சிவபெருமானை முழு முதற்கடவுளாக வணங்கும் சிவநெறி சைவ சமயத்தில் ஆறு கால பூஜை ஆலயங்களில் ஆகம முறைப்படி தினசரி அடிப்படையில் நடைபெறுகின்றன. ஆறு கால பூஜை என்பது தெரியும். ஆனால், அதன் அடிப்படை காரணம் என்னவென்பதைத் தெளிவாக தெரிந்து கொள்வோம்.
மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். இது வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் ஆகிய ஆறு பொழுதுகள் கொண்டது. நாம் ஓர் ஆண்டாக கருதும் தேவர்களின் ஒரு நாளின் வைகறைப் பொழுதானது மார்கழி மாதமாகும். அந்த மாதத்தில் விடியற்காலையில் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. சைவ சமயத்தில் மார்கழி மாதத்தில்தான் ஆருத்ரா தரிசனம் அபிஷேகம் நடைபெறும். அடுத்து, மாசி மாதமானது தேவர்களின் காலைப் பொழுதாகும். மாசி மாத பூர்வபட்ச சதுர்த்தசி திதியில் இறைவனுக்கு காலை நேரத்தில் அபிஷேகம் நடைபெறும்.
தேவர்களுக்கு சித்திரை மாதத்தில் வரும் உச்சிக்காலம். எனவேதான் சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் தேவர்களுக்கு மாலைப் பொழுது என்பதால் ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் இறைவனுக்கு மாலை வேளையில் அபிஷேகம் செய்யப்படுகிறது.
ஆவணி மாதம் தேவர்களுக்கு இரவுப் பொழுது ஆகும். அந்த மாத பூர்வபட்ச சதுர்த்தசி திதியில் இறைவனுக்கு இரவு நேர அபிஷேகம் நடத்தப்படுகிறது. புரட்டாசி மாதம் தேவர்களுக்கு அர்த்த ஜாம வேளை என்பதால் அந்த மாத பூர்வபட்ச சதுர்த்தசி திதியில் அர்த்தஜாம வேளை அபிஷேகம் நடைபெறுகிறது.
இந்த ஆறு அபிஷேகங்களையும் குறிக்கும் விதமாகவே கோயில்களில் தினமும் இறைவனுக்கு ஆறு கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. சில சிவன் கோயில்களில் மட்டும்தான் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. இன்னும் சில கோயில்களில் காலை, உச்சி, சாயரட்சை இறுதியாக அர்த்தசாம பூஜை செய்து, பள்ளியறை பூஜையுடன் முடிவடையும். இதுவே ஆறு கால பூஜையின் தாத்பரியம் ஆகும்.