
பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் வசம்பு இருக்கும். வசம்பிற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை உண்டு. வசம்பைக் கொண்டு யாரை வேண்டுமானாலும் வசியப்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வசம்பின் பயன்களைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
சித்த மருத்துவத்தில் மிகவும் முக்கியமான மருந்தாக வசம்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் பல பிரச்னைகளை தீர்ப்பதற்கு வசம்பு உதவுகிறது. வசம்பு காரத்தன்மை உடையது. வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளை சரிசெய்து பசியை நன்கு தூண்டும்.
வசம்பு கொடிய விஷங்களுக்கு மருந்தாகவும், விஷ முறிவையும் ஏற்படுத்தும். இரண்டு தேக்கரண்டி வசம்பு பொடியுடன் தேனைக் கலந்து சாப்பிட்டால் எந்த வித தொற்றுநோயாக இருந்தாலும் அதை குணப்படுத்தும்.
வசம்பை நெருப்பில் சுட்டு அதை தேனில் கலந்து குழந்தையின் நாக்கில் தடவி வந்தால், அந்த குழந்தைக்கு வாந்தி, பேதி போன்ற பிரச்னைகள் இருந்தாலும் அது சரியாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் சின்ன சின்ன தொற்றுகள் வராமல் தடுக்கும். சூடான நீரில் மஞ்சள் தூள், கருவேப்பிலை, வசம்பு பொடி சேர்த்து கிருமிநாசினியாகவும் பயன்படுத்தலாம்.
வசம்பு சாஸ்திர ரீதியாக செல்வத்தின் அடையாளமாக கருதப்படுவதால் ஆறு மணிக்கு மேல் இதை யாருக்கும் தானமாக தரமாட்டார்கள். பசு நெய்யில் விளக்கேற்றி அந்த தீயில் வசம்பை நன்றாக சுட்டு அந்த கரியை நெய்யோடு சேர்த்து வசம்பு மை உருவாக்கப்படுகிறது.
இந்த மையை உச்சந்தலையில், நெற்றியில் வைப்பதால் முகவசியம் ஏற்படுகிறது. தொழில் தொடங்கும் போது இந்த மையை வைத்துக்கொண்டு தொடங்கினால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த வசம்பு மையை பயன்படுத்தும் போது காரியத்தடை நீங்கி எல்லா விஷயத்திலும் வெற்றிக்கிட்டும் என்று சொல்லப்படுகிறது. செல்வம் இருக்கும் இடமான நகை, பணம், சொத்துப்பத்திரம் போன்றவற்றில் ஒரு சிறு அளவு வசம்பை வைத்தால் அது செல்வத்தை மென்மேலும் ஈர்த்துத் தரும்.
வசம்பை பூஜையறையில் வைத்தால் தெய்வீகசக்தி அதிகரிக்கும், குலதெய்வம் வசியம் செய்யப்படும். தீயசக்தி வீட்டில் அண்டாது. வீட்டில் கடன் தொல்லை தீர வசம்பு தீபம் ஏற்றுவது நல்ல பலனைத் தரும்.