம்பலமேடு என்ற மலையில் தோன்றும் ஒளியாகும்.
எனவே, மகரஜோதி மற்றும் மகரவிளக்கு இவை இரண்டும் வெவ்வேறாகும். மகரவிளக்கு இயற்கையாக தோன்றும் ஒளி என்பது பக்தர்களின் எண்ணமாக இருந்தாலும், இது உண்மையிலேயே செயற்கையாக மனிதர்களால் உருவாக்கப்படும் நிகழ்வு என்பதை கேரள அரசு ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் சர்ச்சையாக இருந்தாலுமே, ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வைக் காண வருடம்தோறும் வந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.