பொதுவாக, புத்தர் கோயில்களின் அமைப்பு இந்துக் கோயில்களில் இருந்து வேறுபடும். அதிலும் லிங்க வடிவிலான ஸ்தூபிகள் கொண்ட புத்தர் கோயில் ஒன்று அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. எங்கே தெரியுமா? ஆந்திர பிரதேசம், அனகாபள்ளி மாவட்டம் சங்கரத்தில் உள்ள போஜனகொண்டாவில் ஒரு முழு மலையையும் குடைந்து ஸ்தூபிகளாக செதுக்கப்பட்ட இரண்டாயிரம் வருட பழைமை வாய்ந்த புத்தர் கோயில்தான் அது. இந்த மலையில் புத்தர் சிலைகள் இரண்டு அடுக்குகளாக செதுக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. இந்த புத்தர் கோயிலை முன்மாதிரியாக கொண்டே வெளிநாடுகளில் உள்ள புத்த கோயில்கள் கட்டப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
போஜனகொண்டா 1906 மற்றும் 1908க்கு இடையில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்டு அதன் பல பகுதிகளில் லிங்க வடிவிலான ஸ்தூபிகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் இப்பகுதி லிங்கலகொண்டா எனவும் அழைக்கப்பட்டது. இது கட்டடக்கலை மற்றும் வரலாற்று சிறப்புக்கு தலைசிறந்த ஆதாரங்களாகத் திகழ்கிறது எனலாம். இங்கு கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் கி.பி. 4 மற்றும் 9ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதி என்று கூறுகின்றனர்.
போஜனகொண்டாவில் செங்குத்தான படிக்கு மேலே மகாசைத்யம் உள்ளது. ஒரே பாறையில் வெட்டப்பட்ட ஒரு குகையையும், நான்கு தூண்களால் செதுக்கப்பட்ட புத்தர் சிலையையும், மற்றொரு குகையில் ஒன்பது தூண்களுடன் செதுக்கப்பட்ட மற்றொரு சிலையையும் காணலாம். குடைவரை வாயிலில் துவார பாலகர்கள் சிலைகளும் காணப்படுகின்றன. மேலே தியானத்தில் அமர்ந்த இரு பெரிய அழகான புத்தர் சிலைகளையும் வெகு தொலைவிலிருந்தே காண முடியும்.
போஜனகொண்டா மற்றும் லிங்கலகொண்டா வளாகத்தில் மண் பாண்டங்கள், பெரிய செங்கற்கள், தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்கள் என பல அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. மலையில் மடங்கள், குகைகள் மற்றும் புத்தரின் சிலைகளைக் காணலாம்.
இங்குள்ள மலையில் அழகாக செதுக்கப்பட்ட கௌதம புத்தரின் சிலைகள் மிகவும் கவர்ச்சிகரமானவை. இந்தக் குகைகளுக்கு அருகில் புத்த துறவிகள் தியானம் செய்வதற்கான கட்டமைப்புகள் உள்ளன. மேலும், இரண்டு தளங்களில் கட்டப்பட்ட சைத்யாலங்கள், மஹாசைத்ய அடித்தளங்கள், மகா ஸ்தூபி மேடை, குகைகள் மற்றும் செங்கல் கட்டமைப்புகள் என பல சிறப்பு அம்சங்களை போஜனகொண்டா கொண்டுள்ளது.
இங்கு வருடந்தோறும் நடைபெறும் கனுமா பண்டிகை நாட்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரளாக வரும் புத்த துறவிகளுக்கு ‘கனுமா’ பண்டிகை நாளில் உள்ளூர் மக்கள் தங்கள் பயிர்களை தானமாக வழங்கியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சீனா, பர்மா, தைவான் போன்ற பல நாடுகளில் இருந்து ஏராளமானோர் கடல் மார்க்கமாக இங்கு வந்து பல ஆண்டுகளாக பௌத்தம் பயின்று வந்ததாகவும் இங்குள்ள கட்டடக்கலை பாணியைக் கண்டு அந்தந்த நாடுகளில் இதேபோன்ற அமைப்புகளைச் செய்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது தேசிய தொல்லியல் துறை போஜனகொண்டாவின் பராமரிப்பை கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.