ஆடல்வல்லானின் ஆனி திருமஞ்சன தரிசனம் காணீரோ!

சிதம்பரம் அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமான்
சிதம்பரம் அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமான்

சிதம்பரம், அருள்மிகு சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்தியின் ஆனி திருமஞ்சன மஹோத்ஸவம் நாளை 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை (03.07.2024 - 12.07.24 வரை) சிறப்பாக நடைபெற உள்ளது.

இப்புவியில் சகல தலங்களுக்கும் முதன்மையாகவும். தன்னிகரற்றும் விளங்குகிறது சிதம்பரம் க்ஷேத்ரம். இயற்கையின் இணையற்ற சக்திகளாய் விளங்குகிற பஞ்சபூத தலங்களில் இது ஆகாச தலமாகும். வேண்டுவோருக்கு ஞானத்தையும் பெரும் செல்வத்தையும் தந்து, பரிபூரண அனுக்ரஹம் செய்யும் ஸ்ரீமத் அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயக ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்திக்கு ஆனி திருமஞ்சன மஹோத்ஸவம் வருடாவருடம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறும்.

மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த இரண்டு உத்ஸவத்தின்போதும் மூலவர் பெருமான் ஆனந்த நடராஜ மூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உத்ஸவராக தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்.

ஆனி திருமஞ்சனம் ஸ்ரீ நடராஜருக்கு உரிய அற்புதமான திருநாள். திருமஞ்சனம் என்றால் மங்கல ஸ்நானம். அதாவது, மங்கல நீராட்டு. சிவ தலங்களில் முதன்மையான தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருமஞ்சனம் என்றே இது அழைக்கப்படுகிறது. சிவனாரின் அனைத்துத் தலங்களிலும் ஆனி திருமஞ்சனம் முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுகிறது. நடராஜர் ஆலயத்தில் நிகழும் ஆனி திருமஞ்சனம் நிகழ்வையும் தேரோட்டத்தையும் காண, உலகமெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிவார்கள்.

நடராஜர் அபிஷேகம்: ஸ்ரீ நடராஜருக்கு வருடத்துக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில், ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், தேவர்கள் ஆடலரசனுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அந்த நன்னாளே ஆனி திருமஞ்சனத் திருநாள்!

சிதம்பரம் திருத்தேர் உத்ஸவம்
சிதம்பரம் திருத்தேர் உத்ஸவம்

ஆனி திருமஞ்சனம்: பங்குனியை போலவே ஆனியில் வரும் உத்திரமும் விசேஷம். சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சன விழா, பத்து நாட்கள் விழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசியில் அக்னி நட்சத்திர கடும் வெம்மை எல்லாம் முடிந்து, வெப்பத்தில் தகிக்கும் திருமேனிக்கு, ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

நடராஜர் தாண்டவம்: ஆண்டாண்டு காலமாக, ஆனியில் நடைபெறும் திருமஞ்சனத் திருவிழாவைத் துவக்கி வைத்தவர் யார் தெரியுமா? யோக சூத்திரத்தை நமக்கு அருளிய பதஞ்சலி மகரிஷி. சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலையும் உணர்த்துகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது. இதேபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் கொண்டது. இந்த இரண்டு பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும் தரிசிப்பதாக ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
அடிக்கடி வாய் மற்றும் நாக்கில் புண் ஏற்படுகிறதா? வைட்டமின் பி6 குறைபாடாக இருக்கலாம்; ஜாக்கிரதை!
சிதம்பரம் அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமான்

ஆனி திருமஞ்சனத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம்:

11.07.2024 அன்று காலை ஸ்ரீ நடராஜர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோரின் திருத்தேர் வீதியுலா நடைபெறும்.

12.07.2024 அதிகாலை 3 முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீ நடராஜர், அம்பாளுக்கு மஹாபிஷேகம் நடைபெறும். 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரமும், பஞ்சமூர்த்தி வீதி உலா காட்சியும், சித்சபையில் விசேஷ ரகசிய பூஜையும், பகல் 2 மணிக்கு மேல் ஆனி திருமஞ்சன மஹாதரிசன ஞானாகாச சித்ஸபா பிரவேசம் நடைபெறும்.

இந்த வைபவத்தின் பத்து தினங்களும், இரு வேளைகளிலும், யாகங்களும் நான்கு வேத பாராயணங்களும், பன்னிரு திருமுறைகளும், பஞ்சமூர்த்தி வீதியுலா காட்சியும், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். நடராஜர் சன்னிதியில் ஸ்படிக லிங்க பூஜை, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பூஜை, வேத பாராயணம் நடைபெறும். இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன வைபவத்தை தரிசிக்கும் பாக்கியம் உங்களுக்கு இருப்பின் சிதம்பரம் வாருங்கள்; ஆடல்வல்லானை தரிசனம் செய்யுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com