இந்தியாவில் கோடை காலம் தொடங்கி விட்டாலே பலருக்கு பல்வேறு விதமான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். அதில் குறிப்பிடும்படியாக சிலருக்கு அதிக வெப்பத்தால் ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்படலாம். தூசி, மாசு மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணங்களால் ஒவ்வாமை எதிர்வினைகள் தூண்டப்பட்டு, அரிப்பு, தும்மல், கண்களில் நீர் வடிதல் மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். இத்தகைய அலர்ஜி பிரச்சனையிலிருந்து பாதுகாப்புடன் இருக்க இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பின்பற்றினாலே போதும்.
தூசி அதிகம் இருக்கும் நேரங்களில் வீட்டிலேயே இருங்கள்: கோடைகாலத்தில் பிற்பகல் வேலைகளில் தூசி, புழுதி, மகரந்தங்களின் அளவு அதிகமாக இருக்கும். இவை நம் உடலுக்குள் நுழைந்தால் அலர்ஜி தொந்தரவுகளை ஏற்படுத்தலாம். எனவே இத்தகைய உச்ச நேரங்களில் வீட்டுக்குள்ளேயே இருப்பது நல்லது. இதன் மூலமாக காற்றினால் பரவும் ஒவ்வாமை பாதிப்பைக் குறைத்து தும்மல் போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.
ஜன்னல்களை மூடி வையுங்கள்: வெயில் காலத்தில் வெக்கையாக இருந்தாலும், ஏற்கனவே ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் ஜன்னல்களை மூடி வைப்பது நல்லது. இது மகரந்தம் மற்றும் தூசிகளை வீட்டினுள் வராமல் தடுக்கும். வீட்டின் உள்ளே குளிர்ச்சியாக இருக்க ஏர் கண்டிஷனிங் அல்லது ஃபேன்களைப் பயன்படுத்துங்கள். ஏசியில் உள்ள ஃபில்டர்கள் காற்றின் தரத்தை அதிகரித்து ஒவ்வாமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் வீட்டின் உட்புறத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
காற்று சுத்திகரிப்பு இயந்திரங்கள்: முடிந்தால், காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு நல்ல பலன் கொடுக்கும். இந்த இயந்திரங்கள் தூசி, மகரந்தம் செல்லப்பிராணிகளின் மெல்லிய முடிகள் போன்றவற்றை வடிகட்டிவிடும் என்பதால், ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
தனிப்பட்ட சுகாதாரம்: ஒவ்வாமை ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, உங்களது தனிப்பட்ட சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வெளியே சென்றுவிட்டு வந்தால் உடனடியாகக் குளித்து புதிய உடைகளை மாற்றிக் கொள்ளுங்கள். இது உங்கள் உடல் மற்றும் துணிகளில் இருக்கும் தூசி போன்றவற்றை அகற்ற உதவும்.
சரியான படுக்கை: இரவில் தூங்கும் நேரத்தில் ஏற்படும் அலர்ஜி பாதிப்பைத் தடுக்க, சரியான படுக்கை பயன்படுத்த வேண்டியது அவசியம். எனவே உங்கள் தலையணை மற்றும் மெத்தைக்கு ஹைபோ அலர்ஜெனிக் உரைகளைப் பயன்படுத்துங்கள். அவ்வப்போது பெட்ஷீட்டை துவைத்து பயன்படுத்தவும். இது உங்களுக்கு ஒவ்வாமையால் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்க உதவும்.
இறுதியாக, நீங்கள் எல்லாவிதமான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ நிபுணர்களை அணுகுவது நல்லது. இது சரியான நேரத்தில் சிகிச்சை பெற்று பாதிப்பை விரைவாகக் குறைக்க வழிவகுக்கும். எனவே எதிலும் அலட்சியம் காட்டாமல் உடனடியாக முடிவெடுப்பது அவசியமானது. மேற்கூறிய வழிகளைப் பின்பற்றி கோடைகாலத்தில் அலர்ஜி பாதிப்புகளில் இருந்து நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.