ஸ்ரீ சக்கரத்தை காதணியாக அணிந்த அம்பிகை!

Ambika wearing Sri Chakra as earrings
Ambika wearing Sri Chakra as earrings
Published on

ஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்பனவற்றின் வடிவாகச் சிவபெருமான் வெவ்வேறு தலங்களில் அருள்புரிவதாக ஐதீகம். அவற்றுள் நீருக்கான திருத்தலம்தான் திருவானைக்காவல் திருக்கோயில். இக்கோயில் மூலவர் ஜம்புகேசுவரர் லிங்கம் உள்ள இடம் தரை மட்டத்துக்கும் கீழே அமைந்திருக்கிறது. அங்கே எப்போதும் நீர் கசிந்துகொண்டே இருக்கிறது. கடுமையான வறட்சிக் காலத்திலும் இங்கு ஈரப்பதம் குன்றுவதேயில்லை. அதனால்தான் இந்தத் தலம் சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் நீருக்கானது எனச் சிறப்பிக்கப்படுகிறது.

திருவானைக்காவல் தலத்தை, ‘திரு ஆனைக்கா’ எனவும் அழைக்கிறார்கள். திருச்சி மாவட்டம், காவிரிக் கரை ஓரத்தில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்திருக்கிறது இந்தத் திருக்கோயில். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், தாயுமானவர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது.

திருவானைக்காவில் அருள்புரியும் சிவனாருக்கு ஜம்புலிங்கேஸ்வரர் என்று பெயர். அம்பாள் அகிலாண்ட நாயகி ஆவார். கோயிலில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளில் உயரமான கோபுரங்களும் ஐந்து பிராகாரங்களும் அழகுடன் திகழ்கின்றன. மூலவர் ஜம்புகேஸ்வரர் சுயம்பு மூர்த்தமாக அப்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். அப்பு என்றால் ‘நீர்’ என்ற அர்த்தமும் உண்டு.

இந்தக் கோயிலின் நான்காவது திருச்சுற்று மதிலுக்கு, ‘திருநீற்றான் மதில்’ என்ற பெயர் உண்டு. காரணம், அந்த மதிலை உருவாக்கிய பணியாளர்களுக்கு சித்தர் வடிவில் சிவபெருமானே வந்து கூலியாகத் திருநீற்றை வழங்கினாராம். பின்னர் அந்தத் திருநீறு அவரவர் உழைப்புக்கேற்ற பொன்னாக மாறியதாகப் புராணம்.

ஆதி காலத்தில் இந்தப் பகுதி வெண் நாவல் (ஜம்பு) மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாகவும், அங்கே சிவபெருமான் எழுந்தருளி கோயில் கொண்டார் எனவும் புராணங்கள் சொல்கின்றன. அதேபோல், அன்னை அகிலாண்டேஸ்வரியின் கோலம் பண்டைக் காலத்தில் கோப வடிவமாக மிகவும் உக்கிரத்துடன் இருந்ததாம். ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ சக்கர ரூபமான காதணிகளை அம்பாளுக்கு பிரதிஷ்டை செய்து அணிவித்ததும், அம்பாளின் உக்கிரம் தணிந்து சாந்த ஸ்வரூபியாக மாறிக் காட்சி அளிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆலயத்தில் அதிகாலையில் கோ பூஜையும், உச்சிக் காலத்தில் தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. இக்கோயில் உச்சிக்கால பூஜையின்போது நடைபெறும் ஒரு சிறப்பம்சம் கவனிக்கத்தக்கது. அப்போது சிவாச்சாரியார் ஒருவர் அன்னை அகிலாண்டேஸ்வரியைப் போல பெண் வேடம் பூண்டு, அம்பிகையைப் போலவே கிரீடமும் தரித்துக்கொண்டு, மேள தாளங்கள் முழங்க, யானை முன்னே செல்ல, ஸ்வாமியின் சன்னிதிக்குச் சென்று பூஜை புனஸ்காரங்களைச் செய்வார்.

இதையும் படியுங்கள்:
தம்பதியருக்குள் மனவேற்றுமை நீக்கும் ஞாயிறு திருத்தலம்!
Ambika wearing Sri Chakra as earrings

இந்த ஆலயத்துக்குச் செல்பவர்கள் நிதானமாக கோயில் தூண்களில் இடம்பெற்றிருக்கும் சிற்பங்களைப் பார்த்து மகிழலாம். மூன்று கால் முனிவர் சிலை போன்ற அபூர்வச் சிற்பங்களை இந்தக் கோயில் வளாகத்தில் காண்டு ரசிக்கலாம்.

பராந்தக சோழன் உள்ளிட்ட பல மன்னர்கள் பற்றிய கல்வெட்டுக்களும் இங்கே காணக் கிடைக்கின்றன. சோழ, பாண்டியர்கள், போசாளர்கள், விஜயநகரை ஆண்ட பேரரசர்கள், மதுரை நாயக்கர்கள் போன்றோரும் இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர். அவை குறித்த சுமார் 154 கல்வெட்டுகள் இங்கே காணக் கிடைக்கின்றன. தேவாரப் பாடல் பெற்ற அறுபது காவிரி வடகரை சிவத் தலங்களில் இதுவும் ஒன்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com