ஐஸ்வர்யங்களை அள்ளிக் கொடுக்கும் அட்சய நவமி வழிபாடு!

நவம்பர் 10, அட்சய நவமி
Akshaya Navami worship brings wealth
Akshaya Navami worship brings wealth
Published on

பொதுவாக, அஷ்டமி, நவமி என்றால் ஆகாத நாட்கள் என்றே கருதப்படுகிறது.  ஆனால், ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பால் அஷ்டமியும், ஸ்ரீ ராமர் பிறப்பால் நவமியும் முக்கியத்துவம் பெற்று போற்றுதலுக்குரிய நாட்களாயின. அதேபோல, வேறு சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் அஷ்டமி, நவமி வழிபாட்டுக்குரிய நாட்களாக விளங்குகின்றன. அப்படிப்பட்ட ஒரு அபூர்வமான நாள்தான் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் நவமி.  இதை ‘ஆம்லா நவமி’ என்றும் ‘அட்சய நவமி’ என்றும் சொல்கிறார்கள். 'தேவ உதவி ஏகாதசி'க்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த நவமி கொண்டாடப்படுகிறது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகள், தானங்கள் ஆகியவை இப்பிறவியில் மட்டுமின்றி, வரும் அனைத்து பிறவிகளிலும் துன்பங்கள் ஏதுமில்லாமல் சகல வளங்களுடன் நம்மை வாழ வைக்கும் வல்லமை படைத்ததாகக் கருதப்படுகிறது.

அட்சய திரிதியை தினத்திற்கு  இணையாக முக்கியத்துவம் வாய்ந்ததுதான் இந்த அட்சய நவமி. ‘அட்சய’ என்றால் வளர்ந்துகொண்டே இருப்பது என்பதுதான் பொருள். அதனால்தான் அட்சய திரிதியை அன்று தங்கம், வெள்ளி, உப்பு போன்ற மங்கலப் பொருட்கள் வாங்கும் வழக்கம் வந்தது. அந்தப் பொருட்கள் நம் இல்லங்களில் வளர்ந்து நமக்கு செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

அதேபோன்று செல்வ வளத்தை பெருக்குவதோடு மட்டுமல்லாமல்,  நினைத்ததை நிறைவேற்றிக் கொடுக்கும் ஆற்றல் படைத்த நாள் இந்த அட்சய நவமி தினம். இந்த நாளில் நெல்லி மரத்திற்கு பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம் என்பதால் இதை ‘ஆம்லா நவமி’ என்றும் அழைக்கிறார்கள். சுக்ல பட்சத்தில் ஒன்பதாவது நாளில் இந்த அட்சய நவமி வருகிறது.

அட்சய நவமி தினம் சத்ய யுகம் துவங்கிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் செய்யும் தானங்கள், தர்மங்கள், வழிபாடுகள் நம்முடைய நல்ல கர்மாக்களை வலிமை அடையச் செய்து அவற்றின் பலன்களை நமக்குத் தரக்கூடியதாகும். இந்த ஆண்டு அட்சய நவமி தினம் இன்று (நவம்பர் 10ம் தேதியன்று) அனுசரிக்கப்படுகிறது. நவம்பர் 9ம் தேதி மாலை 6.51 மணிக்குத் துவங்கி நவம்பர் 10ம் தேதி மாலை 4.59 மணி வரை இந்த நவமி திதி உள்ளது. இந்த நேரங்களில் மகா விஷ்ணுவையும், மகாலட்சுமியையும் வழிபடுவதால் அள்ள அள்ளக் குறையாத செல்வ வளத்தையும்  புண்ணியத்தையும் தரும்.

‘ஆம்லா’ என்றால் நெல்லிக்கனி. நெல்லிக்கனியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுவது போல நெல்லி மரத்தில் மகாவிஷ்ணு வாசம் செய்வதாய் சொல்லப்படுகிறது. அதனால் நெல்லி மரத்தை இன்றைய தினத்தில் பிரதட்சணம் வந்து வழிபட்டால் செல்வ வளம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் ஆகியவை கிடைக்கும். அத்துடன், ஏழை எளியவர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை தானமாக வழங்கலாம். ஆம்லா நவமி அன்று நெல்லி மரத்தின் இலைகளைக் கொண்டு மகாவிஷ்ணுவிற்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் விசேஷமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
எறும்புகள் வழிகாட்டி கண்டறியப்பட்ட முருகன் திருக்கோயில்!
Akshaya Navami worship brings wealth

‘அட்சய’ என்றாலே முடிவில்லாமல் பெருகும் என்றும் ஒரு பொருள் உண்டு.  அளவில்லாத புண்ணியத்தையும் செல்வ வளத்தையும் அள்ளித் தரும் புண்ணிய நாளாக அட்சய நவமி நாள் விளங்குகிறது. இந்த நாளின் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து புனித நதிகளிலோ அல்லது அருகில் இருக்கும் நீர் நிலைகளுக்கோ சென்று நீராட வேண்டும். இதனால் மனதும், உடலும், ஆன்மாவும் தூய்மையாகும். பிறகு நெல்லி மரத்திற்கு குங்குமம் வைத்து, பூக்கள் தூவி அதைச் சுற்றி வந்து வழிபட வேண்டும். இந்த நாளில் நெல்லிக்காய் சாப்பிட்டால் நோய்கள் நீங்கி, ஆரோக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. இந்த நாளில் விவசாயிகள் கோயிலுக்குச் சென்று தானியங்களை பெருமாளுக்கு சமர்ப்பித்து அமோக விளைச்சலுக்கு வேண்டிக் கொள்ளலாம். அதேபோல நினைத்ததை நிறைவேற்றிக் கொடுக்கும் நாள்தான் இந்த அட்சய நவமி நன்னாள் வழிபாடு.

மேற்கு வங்க மாநிலத்தில் இதை, 'ஜகதாத்ரி பூஜை' என்று கொண்டாடுகிறார்கள்.  வட மாநிலங்கள் அனைத்திலும் இதை ‘ஆம்லா நவமி’ என்று சிறப்பித்துக் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் விரதம் அனுசரித்து மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமி தாயாரையும் துதித்து வழிபடுகிறார்கள்.

தானம், தர்மங்கள், வழிபாடு என்பது இந்த நாளின் மிக முக்கியமான அம்சங்கள்.  அட்சய நவமியன்று செய்யும் எந்த நல்ல காரியமும் பலனளிக்காமல் போகவே போகாது என்பது மக்களின் நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com