ஆலயம் தோறும் சென்று உழவாரப்பணி மேற்கொண்டு மகேசன் சேவையை தனது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருந்தார் திருநாவுக்கரசர். ஒரு நாள் இவருக்கு திருப்பைஞ்ஞீலி திருத்தல ஈசனை தரிசிக்க மனதில் ஆசை ஏற்பட்டது. உடனே புறப்பட்டார் திருப்பைஞ்ஞீலி நோக்கி. நல்ல வெயில் நேரம் என்பதால் தாகத்தால் தவித்தார். மேலும், பசி வயிற்றைக்கிள்ள உணவுக்காக தவித்து சுற்றுமுற்றும் தேடினார். ஒருவரையும் காணவில்லை.
சிவ நாமத்தை உச்சரித்தபடி திருப்பைஞ்ஞீலி நாதனை தியானித்தபடியே முன்னே சென்றார். அப்போது ஒரு முதிய அந்தணர் அவர் முன்னே வந்தார். கையிலே கட்டுச் சோறு, தாகம் தீர்க்க நிழலில் அமர சிறு மண்டபம் எல்லாமே இருக்கக் கண்டு, திருப்பைஞ்ஞீலிநாதரை மனதில் போற்றியபடியே அந்தணர் தந்த உணவை உண்டார். அவரிடம் திருப்பைஞ்ஞீலிலிக்கு வழி கேட்டார். தாமும் அவருடன் வருவதாகச் சொன்ன அந்தணர், திருத்தலம் அருகே வந்ததும் மறைந்து போனார்.
தம்முடன் வந்தவர் இறைவனே என்பதை உணர்ந்த அப்பர் பெருமான் ஆனந்தக் கண்ணீர் உகுத்தார். கருவறை சன்னிதியில் லிங்க வடிவில் பெருமான் தெய்வீகக் காட்சி தர, அப்பரின் வேண்டுகோளின்படி சோற்றுடைய ஈஸ்வரராக கோயிலின் முன்புறம் தனிச் சன்னிதியில் எழுந்தருளினார் சிவபெருமான். சித்திரை மாத அவிட்டம் நட்சத்திரத்தில் இந்த சன்னிதியில் சோறு படைக்கும் விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
திருச்சிக்கு அருகே உள்ளது திருப்பைஞ்ஞீலி. ‘ஞீலி’ என்பது ஒருவகை கல்வாழை. பசுமையான ஞீலி வாழையை தல விருட்சமாகப் பெற்றதால் திருப்பைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது. ஞீலி என்ற இந்த வாழை வேறு இடத்தில் பயிராவது இல்லை. இதன் இலை, காய், கனி அனைத்தும் இறைவனுக்கே அர்ப்பணிக்கப்படுகிறது. இவற்றை மனிதர்கள் உண்டால் நோய் வரும் என்று கூறப்படுகிறது. இதன் கனியை சுவாமிக்கே நிவேதனம் செய்து தண்ணீரில் விட்டு விடுகிறார்கள்.
இந்தக் கோயிலின் இரண்டாவது கோபுர வாயில் வழியாக செல்லாமல், வெளிச்சுற்று பிராகாரமாக வலம் வரும்போது எமன் சன்னிதியை தரிசிக்கலாம். இந்த சன்னிதி ஒரு குடைவரை கோயிலாக அமைந்துள்ளது. பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரை கோயிலில் சோமாஸ்கந்த சிவபெருமானின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் காட்சி தருகிறார். இந்த சன்னிதியின் முன்பு திருக்கடவூரில் நிறைவேற்றிக் கொள்வது போல சஷ்டியப்த பூர்த்தி ஆயுள் விருத்தி ஹோமம் போன்றவற்றை நடத்திக் கொள்ளலாம்.
திருக்கடையூரில் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் எமனை காலால் உதைத்து அழித்தார். இதனால் உலகில் இறப்பு எனும் நிகழ்வு நடக்காமல் போனது. பூமியின் இயல்பு நிலை கெட்டது. அதர்மம் ஓங்கியது. இதனை பூமி தேவியும் தேவர்களும் சிவபெருமானிடம் முறையிட, அவர்களின் கோரிக்கைக்கு இணங்கி சிவபெருமான் எமனை இத்தலத்தில் தன் பாதத்திக் கீழ் குழந்தை உருவில் மீண்டு எழும்படி செய்தார். தர்மம் தவறாமல் நடக்க அறிவுரை கூறி எமனின் பதவியை மீண்டும் தந்து அருள் புரிந்தார். எனவே, இந்தத் தலத்தில் எமனின் சன்னிதியில் குடிகொண்ட சோமாஸ்கந்த மூர்த்தியை வணங்கி வழிபடுபவர்களுக்கு இழந்த பதவி மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக சுமார் 12 கி.மீ. தொலைவு சென்றால் இந்தக் கோயிலை அடையலாம்.