அளவில்லாத பலன்களைப் பெற்றுத்தரும் ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு!

ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு
ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு
Published on

நாளை ஆடி மாத நான்காவது வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை என்றாலே அம்மனுக்குரிய நாள்தான். ஆடி வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும். நினைத்த காரியம் நிறைவேறும். சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கம் ஆகிவிடுகிறார் என்பதால் இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.

ஆடி வெள்ளிக்கிழமையன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் குடும்பத்தில் வளங்கள் அனைத்தும் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எல்லா வெள்ளிக்கிழமையும் அனைத்துத் தெய்வங்களுக்கும் உகந்ததுதான் என்றாலும், ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு மிக மிக உகந்தது.

ஆடி வெள்ளிக்கிழமை அன்று குத்து விளக்கு பூஜை, அதாவது குத்து விளக்கை மகாலட்சுமியாக பாவித்து அலங்காரம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். பூஜையின்போது இடது கையால் எந்த மங்கலக் காரியங்களையும் செய்யக்கூடாது. தீபம் ஏற்றும்போது ஒரே முயற்சியில் தீபத்தை எரிய விடுவது நல்லது. தீபச்சுடர் நின்று நிதானமாக எரிய வேண்டும். நடுங்கக் கூடாது, புகையக்கூடாது, மெல்ல தணிந்து எரியக்கூடாது. மிகச் சிறியதாக அல்லது மிகப் பெரியதாக சுடர் எரியாமல் திருவிளக்கின் அமைப்பிற்கும் அளவிற்கு தகுந்தபடியும் எரிய வேண்டும். விளக்கில் குளம் போல் எண்ணையை ஊற்றி அல்லது நெய்யை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

விளக்கிற்கு சிவப்பு வண்ண மலர்களை சாற்றலாம். மகாலட்சுமி பூஜை என்றால் செவ்வந்தி மலரை சாத்தலாம். பூஜைக்கு விளக்கு ஏற்றியவுடன் சந்தனம், குங்குமம் வைத்து விட வேண்டும். விளக்கை ஏற்றிவிட்டு மெதுவாக மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு பொட்டு வைக்கக் கூடாது. அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் உள்ளிட்ட உணவுகளை நெய்வேத்தியமாகப் படைத்து வழிபாடு செய்தால் கிட்டாத பாக்கியமும் கிட்டும்.

இதையும் படியுங்கள்:
அவகோடா பழத்தோலில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு

ஆடி வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் மாக்கோலம்  போட்டு அதைச் சுற்றி செம்மண் காவி இட வேண்டும். அதேபோல் வீட்டின் பூஜை அறையிலும் மாக்கோலம் இடுவது மிகவும் சிறப்பு. மாக்கோலத்தில்தான் மகாலட்சுமி நம் இல்லத்திற்கு மனம் உவந்து வருகை தருவாள்.

ஆடி வெள்ளிக்கிழமையில் விரதம் இருப்பது மிகவும் விசேஷம். அன்று அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். கோயிலுக்குச் சென்று விளக்கேற்றுவது மிகவும் சிறப்பு. கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள மகாலட்சுமியின் படத்திற்கு முன்பு அல்லது அம்பிகையின் படத்திற்கு முன்பு நெய் விளக்கு ஏற்றி வைக்கலாம். அம்பாள் படம் எதுவும் இல்லை என்றால் திருவிளக்கை அம்பிகையாக பாவித்து விளக்கேற்றி பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். முடிந்தவர்கள் காலை, மதியம் இரு வேளையும் விரதம் இருக்கலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் அம்பிகையை மனதார வேண்டி வழிபடலாம். ஆடி வெள்ளியன்று அம்பிகைக்குரிய லலிதா சஹஸ்ரநாமம், காமாட்சி அஷ்டகம், சௌந்தர்யலஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், லட்சுமி அஷ்டோத்திரம், அபிராமி அந்தாதி  போன்ற அம்பாளுக்குரிய பாடல்களில் எதை வேண்டுமானாலும் படிக்கலாம். பூக்களால் அம்பாளுக்கு அர்ச்சனை செய்வதை விட ஸ்தோத்திரங்களால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பாகும்.

ஆடி வெள்ளிக்கிழமையன்று இப்படி அம்மனையும் திருவிளக்கையும் ஆராதித்து வழிபட்டால் இல்லத்தில் அனைத்து வளங்களும் வந்து சேரும். ஆடி வெள்ளிக்கிழமையன்று ஆலயம் சென்று அம்மனை வழிபடுவதும் மிகவும் சிறப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com