இறைவன் ஆட்சி செய்யும் ஆலயங்களில் நடைபெறும் அத்தணை பூஜை சடங்குகளுக்கும் பின்னால் ஏதோ ஒரு அர்த்தம் நிச்சயம் இருக்கும். அபிஷேகம் முடிந்த பிறகு, சுவாமிக்கு அலங்காரம் ஆன பின்பு ஏற்றும் தீப ஆராதனைகளைக் காணக் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். தீபங்களின் எண்ணிக்கையையும் அது ஏற்றப்படும் முறைகளையும் பார்த்திருப்போம். ஒன்பது திரியிட்ட தீபத்தில் துவங்கி 7 தீபம், 5 தீபம் என வரிசையாகக் குறைத்துக்கொண்டே வந்து இறுதியில் கலசத்தில் ஏற்றப்படும் ஒற்றை தீபம் வரை நாம் அனைவரும் பயபக்தியுடன் இந்த தீப ஒளியில் கருவறையில் இருக்கும் அலங்கார கடவுளின் புன்னகையை தரிசிப்போம். இப்படி ஏற்றப்படும் தீபங்களின் உண்மை தத்துவம் என்னவென்று ஆராய்ந்தால் நிச்சயம் முன்னோர்கள் அறிவை எண்ணி வியப்போம்.
அலங்காரம் முடிந்து முதலில் ஒன்பது திரியிட்ட தீப ஆரத்தி காட்டப்படும். இது ஒன்பது கோள்களையும் வணங்கி பின் அவற்றை சாட்சியாக வைத்து வழிபடுவதாக ஐதீகம்.
அடுத்து, ஏழு திரியிட்ட தீபம் காட்டப்படும். இது மனித உடலுக்குள் உள்ள ஏழு ஆதாரங்களின் வழியாக பிரபஞ்ச பேராற்றல் உள் நுழைந்து சக்கரங்களை தூய்மை செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.
அடுத்து, மூன்று முக தீப ஆராதனை. ஆணவம், கன்மம், மாயை போன்ற மூன்று நிலைகளில் மனம் இயங்குவதால் மனதை ஆராய்ந்து வேண்டியதை தக்க வைத்தும், வேண்டாததை அகற்றியும் வாழ்ந்தால் மன மாசுகள் களையப்படும் என்ற தத்துவத்தை இது உணர்த்துகிறது.
அடுத்து, இரண்டு முக விளக்கு. இது நம் உடலில் இயங்கும் இடகலை, பிங்கலை நாடிகளை தூய்மை செய்தால் முன்னோர் கோபத்தில் இருந்து விடுபட முடியும் என்பதன் அர்த்தமாகிறது.
அடுத்து, ஒரு முக தீப ஆரத்தி. உலகில் இருப்பது ஒன்றுதான். அந்த ஒன்றே பலவாகி தோற்றப் பொருளாகி இருக்கிறது. அனைத்தும், அனைவரும் ஒன்றே அன்றி வேறில்லை எனும் மாபெரும் உண்மையை உணர்த்தும் தத்துவமே ஒரு முக தீப ஆரத்தி தத்துவ வழிபாடு ஆகும்.
ஆன்மிகம் எனும் உண்மையை உணர்ந்து, அதன் நெறிகளில் உள்ள உன்னதத்தைத் அறிந்து, உத்தமராய் வாழவே முன்னோர்கள் ஒவ்வொரு சடங்கு முறைகளும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதைப் புரிந்து வழிபட்டால் நாமும் மனிதருள் உத்தமராகலாம்.