

அங்குசம், பாசாங்குசம் என்றால் என்ன? அதனை ஏன் இந்து தெய்வங்கள் கைகளில் வைத்திருக்கிறன, அரசவையில் அது எப்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. யானைக்கும் அங்குசத்திற்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றி (Aanmigam Articles) இப்பதிவில் காண்போம்.
ஒரு பெரிய பொருளை வாங்குவதற்கு முன்பாக அதற்கு பயன்படுத்தப்படும் சிறிய பொருளை வாங்கி வந்து வைத்து விட்டால் "யானை வாங்குவதற்கு முன்பாக அங்குசம் வாங்கிய" கதையாக என்று கூறுவார்கள். இதிலிருந்து அங்குசமும் யானையும் பிரிக்க முடியாதது என்றும், யானையை வழிநடத்துவோர் அதனை அடக்கி செலுத்த அங்குசத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
அங்குசத்தின் வேறு பெயர்கள்: யானைத் தோட்டி, இரும்பு முட்கோல், வாழை, கொக்கி, துறட்டி என்பன.
அங்குசம்:
அங்குசம் என்ற ஆயுதம் வசப்படாத பொருளை வளைத்து வசப்படுத்தும் கருவியாக இருக்கின்றது. அங்குச ஆயுதத்தின் சக்தியாக 'வசியம்' கருதப்படுகிறது. உயிர்களின் ஆணவத்தை அடக்கி உயிர்களை வசப்படுத்துதல் இந்த அங்குசத்தின் தன்மையாகும். அங்குசம் என்பது ஒரு கருவி மட்டுமல்ல. அது கட்டுப்பாடு, ஞானம் மற்றும் ஆன்மீக ஒழுக்கத்தின் சக்தி வாய்ந்த சின்னமாகவும் கருதப்படுகிறது. மனதை கட்டுப்படுத்தி ஞானத்தின் வழியில் செலுத்தும் கருவியாக அங்குசம் பார்க்கப்படுகிறது.
பாசாங்குசம்:
பாசம் என்பது நீண்ட உறுதியான கயிறு, அங்குசம் என்பது நீண்ட பிடியுடன் முனையில் கொக்கி மற்றும் கூறான ஆணியையும் அதன் அருகில் கொக்கி போல் வளைந்த அமைப்பையும் கொண்டிருப்பதுடன் கொக்கின் முனையும் கூறாக இருக்கும் ஒரு ஆயுதமாகும். இவை இரண்டையும் சேர்த்து பாசாங்குசம் என்று அழைப்பர். இந்தப் பாசாங்குசத்தை யானையை அடக்கி கையாள்வதற்கு பாகன் கையில் வைத்திருப்பது உண்டு.
தெய்வங்கள்:
முதன்மை தெய்வமான விநாயகர் பெருமான் பாசம் அங்குசங்களை வலக்கையின் கீழ்ப் புறத்தில் ஏந்தி உள்ளார் .அவரைப் போலவே பைரவர் ,சதாசிவ மூர்த்தி போன்ற தெய்வங்களும் கைகளில் ஏந்தியுள்ளனர்.
பாசாங்குச சுந்தரி:
பெண் தெய்வங்கள் ஆன துர்க்கை, பார்வதி அவரது அம்சங்களான காமாட்சி புவனேஸ்வரி லலிதாம்பிகை போன்ற பெண் தெய்வங்களும் பாசம் அங்குசம் இரண்டையும் ஏந்துகின்றனர். இதையொட்டி அவள் பாசாங்குச சுந்தரி என்று அழைக்கப்படுகிறாள்.
அங்குச அஸ்திரதேவர்:
விநாயகப் பெருமானின் சண்டிகேஸ்வரரான கணச்சண்டி அங்குசத்தை ஏந்தியவராகக் காட்சி தருகிறார். விநாயகர் ஆலயங்களில் அங்குசம் பீடத்தில் நிலைப்படுத்தப்பட்டு அதன் அடியில் சிறிய விநாயகர் வடிவம் இடம் பெற்றுள்ளது. இதனை அங்குச அஸ்திர தேவர் என்று அழைக்கின்றனர் .ஆலயங்களில் கொடியேற்றி செய்யப்படும் பெரும் திருவிழாக்களில் அங்குசதேவர் அஸ்திரதேவராக இருக்கிறார். தீர்த்தவாரியின் போது இவருக்கு பூஜைகள் செய்து நீரில் முழுக்கி தீர்த்தவாரி நடத்துகின்றனர்.
அரசரின் ஆயுதம்:
அரசர்களும் கலை அழகு மிக்க அங்குசங்களை வைத்திருந்தார்கள். அவை நுணுக்கமான கலைகளால் பின்னப்பட்டு அதில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறியதும் பெரியதுமான உருவங்களும், கொடிக்கருக்கு வேலைபாடுகளும் இடம்பெற்று அரிய கலைப்படைப்பாகத் திகழ்கிறது.
இதன் கீழ் புறம் இரண்டு மகர முகங்கள் உள்ளன .படியின் கீழ்புறம் ஆடல் மகளிர் வரிசையும், அதன் மேல் இரண்டு வரிசைகளில் தெய்வ வடிவங்களும் இடம்பெறும். இதில் உள்ள உக்கிர நரசிம்மர் படிவம் சிறப்புடையதாகும். இதற்கு மேலே கொடிவேலைகள் இருக்கும். மேல் பகுதியில் தாவும் யானை அது தன் துதிக்கையால் தூக்கும் யானை, அதன் கீழ் மகரம், அத்துடன் பெரிய மகரயாளி ஒன்றும் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் .
அதன் வாலில் யாளி முகம் அமைக்கப்பட்டு, அந்த மகர யாளியின் வாயிலிருந்து பக்கவாட்டில் கொக்கி என்னும் கொண்டிப்பகுதி உள்ளது. அப்பகுதியில் ஐந்து அடுக்கு பூவேலைப்பாடுகள் உள்ளன. கீழ்ப்பகுதி கத்தி போல் கூர்மை தீட்டப்பட்டு இருக்கும். முன்முனை சிறிய கத்தி போல் இருபக்க கூர்மையுடன் மூங்கில் இலை போல் உள்ளது.
இந்த இலைப்பகுதியில் குத்திட்டுள்ள சிங்கமும் அதன் இருபுறமும் தாவும் யாளிகளும் உள்ளன. இதன் தண்டுப்பகுதி உள்ளீடாக செய்யப்பட்டு அதனுள் வாள் ஒன்றும் இருக்கிறது .இது உறுதியான உலோகத்தால் செய்யப்பட்டு உள்ளது. இதன் வேலைப்பாடுகள் அந்தந்த காலத்தில் உள்ள அரசர்களின் கலைத்திறமைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அங்குசத்தை தெய்வங்கள் கைகளில் ஏந்தியிருப்பது மக்களை ஞான வழியில் அழைத்துச் செல்லவும், அரசர் கையில் கலை அழகு மிக்க ஆயுதமாகவும் பகைவரை குத்தவும், பற்றி இழுக்கவும் தோதான ஆயுதமாகவும் ,யானைப்பாகன் கையில் யானையை அடக்க துரக்கோலின் மேற்பகுதியில் கொக்கியோடு இக்கருவியை அமைத்து துறட்டி என்றும் வைத்திருக்கின்றனர்.
பெயர் ஒன்றே ஆயினும் ஆட்களின் தகுதிக்கும், திறமைக்கும், தொழிலுக்கும் தகுந்தவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த அங்குசத்தின் தனிச்சிறப்பு.