ஆன்மிகக் கதை: இறைவனின் இருப்பிடம் எது தெரியுமா?

இறைவனின் இருப்பிடம்
இறைவனின் இருப்பிடம்

கான் ஒருவர் காட்டில் ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் அக்கரைக்குப் போக நினைத்தார். ஆற்றோரம் ஒரு படகு இருந்தது. அதில் படகோட்டியும் இருந்தான். மகான் படகில் ஏறினார். ஆறு மிக அகலமாகவும் ஆழமாகவும் இருந்தது. படகைச் செலுத்திக் கொண்டிருந்த படகோட்டி, மகானிடம், "ஐயா! கடவுள் எங்கே இருக்கிறார்? அவரை எனக்குக் காட்ட முடியுமா?'' என்று கேட்டான்.

படகோட்டியைப் பார்த்துப் புன்னகைத்த மகான், "கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் அப்பா! அவர், இரக்கம், தயை, கருணை, அன்பு முதலிய குணங்களில் இருக்கிறார். இதோ! என் எதிரில் இருக்கும் உன்னிடம் கூட நான் கடவுளைப் பார்க்கிறேன்!'' என்றார்.

படகு ஆழமான பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது நல்ல மழை! திடீரென காற்றும் பலமாக வீசியது. படகு ஆட்டம் காண ஆரம்பித்தது. கடுமையான காற்றில் படகு ஆற்றில் கவிழ்ந்தே விட்டது.

மகானுக்கு நீச்சல் தெரியாது. அவர் படகிலிருந்து தவறி நீருக்குள் விழுந்து மூழ்கினார். படகோட்டிக்குப் பதைபதைப்பாகி விட்டது. ‘அடடா, நம்மை நம்பி வந்த மகான் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமே’ என எண்ணி, உடனே அவன் நீரில் பாய்ந்தான். படகோட்டிக்கு நீச்சலில் திறமை அதிகம். அனுபவமும் அதிகம் என்பதால் சிரமப்பட்டு மகானைக் காப்பாற்றி பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டான்.

கண் விழித்துப் பார்த்த மகான், "மகனே, இப்போது புரிகிறதா? நான் எப்படிப் போனாலும் பரவாயில்லை என நினைக்காமல், நீ உனது மனதில் உள்ள இரக்கத்தினால் நீரில் குதித்து என்னைக் காப்பாற்றி இருக்கிறாய். அந்த இரக்க குணமே கடவுள். பிறரது துன்பத்தைச் சகியாதவனிடத்திலும், இரக்கமுள்ள இதயங்களிலும், உயிர்களிடம் அன்பு கொண்டவர்களிடத்திலும் கடவுள் வசிக்கிறார். உன்னுள் இருக்கும் இரக்க சிந்தனையைத்தான் கடவுள் என்கிறோம். புரிந்ததா?" என்றார்.

இதையும் படியுங்கள்:
ஒரே வாரத்தில் உடல் எடை குறைப்பது சாத்தியமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
இறைவனின் இருப்பிடம்

படகோட்டிக்கு நன்றாகப் புரிந்தது. இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும். பசி என்று வருபவருக்கு உணவு தருபவர் முதல், நம் வேதனைகளை காது கொடுத்துக் கேட்பவர் வரை அன்றாடம் நம்முடன் சக மனிதராகவே பயணிக்கிறார் கடவுள். ‘இரக்கமுள்ள இதயமே கடவுளின் இருப்பிடம்’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது மட்டுமே நமது கடமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com