
திருநெல்வேலி - தென்காசி சாலையில் திருநெல்வேலியில் இருந்து மேற்காக 44 கிலோ மீட்டர் தொலைவிலும் தென்காசியில் இருந்து கிழக்காக பத்து கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது பாவூர்சத்திரம் என்னும் ஊர். இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் அருகில் சுரண்டை என்னும் ஊருக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது கீழப்பாவூர். இத்தலத்தில் வேறு எங்கும் காண முடியாத பல்வேறு சிறப்புகள் நிறைந்த ஆலயத்தில் அபூர்வ வடிவில் நரசிம்மர் காட்சி தருகிறார்.
காசியப மகரிஷி, வருண பகவான், சுகோஷ முனிவர் ஆகியோருக்கு நரசிம்ம அவதாரக் காட்சி கொடுத்து மகாவிஷ்ணு நிரந்தரமாக்க் குடி கொண்டுள்ள இடம்தான் கீழப்பாவூர். வருணன், காசியபர் சுகோஷன் முதலானோர் நரசிம்ம அவதார திருவுருவை தரிசிக்க விரும்பி மகாவிஷ்ணுவை நினைத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் இருந்தனர். அதன் பலனாக மகாவிஷ்ணுவின் அசரீரி ஒலித்தது. ‘பொதிகை மலையில் மணிமுத்தாறு தீர்த்தத்தில் நீராடி சித்ரா நதிக்கரையில் தவம் செய்தால் நரசிம்மாவதாரத்தை காண்பீர்’ என்பதே அசரீரி வாக்கு.
அதன்படி மறுபடியும் தவத்தை மேற்கொண்டனர். ரிஷிகளின் கடும் தவத்திற்கு மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு, மறுகணமே ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பதினாறு திருக்கரங்களுடன் மகா உக்ர மூர்த்தியாக நரசிம்ம அவதார திருவுருவைக் காட்டி அருள்பாலித்தார். மேலும், காட்சி கொடுத்த இடத்திலேயே நிரந்தரமாக தங்கி விட்டார். புராண சிறப்பு மிக்க அந்தப் புண்ணிய தலமே கீழப்பாவூர் என்று அழைக்கப்படுகிறது. நான்கு யுகங்களில் முதலாவதான கிருத யுகத்தில் பிரகலாதனுக்காகவே அவதாரம் எடுத்து வெறும் இரண்டு நாழிகைகள் மட்டுமே இப்பூவுலகில் நீடித்திருந்த நரசிம்மர், மீண்டும் அவதாரம் எடுத்து நிரந்தரமாகக் குடி கொண்டு அருள்பாலித்து வருவது கீழப்பாவூரில் மட்டுமே என்பதால் இத்தலம் ஒப்பற்ற திருத்தலமாகத் திகழ்கிறது.
தமிழகத்தில் இங்கு மட்டுமே பதினாறு திருக்கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் விதமாக திரிபங்க நிலையில் அபூர்வ வடிவ சிறப்புடன் நரசிம்மர் காட்சி தருகிறார். சூரியனும் சந்திரனும் வெண்சாமரங்கள் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க, வெண்கொற்றக் குடையுடன் தியானித்தபடி கம்பீரமாக வீற்றிருக்கிறார். பிரகலாதன், அவனுடைய தாய், நாரதர், காசி மன்னன் ஆகியோர் அருகில் நின்று நரசிம்மரை தரிசித்துக் கொண்டிருப்பது கண் கொள்ளாக் காட்சியாகவும் கிருத யுகத்தை நினைவூட்டுவதாகவும் உள்ளது. சமூகத்தில் எவ்வித உக்ரமும் இன்றி சொன்னதை செய்து காட்டும் குழந்தை போல குழந்தை திருமுகத்துடன் குழந்தை மனம் கொண்டு அருள்பாலித்து வருகிறார் ஞான சக்தி வடிவமாக விளங்கும் கீழப்பாவூர் லட்சுமி நரசிம்மர்.
இங்கே நரசிம்மர் சன்னிதி முன்பு அவருடைய உக்கிரத்தை தணிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நரசிம்ம தீர்த்தம் என்னும் மாபெரும் தெப்பக்குளம் அமைந்துள்ளது தனி பெரும் சிறப்பாகும். இந்த நரசிம்ம தீர்த்தத்தில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் உண்டு.
ஒவ்வொரு மாதமும் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தன்று பிரதோஷ வேளையில் இங்கு பூஜை நடைபெறுகிறது. மாலை 3.3 0 மணிக்கு 16 வகை மூலிகைகளால் மூல மந்திர ஹோமம் நடைபெறுகிறது. தொடர்ந்து இதில் கலந்து கொள்பவர்களுக்கு வாழ்வில் சகலவிதமான கஷ்டங்கள் நீங்கி, பரிபூரண நிலை உண்டாகும். சுவாதி நட்சத்திரத்தன்று மாலை வேளையில் நரசிம்மரை வழிபட்டால் வாயு வேகத்தில் வந்து பாதுகாத்து அருள் செய்வார். தொடர்ந்து சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மரை வழிபடுபவர்களுக்கு கடன் தொல்லைகள் நீங்கி, செல்வச் செழிப்பு ஏற்படும். மேலும், ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும் தடைகள், பிரச்னைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
இந்தியாவில் மூன்று இடங்களில் மட்டும்தான் பதினாறு திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் ஆலயம் உள்ளது. ஒன்று ராஜஸ்தான் மாநிலத்திலும், மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி எனும் சிறுகுன்றிலும் உள்ளது. மூன்றாவதாக கீழப்பாவூரில் மட்டுமே சமதளமான பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. கீழப்பாவூர் சென்று இந்த லட்சுமி நரசிம்மரை வழிபட்டு அவரின் அருளைப் பெற்று அனைத்து தோஷங்களும் நீங்கி சிறப்புற வாழலாம்.