பகவத்பாதர் ஆதிசங்கரர் அருளியது கனகதாரா ஸ்தோத்திரம். கனகதாரா ஸ்தோத்திரத்தை பூஜை அறையில் குத்து விளக்கேற்றி மகாலட்சுமி படத்திற்கு பூமாலை சாத்தி, பால், வாழைப்பழம் நெய்வேத்தியம் செய்து கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் பெரியாற்றின் கரையில் காலடி என்ற ஊர் உள்ளது. அங்கு சிவகுரு ஆரியாம்பாள் தம்பதியின் மகனாக எட்டாம் நூற்றாண்டில் அவதரித்தவர் ஆதிசங்கரர். சிறு வயதில் அவர் குருகுலத்தில் சேர்க்கப்பட்டார். குருகுல வழக்கப்படி பிட்ஷை எடுத்துதான் குருவுக்கு பணிவிடை செய்ய வேண்டும். அதன்படி ஆதிசங்கரர் ஒரு குடிசை வீடு முன்பு நின்று, ‘பவதி பிட்சாந் தேஹி’ என்று குரல் கொடுத்து பிட்ஷை கேட்டார். இதைக் கேட்டதும் அந்த வீட்டில் இருந்த பெண் நடுங்கினாள்.
தானம் செய்ய எந்த உணவுப் பொருளும் இல்லாததால் தவித்தாள். வீடு முழுக்க தேடிய அவளுக்கு காய்ந்து போன நெல்லிக்கனி ஒன்றுதான் கிடைத்தது. அதை எடுத்து வந்து கண்ணீர் மல்க ஆதிசங்கரரிடம் கொடுத்து, ‘குழந்தாய் என்னிடம் இதுதான் உள்ளது’ என்று கொடுத்தார். அந்தப் பெண்ணின் தான உள்ளத்தையும் ஏழ்மையையும் உணர்ந்த ஆதிசங்கரர் வேதனை பட்டார்.
உடனே மகாலட்சுமியை மனமுருகப் பாடினார். கனகதாரா ஸ்தோத்திரம் என்ற தொகுப்பை அவர் பாடி முடித்ததும் அந்த வீட்டுக்குள் தங்க நெல்லிக்கனிகள் மழை போல பொழிந்தன. ஒரு அட்சய திருதியை தினத்தன்றுதான் தங்க நெல்லிக்கனி மழை பொழிந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் காலடியில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை தினத்தன்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது 32 நம்பூதிரிகள் 10 ஆயிரத்து எட்டு தடவை கனகதாரா ஸ்தோத்திரத்தை சொல்வார்கள். பிறகு பக்தர்களுக்கு தங்க நெல்லிக்கனிகள் வெள்ளி நெல்லிக்கனிகள் மற்றும் கனகதாரா யந்திரம் வழங்கப்படும். இந்த நெல்லிக்கனிகளை பூஜை அறையில் வைத்து கனகதாரா ஸ்தோத்திரம் படித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
இந்தப் பொருட்கள் எல்லாம் கிடைக்காவிட்டாலும் கனகதாரா ஸ்தோத்திரத்தை தினமும் மாலையில் மகாலட்சுமியை நினைத்து குத்து விளக்கேற்றி மகாலட்சுமி படத்திற்கு முன் அமர்ந்து பாராயணம் செய்தாலே வீட்டில் செல்வம் பெருகும்.