‘தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்’ என்று சொல்வது கடவுளுக்கு மட்டுமில்லை, இசைக்குமே பொருந்தும். மழலையின் சிரிப்பும் ஒருவித இசைதான், மழை துளியும் ஒருவித இசைதான். இப்படி இசை இல்லாத இடமேயில்லை என்று சொல்லலாம். அவ்வளவு ஏன் கல்லுக்குள் ஈரம் மட்டுமில்லை, இசையும் உண்டு என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது காஞ்சனகிரி மலைத் தொடர் மணிப்பாறை. இந்த மலை மீது அமைந்திருக்கும் சிறிய சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். காஞ்சனகிரியை சுற்றி 60 ஏக்கர் நிலப்பரப்பில் மலைகளும்,பெரிய குளமும் அமைந்திருக்கிறது. காஞ்சனகிரியில் அமைந்துள்ள கோயிலில் சுயம்பு லிங்கமாக சிவபெருமான் காட்சியளிக்கிறார். இந்த மலையில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சித்தர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
புராண காலத்தில் இவ்விடத்தை கஞ்சன்கிரி என்று அழைத்தார்கள். ‘கஞ்சன்’ என்னும் அசுரன் இங்கே வாழ்ந்திருக்கிறான். அவன் பெரிய சிவபக்தன். அவன் சிவனை நோக்கி பல வருடங்கள் தவம் செய்தும் சிவன் அவனுக்குக் காட்சி தரவில்லை. அதனால் அந்த அசுரன், சிவபெருமான் மீது கடும் கோபத்தில் இருந்தான். அப்போது அந்த வழியாக ஒரு அர்ச்சகர் குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து செல்கிறார். “எங்கே தண்ணீரை எடுத்துச் செல்கிறாய்?” என்று அசுரன் கேட்கிறான். அதற்கு அர்ச்சகரோ, சிவனுக்கு அபிஷேகம் செய்ய எடுத்துச் செல்வதாக சொல்கிறார். “நீ சிவனை பார்த்திருக்கிறாயா?” என்று அசுரன் கேட்கிறான். “ஓ! பார்த்திருக்கிறேனே!” என்று அர்ச்சகர் சொன்னதும், அவரை நன்றாக அடித்து அனுப்புகிறான் அசுரன்.
இதை அறிந்த சிவபெருமான், நந்திதேவரை அழைத்து, அந்த அசுரனை வதம் செய்யச் சொல்கிறார். நந்திதேவரும் அந்த அசுரனை வதம் செய்து உடலை 10 பாகங்களாக வெட்டி 10 இடத்தில் போட்டுவிடுகிறார். பாகங்கள் விழுந்த ஒவ்வொரு இடங்களும் ஒவ்வொரு ஊராக இருக்கிறது. தென்கால், வடகால், மணியம்பட்டு (மணிக்கட்டு), அவரக்கரை (ஈரக்குலை), லாலாப்பேட்டை(இதயம்), சிகை ராஜப்புரம் (தலை), குகையநல்லூர் (இடுப்பு), மாவேரி (மார்பு) என்று இந்த ஊர்களின் பெயர் அமைந்துள்ளன. அன்று முதல் இந்த ஊருக்கு கஞ்சனகிரி என்ற பெயர் வந்து, காலப்போக்கில் அதுவே காஞ்சனகிரி என்று மாறியது.
‘கஞ்சன்’ என்னும் அசுரனின் கண்டம், அதாவது கழுத்துப் பகுதியே இந்த மணிப்பாறை என்று கூறுகிறார்கள். இந்த பாறையை தட்டும்போது வித்தியாசமான மணி போன்ற ஓசை வருகிறது. அதனாலேயே இந்த பாறைக்கு மணிப்பாறை என்ற பெயர் வந்தது. முற்காலத்தில் உடம்பு சரியில்லாதவர்களை அந்தப் பாறையின் மீது படுக்க வைத்து, கல்லை வைத்து அந்த பாறையை தட்டி சத்தத்தை எழுப்புவார்கள். அந்தப் பாறையில் இருந்து வரும் அதிர்வலைகள் ஒருவரின் நோயை போக்கும் என்று நம்பினார்கள்.
இங்கிருக்கும் நிறைய பாறைகள் பார்ப்பதற்கு லிங்கம் போலவே அமைந்திருக்கும். இங்கு மொத்தம் 1008 லிங்கங்கள் உள்ளன. இங்கிருக்கும் வில்வனாதன் கோயிலில் உள்ள நந்தி வழக்கத்திற்கு மாறாக கிழக்கு பக்கமாக திரும்பியிருக்கிறது. அசுரன் கஞ்சனின் பக்தியை போற்றும் வகையில் இவ்விடத்தில் வழிபடப்படும் சிவனின் பெயர் கஞ்சனேஸ்வரர், தாயார் கஞ்சனாம்மா தேவி.
இந்த அதிசய மணிப்பாறை ஓசையை கேட்பதற்காகவே இவ்விடத்திற்கு ஒருமுறையாவது வந்து இத்தகைய அதிசய நிகழ்வை கண்டு வணங்கிச் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.