
சபரிமலையில் உள்ள பதினெட்டு படிகளும் பக்தர்களால் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இந்த 18 படிகளும் பஞ்சலோகத்தில் செய்யப்படிருக்கிறது. 41 நாட்கள் கன்னிசாமிகள் விரதமிருந்து இருமுடிகட்டி சுமந்து வருபவர்கள் கண்டிப்பாக இந்த படிகளை தங்கள் பாதங்களை பதித்தேயாக வேண்டும். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த படிகட்டுகளின் மகத்துவத்தை இந்தப் பதிவில் காண்போம்.
எந்த கோவில்களிலும் படிகட்டுகளுக்கோ அல்லது கட்டடங்களுக்கோ பூஜை செய்ய மாட்டார்கள். ஆனால், சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள பதினெட்டு படிகளுக்கும் பூஜை நடைப்பெறும். சபரிமலையில் உள்ள பதினெட்டு படிகளும் ஆன்மீக சக்தி நிறைந்ததாகும். அதனால்தான் இந்த பதினெட்டு படிகளுக்கும் பூஜை நடத்தப்படுகிறது.
அக்குபஞ்சர் போன்ற சிகிச்சை முறையில் தலையில் உள்ள சக்தி மையத்தை இயக்கி நோய்களுக்கான சிகிச்சையளிக்கப்படும். முன்பெல்லாம் தலையில் சுமை வைத்து தூக்கிச்செல்லும் வழக்கமிருந்தது. ஆனால், தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் அப்படிப்பட்ட வேலைகள் கிடையாது. இதனால் கபாலத்தில் உள்ள சக்தி மையம் இயக்கப்படாமல் தவிர்க்கப்படுகிறது.
ஆனால், சபரிமலையில் தலையில் அழுத்தம் கொடுத்த வண்ணம் தலையில் பிராணன் செயல்படும் நிலையில் பதினெட்டு படிகளை அனுகினால், உடலில் முழுமையாக சக்தி மாற்றம் ஏற்படும். அதனால்தான் இதையே நியதியாக்கினார் அந்த யோகி. இருமுடிக்கட்டாமல் சுவாமி ஐயப்பனை கூட தரிசித்துவிடலாம். ஆனால், இருமுடிக்கட்டாமல் பதினெட்டு படிகளை தொடக்கூட முடியாது.
இந்த பதினெட்டு படிகளும் சபரிமலையை சுற்றியுள்ள 18 மலைகளை குறிக்கிறது. இந்த பதினெட்டு படிகளைத் தாண்டி வருபவர்கள் புனிதமடைந்ததாக கருதப் படுகிறார்கள். அவர்களால் மட்டுமே ஐயப்பனை தரிசிக்க முடியும்.
சபரிமலையில் உள்ள பதினெட்டுப்படிகளுக்கும் பூசாரிகளை வைத்து படி பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது. பதினெட்டு படிகளிலும் அழகிய மலர்களால் அலங்கரித்து விளக்கேற்றப்பட்டு பூஜை செய்யப்படும். கடைசியாக பதினெட்டு படிகளுக்கும் ஆரத்தி எடுப்பதோடு பூஜை நிறைவுப்பெறுகிறது.
சபரிமலையில் உள்ள பதினெட்டு படிகளில் பக்தர்கள் ஏறும்போது உலக ஆசைகளை உடலளவிலும், மனதளவிலும் துறந்து இறைவனை அடையவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்தே ஏறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.