ஆடி மாதத்தில் அம்மனுக்கு முளைப்பாரி எடுப்பது ஏன் தெரியுமா?

முளைப்பாரி நிகழ்ச்சி
முளைப்பாரி நிகழ்ச்சி
Published on

டி மாதம் பிறந்தாலே அம்மன் கோயிலில் திருவிழா கொண்டாட்டம்தான். அப்படித் திருவிழாக்களில் முக்கியமானது முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது. மழை வளம் பெருகவும், திருமணத் தடை நீங்கவும் கன்னிப்பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்கின்றனர். பிற்காலத்தில் கன்னியரோடு சுமங்கலிப் பெண்களும் இதில் பங்கேற்றனர்.

‘முளைப்பாலிகை’ என்ற வரலாற்றுப் பண்டிகையே மருவி, ‘முளைப்பாரி’ என்றானது. அம்மன் கோயிலுக்கு அருகில், ‘முளைபிறை’ எனப்படும் கீற்றுக் கொட்டகை அமைத்து அம்மனுக்குக் காப்பு கட்டி திருவிழா தொடங்கும் நாளில் அந்த கொட்டகையில் முளைப்பாரி போடும் வழக்கம் உண்டு. அம்மனுக்கு 21 புத்திரிகள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் 21 வகையான தானிய விதைகளை தனித்தனி தொட்டிகளில் பரப்பி நீரிலிட்டு முளையிடுவார்கள்.

முளையிடப்பட்ட தொட்டிகளை பனையோலை பெட்டியைக் கொண்டு சூரிய ஒளி படாமல் மூடி வைத்து தினமும் நீர் தெளித்து வளர்ப்பார்கள். தினமும் நீர் தெளிக்க ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து அந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பார்கள். முளைப்பாரி போடும் பெண்கள் பக்திப் பெருக்குடன் விரதம் இருந்து இதனை செய்வார்கள்.

முளை வரும் ஒன்பது நாட்களும் பெண்கள் இரவில் அந்த இடத்தில் கூடி கும்மியடித்து பாடி அம்மனை வணங்கி முளைப்பாரி செழித்து வளர வேண்டிச் செல்வார்கள். பத்தாம் நாளன்று மேள தாளம் முழங்க 9 நாட்கள் வளர்ந்த முளைப்பாரியை பெண்கள் சுமந்துகொண்டு ஊர்வலமாகச் சென்று அம்மன் கோயிலுக்கு முன் அவற்றை வைத்து கும்மியடித்து குலவை இட்டு பாட்டுப்பாடி அம்மனை வேண்டி நிற்பார்கள்.

தொன்றுதொட்டு வரும் இந்த முளைப்பாரி விழாவை எடுப்பதால் கிராமத்தில் உள்ள நீர்நிலைகள் நிறையும் என்பதுடன் நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்பதும் நம்பிக்கை. அத்துடன் முளைப்பாரியில் வளர்ந்த பயிர்களின் வளர்ச்சியைக் கண்டு அந்த ஆண்டின் விளைச்சல் எப்படி இருக்கும் என்பதை கணிக்கும் சடங்காகவும் இந்த முளைப்பாரி எடுக்கும் விழா கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மழைக்கால விஷக் காய்ச்சலுக்கு நிவாரணம் தரும் இயற்கை மூலிகைகள்!
முளைப்பாரி நிகழ்ச்சி

கோயிலில் கும்பாபிஷேகம் கூட முளைப்பாரியோடுதான் தொடங்கும். இது ‘அங்குரார்ப்பணம்’ எனப்படுகிறது. திருமணங்களில் கூட முளைப்பாரிக்கு முக்கிய இடம் உண்டு. சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகியை திருமணம் செய்யும் சமயம் தானிய முளைப்பாரிகளை பெண்கள் கூட்டம் தூக்கி வந்ததை இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சங்க காலத்திலேயே முளைப்பாரி எடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

முளைப்பாரி வளர்ப்பது என்பது வழிபாடு மட்டுமல்ல, வீரியமான விதைகளை வேளாண்மைக்கு தேர்ந்தெடுக்கும் உத்தியும் கூட. அதாவது, தரமான விதைகளை அடுத்த சாகுபடிக்கு தேர்வு செய்ய வசதியாக திருவிழா என்ற பெயரில் கொண்டாடப்படுவதே ஆடி மாத முளைப்பாரி திருவிழாவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com