
ஆடிமாதம் இறை வழிபாட்டிற்கான மாதமாக சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் விழா எடுத்து சிறப்பாக பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம்.
பெண் மாதமான ஆடி மாதத்தை கற்கடக மாதம் என்றும் கூறுவார்கள்.
பண்டிகைகளின் தொடக்கம் ஆடி மாதத்தை கணக்கிட்டு தான் கூறப்படுகிறது.
ஆடி மாதம் பிறந்தது முதல் மார்கழி வரை தட்சணாயன புண்ணிய காலமாகும்.
இக்காலங்களில் புனித நதிகளில் நீராடினால் பாவங்கள் நீங்கும்.
ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.
ஆடி மாதத்தில் வரும் ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு திதி கடமைகளை செய்தால் ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.
ஆண்டாள் பிறந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருளச் செய்து திருப்பாவை, பாசுரங்கள் பாடப்படும். அப்போது ஆண்டாளை வழிபட்டால் நம் பிரார்த்தனைகள், மாங்கல்ய பாக்கியம் நிறைவேறும்.
ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி திருமணம் நடக்கும்.
ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை கோவிலில் எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருகி வழிபட்டால் திருஷ்டிகள் விலகிவிடும்.
ஆடி மாதம் சுக்ல பட்சதுவாதசி அன்று மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
ஆடி மாத வெள்ளியில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.
ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.
ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரை பொங்கல் வைத்து வணங்க வேண்டும். அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதா சகஸ்ரநாமம் சொல்ல வேண்டும்.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் சகல நலன்களையும் நீங்காத செல்வத்தையும் பெறலாம் என்பது ஐதீகம்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை அமாவாசை பவுர்ணமி, ஆடிப் பெருக்கு போன்ற தினங்கள் மிகவும் சிறப்புக்குரியவை.
ஆடி மாதம் மழை பொழிவு தொடக்கத்தை குறிப்பதால் தமிழர்கள் ஆடிப்பெருக்கை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் கருடாழ்வார் அவதரித்தார். அந்த தினத்தை கருட பஞ்சமி என்ற பெயரில் கொண்டாடுவார்கள்.
ஆடிக் கிருத்திகை அன்று அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் முருகனுக்கு விரதம் இருந்து காவடி எடுத்து நேர்த்திக் கடன் செய்வார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை என்ற ஊரில் முருகனுக்கு ஆடி மாதம் கடைசி வெள்ளி கூடை கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதனை அழகு வேல்முருகனுக்கு ஆடியில் மலர் முழுக்கு என்று சொல்வார்கள்.
ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமர்சியாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.
ஆடி மாதம் 18 ஆம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் தம்பதிகள் ஆற்றங்கரையில் நீன்று தங்களின் தாலியை புதிதாக மாற்றிக் கொள்வார்கள்.
ஆடி மாதத்தில் திருமால் ஸ்தலங்களில் கஜேந்திரமோட்சம் வைபவம் நடத்தப்படுகிறது.
ஆடி மாத பௌர்ணமி நாளில் ஹயக்ரீவர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். ஹயக்ரீவர் அவதாரம் நடந்தது ஆடி மாதத்தில்தான்.
ஆடி பவுர்ணமி அன்று மாணவர்கள் வியாசரை வணங்கினால் கல்வி வளம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
ஆடி பவுர்ணமியில் சங்கரன் கோவிலில் ஊசி முனையில் தவம் புரிந்த கோமதி அம்மனுக்கு தனது உடலில் சரிபாதியாக கொடுத்த சிவ-சக்தி ஐக்கியமானதும் இந்த நாளில் தான். அன்று ஆடித்தபசு விழா விமரிசையாக நடைபெறும்.
ஆவணி அவிட்டம், வரலட்சுமி விரதம் அனைத்தும் ஆடி மாதத்தில் தான் நடைபெறும்.
ஆடி மாதத்தை 'பீடை மாதம்' என்று ஒதுக்குவது அறியாமையால் வந்த பழக்கம் உண்மையில் 'பீடமாதம்' என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபட வேண்டிய மாதம் என்பதே சரியானது.
ஆடி மாதத்தில் அம்பிகைக்கு பால் அபிஷேகம் செய்தால் அவள் மனம் குளிர்ந்து மழையை பெய்ய செய்துநிலம் செழிக்க செய்வாள் என்பது கிராமப்புறங்களில் இருக்கும் நம்பிக்கை ஆகும்.
ஆடி மாதத்தில் அம்பிகையை வழிபட்டு வேண்டி வரங்களை பெறலாம்.