அமர்நாத் குகை அதிசய பனி லிங்க ரகசியம்!

Amarnath Cave wonder snow lingam
Amarnath Cave wonder snow lingamhttps://magikindia.com

த்தனையோ சிவன் கோயில்களை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றில் இருக்கும் அதிசயமான சிவலிங்கங்களைக் கண்டு பிரமித்திருக்கிறோம். அவையெல்லாம் யாரோ ஒருவரால் செயற்கையாக பிரதிஷ்டை செய்யப்பட்டதேயாகும். இருப்பினும் அதுவே நமக்கு மெய்சிலிர்ப்பினை கொடுக்கிறது. ஆனால், வருடா வருடம் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் இயற்கையாகவே தோன்றும் பனி லிங்கத்தைப் பற்றி தெரியுமா? அதைக் காண பல்லாயிரம் பக்தர்கள் பல்வேறு இடர்களையும் பொருட்படுத்தாது சென்று தரிசித்துவிட்டு வருகிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்கம் என்னும் இடத்தில்தான் அமர்நாத் கோயில் உள்ளது. இந்த அமர்நாத் குகைக்கோயில் 12,756 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது இந்துக்களின் மிக முக்கியமான ஆன்மிகத் தலமாகக் கருதப்படுகிறது.

இந்தக் குகை சிந்து பள்ளத்தாக்கில் பனியாறைகளுக்கும், பனி மலைகளுக்கும் நடுவே அமைந்துள்ளது. கோடைக்காலத்தில் மட்டும் பக்தர்களுக்காக சில காலம் திறந்து வைக்கப்படும். 1989ல் 12,000 முதல் 30,000 வரை பக்தர்கள் கூட்டம் வந்தது. 2011ல் 6.3 லட்சம் பக்தர்கள் தரிசிக்க வந்தனர். 2018ல் 2.85 லட்சம் பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தந்தனர். அமர்நாத் குகை 51 சக்தி பீடங்களுள் ஒன்றாகும். இக்குகையை பக்தர்கள் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்தில் தரிசிக்க வரலாம். நிலவின் மாற்றத்தைப் பொறுத்து சிவலிங்கமும் மாறுபடும் என்று கூறப்படுகிறது.

இங்கு உருவாகும் சிவலிங்கம் சுயம்பு லிங்கமாகும். அதாவது, இயற்கையாகவே உருவாகக்கூடியதாகும். இக்குகை 130 அடி உயரம் கொண்டதாகும். இக்குகையின் மேலேயிருந்து சொட்டும் நீரானது பனியாக உருவாகி கீழிருந்து மேலெழும்பும். இதுவே லிங்கமாகக் கருதப்படுகிறது. அது தவிர, இன்னும் இரண்டு பனி லிங்கங்களை பார்வதி மற்றும் விநாயகர் என்று இங்குள்ள மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஒரு சமயம் பார்வதி தேவி, சிவபெருமானிடம் அவருடைய அழிவற்ற தன்மைக்குக் காரணம் கேட்கிறார். அந்த ரகசியத்தை பார்வதிக்கு சொல்வதற்காக சிவபெருமான் அவரை அமர்நாத் குகைக்கு கூட்டி வருகிறார். மனிதர்கள் யாராலும் வர முடியாத இடம் என்பதால் அங்கே சென்று அந்த தேவ ரகசியத்தை ஈசன் கூறுகிறார். நடுநடுவே பார்வதி தேவி சிவன் சொல்வதைக் கேட்கிறார் என்பதை தெரிந்து கொள்ள சத்தம் எழுப்பச் சொல்கிறார். ஆனால், பார்வதி தேவியோ நடுவிலேயே தூங்கி விடுகிறார். அந்தக் குகையில் இருந்த இரண்டு புறாக்களும் சத்தம் எழுப்ப, அது பார்வதி தேவிதான் என்று நினைத்து ரகசியத்தை கூறி விடுகிறார் சிவபெருமான். இதை இறுதியில் தெரிந்து கொண்டு கடும் கோபம் அடைந்து புறாக்களை கொல்ல முயல, அதற்கு புறாக்கள், ‘தங்களைக் கொன்றால் ரகசியம் பொய்யாகிவிடும்’ என்று கூறுகின்றன. எனவே சிவனும் புறாக்களுக்கு சாகாவரத்தை கொடுத்து விடுகிறார் என்பது கதை.

அமர்நாத் குகையை ‘புதா மாலிக்’ என்னும் முஸ்லிம் ஆடு மேய்பவரே 1869ல் முதலில் கண்டுபிடித்தார். ஒருமுறை புதா மாலிக்கிற்கு துறவி ஒருவர் பை முழுவதும் கரியை கொடுத்திருக்கிறார். அதை வீட்டிற்கு எடுத்து வந்து பார்த்தபோது அது தங்கமாக மாறியிருக்கிறது. இதனால் அந்தத் துறவிக்கு நன்றி கூற திரும்ப அந்த இடத்திற்கு சென்று பார்க்கையில் அங்கே அமர்நாத் பனி லிங்கத்தை தரிசித்திருக்கிறார். அதிலிருந்து அமர்நாத் குகையை பற்றி மக்களிடம் கூறத் தொடங்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
உடல் கழிவுகளை அகற்றி ஆரோக்கியம் தரும் ஆன்டி ஆக்கிடன்ட் உணவுகள்!
Amarnath Cave wonder snow lingam

இந்தக் குகையில் மட்டும் சிவலிங்கம் ஏன் உருவாகிறது என்பதற்கு எந்த பதிலும் இல்லை. அமர்நாத் நதியை தொடர்ந்து சென்றால், அங்கே எண்ணற்ற குகைகளைக் காணலாம். அங்கேயும் பனி சொட்டிக்கொண்டிருக்கும். ஆனால், எதுவும் சிவலிங்கமாவதில்லை இது ஒன்றைத் தவிர என்பது ஆச்சர்யமாகவே உள்ளது.

அமர்நாத் குகைக்கு செல்வதற்கு கண்டிப்பாக ஹெல்த் சர்டிபிகேட் மற்றும் யாத்திரை செல்வதற்கான அனுமதி பெற்றிருக்க வேண்டும். 13 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகள், 75 வயதிற்கு மேல் இருக்கும் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலமோ, நடந்தோ அல்லது குதிரை சவாரியோ செய்து அமர்நாத் லிங்கத்தை தரிசித்திவிட்டு வரலாம்.

அமர்நாத் குகைக்கு பயணம் செய்வது சற்று கடினமானதாக இருந்தாலுமே, சிவபெருமானின் தரிசனத்தை பெற வேண்டும் என்று பக்தர்கள் எப்பேர்ப்பட்ட இடர்களையும் எதிர்க்கொண்டு சென்று சிவனை தரிசித்துவிட்டு வருகிறார்கள் என்பது ஆச்சர்யமாகவே உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com