இந்தக் கோயிலில் தேங்காய் நெய் தீபம் ஏற்றினால் இவ்வளவு பலன்களா?

Ammainathar Temple
Ammainathar Temple
Published on

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் உள்ளது அருள்மிகு அம்மைநாதர் திருக்கோயில் (Ammai nathar Temple). நவ கயிலாயத்தில் ஒன்றாகவும், சந்திரனுக்குரிய தலமாகவும் இது போற்றப்படுகிறது. அம்பிகையின் பெயர் ஆவுடைநாயகி.

ஒரு சமயம் சிவ தரிசனம் பெற விரும்பிய உரோமச முனிவர் அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி தாமிரபரணி நதிக்கரைக்கு வந்தார். அங்கு ஒன்பது மலர்களை நதியில் விட்டார். அந்த ஒன்பது மலர்களும் ஒதுங்கிய கரையினில்தான் நவ கயிலாயங்கள் எனப்படும் சிவன் கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் இரண்டாவது மலர் ஒதுங்கிய இடத்தில் உரோமச முனிவர் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். அதுதான் சேரன்மகாதேவி திருத்தலம். இத்தலத்தில்தான் அம்மைநாதர் அருளாட்சி புரிகிறார்.

உரோமச முனிவர் வழிபட்ட சிவலிங்கம் பிற்காலத்தில் ஒரு அரச மரத்தின் கீழ் இருந்தது. இந்தப் பகுதியில் வசித்த சிவ பக்தைகளான சகோதரிகள் இருவர் நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் தினமும் இந்த லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கிய பின்னரே தங்களுடைய வேலையைத் தொடங்குவார்கள். ‘இந்த லிங்கம் மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே’ என்று ஆதங்கப்பட்ட அந்த சிவ பக்தைகள், அந்த சிவலிங்கத்துக்கு கோயில் ஒன்றை அமைக்க முடிவு செய்தனர். ஆனால், அதற்கான பணம் அவர்களிடத்தில் இல்லை.

ஈசனுக்கு ஒரு சன்னிதி அமைக்க அவர்கள் தங்களது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை சேமிக்கத் தொடங்கினர். அவர்களது பக்தியை மெச்சிய சிவன், ஒரு சிவனடியார் வடிவில் அந்த பெண்களின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்று அந்தப் பெண்கள் அவருக்கு உணவு பறிமாறி உபசரித்தனர். அப்போது அந்த வீட்டில் விளக்கு எரியவில்லை. ‘வெளிச்சம் இல்லாத வீட்டில் தான் உணவருந்துவதில்லை’ என்று அந்த சிவனடியார் எழுந்துகொள்ள, அந்தப் பெண்கள் பதறினர். உடனே, அவசர அவசரமாக விளக்கைத் தேடினர். விளக்கு கிடைக்காததால் சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து அதில் நெய் விட்டு விளக்கேற்றினர்.

இதையும் படியுங்கள்:
மனித நடமாட்டமே இல்லாத மர்மக் காடு: நிதிவனம் ராதாகிருஷ்ணர் கோயில் ரகசியம்!
Ammainathar Temple

இதனால் மகிழ்ச்சி அடைந்த அடியவர் உருவில் இருந்த சிவபெருமான், உணவருந்திய பின்னர் தனது சுய உருவத்தை அந்தப் பெண்களுக்குக் காண்பித்து ஆசி கூறி மறைந்தார். அதன் பின்பு அந்தப் பெண்களின் இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக் கொண்டு அவர்கள் சிவபெருமானுக்கு ஒரு கோயில் எழுப்பினர். இதுவே அம்மைநாதர் திருக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் சுவாமி, அம்பிகைக்கு மாதுளம் பழச்சாறு அபிஷேகம் செய்து அம்பாள் சன்னிதி முன்பு தட்டில் அரிசியைப் பரப்பி அதன் மத்தியில் உடைத்த தேங்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றுவது முக்கிய வழிபாடாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
நீங்கள் விரும்புவதைப்பெற உபாசிக்க வேண்டிய தெய்வம் எது?
Ammainathar Temple

இந்தக் கோயிலின் மண்டபத் தூண் ஒன்றில் சிவ பூஜை செய்த உரோமச முனிவர் திருவுருவம் செதுக்கப் பட்டுள்ளது. அதேபோல், சகோதரிகள் இருவர் நெல் குத்தி அரிசி புடைக்கும் சிற்பம் வடக்கு புறமாக ஒரு தூணில் செதுக்கப்பட்டு உள்ளது. நந்தனார் சிற்பம் கொடி மரத்தின் கீழே அமைக்கப்பட்டிருக்கிறது. இவர் இங்கிருந்து சாமியை வணங்கியபடி இருக்க, நந்தி சற்று விலகி இருக்கிறது. கொடி மரத்தின் அருகில் நின்று விலகிய நந்தியையும் சிவபெருமானையும் ஒருசேர தரிசிக்கலாம்.

-ஆர். ஜெயலட்சுமி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com