தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் உள்ள பாம்பன் என்னும் இடத்தில் பிறந்தவர் அப்பாவு. சிவச்சீலர் சாத்தப்ப பிள்ளைக்கும் செங்கமலம் அம்மையாருக்கும் 1850ம் ஆண்டில் தவப் புதல்வனாய் பிறந்தார். இவர் பிறந்த ஊரின் பெயரால் பாம்பன் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். இவர் தமது 13ம் வயதிலேயே முருகன் மேல் பாடல்கள் இயற்ற ஆரம்பித்து விட்டார். இவருடைய மானசீக குரு திருப்புகழை இயற்றிய ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள். 1878 ல் இவருக்கு காளிமுத்தம்மையோடு திருமணம் நடைபெற்றது. இவருடைய பெண் குழந்தை நோய்வாய்ப்பட்டபோது முருகப்பெருமான் திருக்கரங்களாலேயே திருநீறு பூசப்பட்டு குணமடைந்த தெய்வீக நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது.
இவரை சிறு வயதில் ஈர்த்த நூல் கந்தசஷ்டி கவசமாகும். அதை தினமும் பாராயணம் செய்து, அந்தத் தூண்டுதலிலேயே 1891ல் இவர் சண்முகக் கவசம் என்னும் அடியவர்கள் பிணி தீர்க்கும் நூலை இயற்றினார். முருகப்பெருமான் குறித்து 6666 பாடல்களைப் பாடியுள்ளார் பாம்பன் சுவாமிகள். ஒரு சமயம் வெப்பு நோயினால் அவதியுற்ற பாம்பன் சுவாமிகள் முருகன் மேல், 'குமாரஸ்தவம்' என்னும் பாடலை இயற்றிப் பாட, நோய் அக்கணமே நீங்கியது. இப்போதும் பக்தர்களால் 'குமாரஸ்தவம்' என்னும் இந்தப் பாடல் தினந்தோறும் பக்தியுடன் வீடுகளிலும், முருகன் கோயில்களிலும் பாடப்படுகிறது. நிறைய கோயில்களில் அங்கே வரும் பக்தர்கள் பாராயணம் செய்வதற்கு வசதியாக, முருகன் சன்னிதியின் பக்கச் சுவரிலேயே 'குமாரஸ்தவம்' எழுதப்பட்டு இருப்பதைப் பார்க்கலாம். முருகன் மேல் இவர் கொண்ட தீவிர பக்தியால் இவர், 'பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்' எனவும் அழைக்கப்பட்டார்.
1895ல் சன்யாசம் பெற்ற பாம்பன் சுவாமிகள் கனவில் முருகன் இட்ட கட்டளைப்படி, மெட்ராசுக்கு வந்தார். 1923ல் பாம்பன் சுவாமிகளுக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அவரது இடது கால் எலும்பில் ஒரு முறிவு ஏற்பட்டது. அவர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் ஒரு அறுவை சிகிச்சை செய்து அவரது இடது காலை துண்டிக்க வேண்டும் என்று சொன்னார்கள். பாம்பன் சுவாமிகள் 'நடப்பது நடக்கட்டும்' என்று முருகனை இடைவிடாது பிரார்த்தித்தார். அப்போது ஒரு அசரீரி வாக்கு அவரை மருத்துவமனையிலேயே 15 நாட்கள் இருக்கச் சொல்லி, எலும்பு முறிவு குணமாகி விடும் என்று சொன்னது.
அவருடைய அருகிலேயே இருந்த அவருடைய சீடர் சுப்ரமணிய தாசர், சுவாமிகள் இயற்றிய சண்முகக் கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு மானசீகக் காட்சியாக முருகனின் வேல் சுவாமிகளின் காலில் அடிபட்ட இடத்திற்குள் ஊடுருவதைக் கண்டார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பதினொன்றாம் நாள் பாம்பன் சுவாமிகள் தனது அறைக்கு மேல் வானில் இரண்டு மயில்கள் நடனமாடுவதைக் கண்டார். அதேபோல் முருகன் குழந்தை வடிவில் தன் அருகே படுக்கையில் படுத்திருப்பதை அவரால் காண முடிந்தது. அடுத்த நாள் பாம்பன் சுவாமிகளின் காலை பரிசோதித்த மருத்துவர்கள் அதிசயித்துப் போயினர். எலும்பு முறிவு தன்னால் குணமாகி விபத்து நேர்ந்த சுவடேயில்லை. அந்த நேரத்தில் இருந்த ஆங்கிலேய மருத்துவர்களும் இந்த அதிசயத்தைக் கண்டு இது நிச்சயமாக இறைவன் நிகழ்த்திய அற்புதம்தான் என்று கூறினார்கள்.
