இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும் வேறுபட்டுத் தெரிவதற்கான முக்கியக் காரணம் இங்கிருக்கும் கோயில்கள்தான் ஆகும். இங்கு பழம்பெருமை பேசும் கோயில்களும், அதிசயங்களும் நம்மைப் பெருமைக்குள்ளாக்குவது மட்டுமல்லாமல், வியக்கவும் வைக்கிறது. அப்படிப்பட்ட ஆச்சர்யப்படுத்தும் கோயில்தான் கர்நாடக மாநிலம், ராய்சூர் மாவட்டத்தில் தேவதுர்கா தாலுகாவில் காப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் தன்னுள் பல அதிசயங்களை அடக்கி வைத்துள்ளது என்று கூறலாம்.
இந்தக் கோயில் 800 வருடங்கள் பழைமையானதாகும். இக்கோயிலைக் கட்டியவர் கல்யாண சாளுக்கியர் ஆவார். இக்கோயிலில் ஹனுமன் சிலையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நிறைய கோயில்கள் கல்யாண சாளுக்கியர் காலத்தில் இங்கே கட்டப்பட்டிருக்கின்றன. ஹனுமன், நந்திகேஸ்வரர், சிவன் போன்றவர்களுக்கு கட்டப்பட்ட கோயில்கள் சிதிலமடைந்து விட்டன. இதில் பழைமையானது லக்ஷ்மி வெங்கடேஸ்வரர் சிலையாகும். ஸ்ரீ ராகவேந்திர சுவாமி இக்கோயில் சிலையை நேரடியாக சென்று தரிசித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோயில் மிகவும் பிரபலமாகும். பெருமாளுக்கு நித்யப்படி பூஜைகள் தினமும் நடைபெறுகின்றன. வைணவத் திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன. இங்கே மண்சாளம்மனுக்கும் கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மண்சாளம்மனை கிராமத்துக் கடவுளாக மக்கள் கும்பிடுகிறார்கள். மண்சாளம்மன் 3 அடி உயர சிலையாக இங்கே காட்சி தருகிறார். மண்சாளம்மன் பார்வதி தேவியின் அவதாரம் என்று கூறப்படுகிறது.
இக்கோயில் அருளும் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஷ்வரர் திருச்சிலைக்கு செய்யப்படும் அபிஷேகத்தின்போது நிகழும் அதிசயத்தைக் காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இச்சிலைக்கு வெந்நீரால் செய்யப்படும் அபிஷேக நீர், கீழே இறங்கும்போது குளிர்ந்த நீராக மாறிவிடுகிறதாம். இச்சிலைக்கு சுடுநீரால் அபிஷேகம் செய்யும்போது, நீர் தலையிலிருந்து கால்களை அடையும்போது குளிர்ந்து விடுகிறது. கால்களில் இருக்கும் நீர் குளிர்ச்சியாகவும், தலை இன்னும் சூடாகவே இருப்பதாகக் கூறுகிறார்கள். இதுவே வயிற்றிலிருந்து நீரை ஊற்றி பார்த்தால் சுடுநீராகவே இருக்கிறதாம். ஆனால், தலையிலிருந்து ஊற்றினால் மட்டுமே குளிர்ந்த நீராக மாறுகிறது.
இந்த அதிசயத்தை சிலர் முழுமனதுடன் நம்புகிறார்கள். இன்னும் சிலரோ இதற்கான விளக்கத்தைத் தேடுகிறார்கள். இந்த சிலை வடிவமைக்கப்பட்ட கல்லிற்கு அதை சுற்றியுள்ள வெப்பநிலையை மாற்றக்கூடிய குணமுள்ளதாக சிலர் நம்புகிறார்கள்.
அதிசயங்கள் நிறைந்த கோயில்கள் இந்தியாவில் எத்தனையோ உள்ளன. அந்த வகையில் இதுவும் ஒன்றாகும். நிறம் மாறும் லிங்கம், அபிஷேக நெய்யை வெண்ணெய்யாக மாற்றும் அதிசயம் என்று இதுபோன்ற பல அதிசயம் கொண்ட சிலைகள் உள்ளன. எனினும், இவற்றையெல்லாம் ஆராயாமல், கடவுளை மட்டும் காணுவது சிறந்ததாகும்.
எனவே, இத்தகைய அதிசய கோயிலையும், அதில் ஏற்படும் அதிசய நிகழ்வையும் காண்பதற்காகவே இக்கோயிலுக்கு ஒருமுறையாவது சென்று லக்ஷ்மி வெங்கடேஸ்வரர் தரிசனத்தைப் பெற்றுத் திரும்புவது மிகவும் விசேஷமாகும்.