ஆன்மிகக் கதை: யார் பேரரசன் தெரியுமா?

sri krishna with Dharma
sri krishna with Dharma

காபாரதத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஸ்ரீகிருஷ்ணர். மற்றொன்று அதற்கு இணையாக தருமர். இந்த தருமன் நீதியும் அறமும் தவறாத ஒரு மிகச்சிறந்த பேரரசன் என்று நாம் அறிவோம். அப்படிப்பட்ட தருமனுக்கு, ‘தன்னைவிட பெரிய கொடையாளி யாருமில்லை’ என்ற தலைக்கனம் வந்துவிடக் கூடாது என்று நினைத்த ஸ்ரீகிருஷ்ணர் ஒரு சம்பவத்தை அரங்கேற்றினார்.

ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், தருமரிடம் "தருமா, நாம் இருவரும் அருகில் ஒரு நாட்டுக்குச் சென்று பார்வையிட்டு வருவோம்” என்று கூற, இருவரும் காலையில் நடக்க ஆரம்பித்தனர். அந்த நாட்டை அடைவதற்குக் காடு, மலைகள் எல்லாம் தாண்டி வருவதற்குள் மதியம் ஆகிவிட்டது.

மதிய வேளை என்பதால் இருவருக்கும் மிகுந்த தாகமாக இருந்தது. அருகில் தென்பட்ட ஒரு வீட்டில் இருந்த பெண்மணியிடம் தண்ணீர் கேட்டார் தருமர். அப்பெண்ணும் தங்கச் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தாள்.

இதை ஆச்சரியமாகப் பார்த்த தருமரும் ஸ்ரீகிருஷ்ணரும் அந்தத் தண்ணீரை வாங்கி குடித்தனர். குடித்துவிட்டு அந்தச் சொம்பினை அப்பெண்ணிடம் கொடுத்தனர். அந்தப் பெண் அந்தச் சொம்பினை வீட்டுக்குக் கொண்டு செல்லாமல் தூக்கி எறிந்து விட்டாள்.

தருமருக்கு ஆச்சரியம் கலந்த கோபமாக இருந்தது. ‘ஒரு தங்கச் சொம்பை இப்படித் தூக்கி எறிவதா?’ என்று அப்பெண்ணிடம் கேட்டார். அதற்கு அந்தப் பெண், ‘நாங்கள் ஒரு முறை பயன்படுத்திய தங்கத்தை மறுமுறை பயன்படுத்த மாட்டோம். அதனால்தான் தூக்கி எறிந்தேன்’ என்றாள்.

தருமரும் ஸ்ரீகிருஷ்ணரும் அங்கிருந்து கிளம்பி அந்த நாட்டை சுற்றிப் பார்த்தனர். மேலே கண்டது போல், இன்னும் நிறைய ஆச்சரியங்கள், விசித்திரங்கள் அவர்களுக்கு அங்குக் காத்திருந்தது. அதையும் கண்டுவிட்டு நேரடியாக அந்த நாட்டை ஆளும் மன்னனின் அரண்மனைக்குச் சென்றனர்.

இதையும் படியுங்கள்:
உடலில் ஏற்படும் வீக்கங்களை முழுமையாகக் குறைக்க உதவும் 5 உணவுகள்!
sri krishna with Dharma

ஸ்ரீகிருஷ்ணரும் தருமரும் தனது அரண்மனைக்கு வந்ததை எண்ணி ஆச்சரியமும் வியப்பும் அடையாத அந்த மன்னன், சாதாரணமாக அவர்களை உபசரித்தான். ஸ்ரீகிருஷ்ணர், தருமனைப் பற்றி, ‘உங்கள் நாட்டில் நீங்கள் எப்படி ஒரு பேரரசராக இருக்கிறீர்களோ, அதேபோல் இவனும் ஒரு பேரரசன் ஆவான். இல்லை என்று வருபவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் தருமன் இவன் ஆவான்’ என்று தருமனின் புகழாரங்களை மன்னன் முன் எடுத்துக் கூறுகிறார்.

ஆனால், அந்த அரசன் இதைக் கேட்டு சிறிதும் சலனப்படாமல், ‘அதனால் என்ன?’ என்பது போல் இருந்தார். இதைக் கண்டதும் தருமருக்கு வியப்பு தாங்க முடியவில்லை. ‘நாம் ஒரு பேரரசன். நான் தருமன் என்று கூறினாலே எல்லோரும் என் முன்னாள் வந்து நிற்பார்கள். ஆனால், இந்த அரசன் என்னை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லையே’ என்று மனம் நொந்து கொண்டான்.

இதைத் தாங்க முடியாமல் அம்மன்னனிடமும் கேட்டே விட்டான். அதற்கு அந்த மன்னன், ‘என் நாட்டில் யாரும் ஏழைகள் கிடையாது. எல்லோரும் செல்வச் செழிப்புடன் இருக்கிறார்கள். அதனால் எங்களுக்குத் தர்மம், வறுமை என்றால் என்னவென்று தெரியாது. ஆனால், நீ ஆளும் நாட்டு மக்கள் வறுமையிலும் பசியிலும் பஞ்சத்திலும் இருக்கிறார்கள். அதனால் நீ தர்மம் வழங்குகிறாய் என்று உன்னை உயர்வாக எண்ணிக் கொள்கிறாய். எனக்குத் தெரிந்து பசி, பஞ்சம், பட்டினி என்று எதுவும் இல்லாமல் மக்களை ஆட்சி செய்பவனே ஒரு பேரரசனாவான். ஆனால், நீ அப்படிப்பட்டவன் அல்ல’ என்றதும் தருமனுக்கு முகம் சிறுத்துப் போனது.

வாழ்வில் முன்னேற நல்ல சிந்தனையும் நல்ல எண்ணங்களும் இருந்தால் போதும். நமக்குக் கீழ் இருப்பவர்களை ஏளனமாகப் பார்த்தால் தலைக்கனம் வரும். நம்மை யாருடனும் ஒப்பிடாமல் நாம் நாமாக இருந்தால் தன்னம்பிக்கை தானே வளரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com