கலியுக வரதனாகிய கந்தவேள் நடத்திக் காட்டிய அற்புதம் இது. இந்த நாளின் நினைவாக, 'மயூர வாகன சேவை' என்று ஒரு நிகழ்வு சுவாமிகளால் ஏற்படுத்தப்பட்டு மார்கழி மாத வளர்பிறை பிரதமை நன்னாளில் இன்று வரை திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயிலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, சென்னை அரசினர் மருத்துவமனையில் இந்த நிகழ்வின் நினைவாக மன்றோ வார்டில் பாம்பன் சுவாமிகள் திருவுருவப் படம் மாட்டப்பட்டிருக்கிறது. 'வேலும் மயிலும் துணை' என்பது வெறும் சொற்களல்ல, மந்திர சக்தி வாய்ந்த முருகன் துதி என்றும் பக்தர்கள் இந்த சம்பவத்திலிருந்து புரிந்து கொண்டார்கள்.
பூரண குணமடைந்து வந்த பாம்பன் சுவாமிகள் 'மகா தேஜோ மண்டல சபை அமைப்பு' என்ற வழிபாட்டு அமைப்பை ஏற்படுத்தினார். தான் சமாதி அடையப்போவதை முன்கூட்டியே உணர்ந்த பாம்பன் சுவாமிகள், தனது சீடர் சுப்ரமணிய தாசரை தனக்கு திருவான்மியூரில் சமாதி அமைக்க இடம் பார்க்கச் சொன்னார். அப்போது சுப்ரமணிய தாசருக்கு ஒரு மயில் பறந்து வந்து சமாதி அமைக்க வேண்டிய இடத்தைக் காண்பித்ததாகக் கூறுகிறார்கள். அதேபோல் வங்கக்கடல் ஓரம் திருவான்மியூரில் அவர் பூதத்திருவுடல் அடக்கம் செய்யப்பட்டு மகாசமாதி அமைக்கப்பட்டது. அந்த இடத்தில் ஒரு திருக்கோயிலும் கட்டப்பட்டு ஒரு முருகன் சன்னிதியும் அமைக்கப் பெற்றது. ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் எங்கெங்கிருந்தோ வரும் பக்தர்கள் இரவு இங்கேயே தங்கி வழிபட்டு காலையில்தான் வீடு திரும்புகிறார்கள். இந்தத் திருக்கோயிலில் வந்து முருகனை வழிபடும் பக்தர்களை பாம்பன் சுவாமிகள் கைவிடுவதே இல்லை என பக்தர்கள் மெய்சிலிர்த்துக் கூறுகிறார்கள்.
இக்கோயிலில் எழுதப்பட்டிருக்கும், 'என்னை யாதரித்தருள் ரகசிய சக்தி என்னை நம்பினோரை ஆதரியாது நிற்குமோ? ஐயம் வேண்டாம்' என்னும் அவருடைய வாக்கு மந்திர வாக்காக அவருடைய பக்தர்களால் போற்றப்படுகிறது.
இப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்த பாம்பன் சுவாமிகள் திருக்கோயில் கும்பாபிஷேகம் 36 வருடங்களுக்குப் பின் இன்று (12.07.2024) வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து மண்டல பூஜைகளும் நடைபெற உள்ளன. அற்புதங்கள் பல நிகழ்த்தும் பாம்பன் சுவாமிகள் திருக்கோயிலின் மண்டல பூஜைகளில் கலந்து கொண்டு, பக்தர்கள் அவரது பேரருளைப் பெற்று பெருவாழ்வு வாழ்வோம்.