
வளமான வாழ்வுக்கு லஷ்மி குபேர பூஜை செய்வது வழக்கம். இந்த பூஜையை பௌர்ணமி மற்றும் அமாவாசைகளில் செய்தால் சிறந்த பலனை தரும் என்ற நம்பிக்கை உள்ளது. குபேரன் இருக்கும் திசை வடக்கு. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தரக்கூடியவர். வற்றாத நிறைந்த செல்வத்தைத் தரும் அஷ்டதிக் பாலவர்களில் குபேரனும் ஒருவர். குபேரனால் பூஜிக்கப்பட்ட தலங்களுக்கு சென்று வழிபட செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் அட்சய திருதியை அன்று லட்சுமி குபேரர் கோவிலுக்கு சென்று வழிபட வற்றாத செல்வத்தை பெறலாம். அட்சய திருதியை நாளில் லட்சுமி அஷ்டகம், ஸ்ரீ சுக்தம், ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பது செல்வ வளம் பெற உதவும்.
1. திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள்:
திருக்கோளூர் பெருமாளை பெருந்தவம் புரிந்து வழிபட்ட குபேரனை அவன் செய்த தவறுகளை மன்னித்து நவநிதிகளை தந்தருளிய இடம் இது. அதனால் தான் இன்றும் வறுமையில் வாழ்பவர்களும், செல்வம் இழந்தவர்களும், நிறைய செல்வம் பெருக வேண்டியும் இந்த வைத்தமாநிதிப் பெருமாளை வணங்கி சகல ஐஸ்வர்யங்களையும் பெறுகின்றனர். இங்குள்ள தீர்த்தம் குபேர தீர்த்தம். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக் கோவில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ளது.
2. திருவண்ணாமலை குபேர லிங்கம்:
திருவண்ணாமலை கிரிவலம் வரும் பொழுது குபேர லிங்கத்தை தரிசனம் செய்யலாம். இங்கு ஏழாவது லிங்கமாக விளங்கும் இது குபேரனால் வழிபடப்பட்ட லிங்கமாகும். செல்வ வளம் பெருக வழிபட வேண்டிய லிங்கம் இது.
3. தஞ்சபுரீஸ்வரர் ஆலயம்:
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தஞ்சபுரீஸ்வரர் ஆலயத்தில் குபேரன், குபேர மகாலட்சுமி ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. இங்கு தீபாவளி அன்று மகா குபேர ஹோமம் வெகு விமர்சையாக நடைபெறும். அமலேஸ்வரர் என்ற பெயருடன் திகழ்ந்த தஞ்சபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டதால், ஈசன் நவநிதிகளையும் தந்து அருள் புரிந்ததாக கூறப்படுகிறது.
4. 12 ராசிகளுக்கும் 12 குபேரர்கள் அருளும் செட்டிகுளம்:
திருச்சி துறையூரில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். ஆலயங்களில் பொதுவாக குபேரனின் உருவம் சிற்பமாகவோ, சுதை வடிவிலோ, கல்லிலோ காணப்படும். ஆனால் இங்கு கல் தூண்கள், கோபுர முகப்பு என பல இடங்களிலும் மொத்தம் 12 இடங்களில் குபேரன் சிற்ப வடிவில் காட்சி தருகிறார். அதாவது 12 ராசிகளுக்கும் இந்த குபேரர்கள் அருள் வழங்குவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ராசிக்காரரும் அந்தந்த ராசிக்கான குபேரரை வணங்கி வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்காக அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த 12 குபேரர்கள் தவிர மகா குபேரனின் சிற்பம் ஒன்றும் ஆலய கோபுரத்தில் உட்புறம் வடக்கு திசையில் உள்ளது.
5. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம்:
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலின் கிழக்கு கோபுர வாயிலுக்கு எதிரில் குபேர லிங்க கோவில் அமைந்துள்ளது. குபேரன் தவமிருந்து மகாலட்சுமியிடமிருந்து இந்த லிங்கத்தை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. இன்றும் சுக்கிர ஹோரையில் குபேர லிங்கத்திற்கு அர்ச்சனை செய்து வெண்பட்டாடை அணிவிக்க செய்து வழிபட வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது.
6. ரத்தினமங்கலம் லட்சுமி குபேரர் கோவில்:
இந்தியாவிலேயே லட்சுமி குபேரருக்கு என்று தனியாக உள்ள ஒரே கோவில் என்ற பெருமையைப் பெற்றது ரத்தினமங்கலம். சிரித்த முகத்துடன் இடது கையில் சங்க நிதியும், வலது கையில் பதும நிதியும் அடங்கிய கலசத்தை அணைத்துக் கொண்டு அன்னை லட்சுமியுடன், துணைவி சித்தரிணீயுடன் குபேரன் காட்சி தரும் ஆலயம் இது. அட்சய திருதியை அன்று பூஜையில் அமரும் பக்தர்களுக்கு நாணயங்களும், சிறிய குபேரன் சிலையும், பச்சை நிற குங்குமத்துடன் கூடிய அட்சய திருதியையின் சிறப்பு பிரசாதமான 'ஹரி பலம்' என்றழைக்கப்படும் நெல்லிக்கனியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இக்கோவில் வண்டலூர் உள்ள மிருகக்காட்சி சாலையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் கேளம்பாக்கம் செல்லும் வழியில் ரத்தினமங்கலத்தில் அமைந்துள்ளது.