

நவகிரகங்களுக்குள் சூரியனே எல்லாவற்றிற்கும் மையம் ஆவார். ஜோதிடத்தில் சூரியனை ஆத்ம காரகன் என்று அழைப்பார்கள். தந்தை, அரசாங்க பதவி ,ஆட்சி, கண்கள், தலை போன்ற முக்கிய விஷயங்களை கூறுவதில் தனிப்பட்ட ஜாதகத்தில் சூரியன்தான் தீர்மானிக்கின்றன. சூரியன் சரியான திசையில் இல்லை எனில் மேலே சொல்லப்பட்ட விஷயங்களில் பிரச்னைகள் வரும். எனவே நவகிரகங்களுக்குள் சூரியனுக்கு அமைந்துள்ள கொளப்பாக்கம் தலத்தை தரிசிக்கும்போது பிரச்னைகள் அகலுகின்றன.
அமைவிடம்:
கொளப்பாக்கம் சென்னையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில், போரூர் சந்திப்பில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ராமாவரத்தில் இருந்தும் இத்தலத்தை அடையலாம்.
இத்தல இறைவன் -அகத்தீஸ்வரர்.
இறைவி - ஆனந்தவல்லி
தல விருட்சம்-அரசமரம்
தல தீர்த்தம் - அம்ருத புஷ்கரணி
தோஷம் நீங்குதல்:
1300 ஆண்டுகள் பழமையானது இத்தலம். தனி சந்நிதியில் சூரிய பகவான் அருள் பாலிக்கிறார். அவர் கருவறையின் மேல் ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைச் சக்கர ரதத்தை அவர் செலுத்தும் சுதைச் சிற்பம் கண்களைக் கவர்கிறது. ஈசனை நோக்கிய வண்ணம் தரிசனம் அளிக்கும் இவர், இத்தலத்தில் பிரதானமாக வழிபடப்படுகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் சூரியபகவானுக்கு சிவப்புநிற ஆடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து, அவருக்கு உரிய தானியமான கோதுமையை அவர் காலடியில் வைத்து, மனம் உருகவேண்டி சூரிய தோஷங்கள் நீங்கப் பெறுகின்றனர்.
உபதேசம்:
ராம, ராவண யுத்தத்தின்போது ராவணனை மாய்க்க ராமருக்கு உதவ நினைத்தார் அகத்தியர். அப்பொழுது ஆதித்ய ஹ்ருதயம் என்னும் மகத்தான சூரிய துதியை உபதேசித்தார். ராமபிரானும் அதை நம்பிக்கையுடன் பாராயணம் செய்து, சோர்வும் மன அழுத்தமும் நீங்கப் பெற்று இராவணனை வென்றார் என்று கூறப்படுகிறது. அதனால் இன்றும் உடல், மனநல பாதிப்பு உடையவர்கள் நம்பிக்கை உடன் ஆதித்ய ஹ்ருதய துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால், அந்த பாதிப்புகள் கட்டாயம் நீங்கிவிடும் என்பது அனுபவ ஐதீகமாக சொல்லப்படுகிறது.
பிரார்த்தனை:
பிரதோஷ நாட்களிலும், சிவராத்திரி நேரங்களிலும் பக்தர்கள் இத்தலம் வந்து, அம்மையப்பர் அருளோடு, சூரிய பகவானின் திருவருளையும் பெறுகின்றனர். நாமும் சென்று வணங்கி அவர் அருளைப் பெறுவோமாக!