

மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது. மாசி மக திருநாளில் அனைத்து திருக்கோவில்களிலும், தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறுகிறது. சிவபெருமான் வருணனுக்கு சாப விமோசனம் அளித்ததும் இந்நாளில்தான். இதனால் சிவனை வழிபடுவதற்கும் உகந்த நாளாகிறது மாசிமகம்.
ஒரு முறை வருண் பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டபோது, அவர் கடலில் கட்டிப்போடப் பட்டிருந்தார். அவரை விடுவிக்கும்படி தேவர்கள் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தனர். அவரும் வருண் பகவானை விடுவித்தார். அன்றைய தினம் ஒரு மாசிமக நாள். தோஷம் நீங்கப்பெற்ற வருணபகவான், சிவ பெருமானை நோக்கி, "மாசி மக நன்னாளில் தீர்த்தமாடி வழிபடுகிறவர்கள் தங்கள் பாவங்கள் நீங்கப் பெற்று நற்பலனைப் பெற அருள் வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். சிவபெருமான் அவ்வாறே வரருளினார்.
அதனால்தான் மாசி மகம் அன்று புண்ணிய தீர்த்தங்களை தரிசிப்பதும், தொடுவதும்,பெருகுவதும், அதில் நீராடுவதும் புண்ணியத்தைத்தரும், பாவங்கள் தொலையும் என்கிறார்கள்.
மாசி மகம் மகத்துவம் மிக்கது. சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாக மாசிமகம் திகழ்கிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்றுதான் என புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசிபவுர்ணமியில்தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் இல்லாள் உமாதேவி மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தில் தட்சனின் மகளாக அவதரித்தார்.
மாசி மகம் நாளில் புனித நீர் நிலைகளில் நீராடினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக்கொண்டால் ஆண் குழந்தை நிச்சயம் பிறக்கும் என்பது நம்பிக்கை.ஆண் குழந்தைகள் வேண்டும் என்று ஆசைப்படும் தாய்மார்கள். மாசி மகம் அன்று விரதம் இருந்து அன்னதானம் செய்தால், அவ்வாண்டே ஆண் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் மாசி மகம் திருவிழாவில் முருகன் மும்மூர்த்திகள் அம்சத்தில் காட்சி தருகிறார். 7ம்நாள் விழாவில் பிரம்மாவின் அம்சத்தில் வெள்ளை உடையிலும், மறுநாள் காலையில் சிவ அம்சத்தில் சிகப்பு உடையிலும், பகலில் திருமால் கோலத்தில் பச்சை உடையிலும் காட்சி தருகிறார். இந்நிகழ்ச்சியை "உருகு சட்டை சேவை" என்கிறார்கள்.
ஞானமும், முக்தியும் அளிக்கும் கேது பகவான் மகம் நட்சத்திரத்திற்கு அதிபதியாவார். எனவே இந்நாளில் கேது பகவானை வழிபட அறிவாற்றல் சிறக்கும் என்பதால் குழந்தைகளும், பெரியவர்களும் நவகிரக சந்நிதியில் இருக்கும் கேது பகவானுக்கு வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யலாம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருப்பாம்புரம். இங்கு பாம்புபுரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக்கோவில் மிகச்சிறந்த ராகு-கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது.
மதுரை மேலமாசி மற்றும் தெற்கு மாசி வீதி சந்திப்பில் அமைந்துள்ள பூலோக கைலாயம் என அழைக்கப்படும் தலம். இம்மையிலும் நன்மை தருவார் கோயில். மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்தில் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. சிவனும் பார்வதியும் மேற்கு நோக்கி, லிங்கத்திற்கு சிறப்புப் பூஜை செய்தபடி காட்சியளிக்கும் அற்புதக் காட்சி இங்கு சிறப்பு.
மாசி மகத்தன்று நீராடி வழிபட்டால், தீராத தோஷங்கள் நீங்கி, இம்மையிலும் (இந்தப் பிறவியிலும்) நன்மை உண்டாகும். இத்தலத்தில் சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்துக் கொண்டதாக நம்பப்படுவதால், மாசி மாதத்தில் இவரை வழிபடுவது இம்மையிலேயே நன்மைகளைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.