

மாபெரும் மன்னனான பரீட்சித்து மன்னனுக்குப் பல சந்தேகங்கள் ஏற்பட்டன. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக சுக மகரிஷி தெளிவுபடுத்தி விளக்கினார்.
பல அரிய ரகசியங்களை 12 ஸ்கந்தங்களில் பாகவத புராணம் விவரிக்கிறது.
இதில் இரண்டாம் ஸ்கந்தத்தில் மூன்றாம் அத்தியாயத்தில் சுக முனிவர் பரீட்சித்து மன்னனிடம் மனிதப் பிறவி கிடைத்தல் மிக மிக அரிது. அதிலும் மதிச்சிறப்பு உடையவர்கள் இன்னும் அரிது என்று கூறி, மரணத்திற்கு முன்னர் எதை ஒருவன் அடையவேண்டும் என்று விரும்புகிறானோ அவன் யாரை ஆராதிக்க வேண்டும் என்று விளக்குகிறார்...
பிரம்ம தேஸஜை விரும்புபவன் பிரம்ம தேவன்
இந்திரியங்களின் வலிமையை விரும்புபவன் இந்திரன்
மகன், மகள்களை விரும்புபவன் தக்ஷர் முதலிய ப்ரஜாபதிகள்
சோபையை விரும்புபவன் மஹாலக்ஷ்மி
தேஜஸை விரும்புபவன் சூரியன்
பணத்தை விரும்புபவன் அஷ்டவசுக்கள்
வீர்யத்தை விரும்புபவன் ருத்ரர்கள்
அன்னத்தை விரும்புபவன் அதிதி
ஸ்வர்க்கத்தை விரும்புபவன் அதிதியின் புதல்வர்கள்
ராஜ்யத்தை விரும்புபவன் ஸாத்யர்கள்
ஆயுளை விரும்புபவன் அஸ்வினி தேவர்கள்
தேக பலத்தை விரும்புபவன் பூமி தேவி
தனது அதிகாரம், அந்தஸ்திலிருந்து கீழிறங்காமல் அதே நிலையில் நிலைத்திருக்க விரும்புபவன் உலகத் தாய்மாரான த்யாவா பூமிகள் (ஆகாயம், பூமி ஆகியவற்றிற்கு அதிஷ்டான தேவதைகள் இருவர்)
அழகை விரும்புபவன் கந்தர்வர்கள்
பெண்களை விரும்புபவன் அப்ஸரஸான ஊர்வசி
மற்றவர்களுக்கு எஜமானனாக விரும்புபவன் பரமேஷ்டி
யஸஸை விரும்புபவன் விஷ்ணு
பொக்கிஷத்தை விரும்புபவன் வருணன்
வித்யையை, விரும்புபவன் ருத்ரன்
கணவன், மனைவி ஒருவர் மேல் ஒருவர் அன்பை அதிகரித்துக் கொள்ள விரும்புபவன் பார்வதி தேவி
தர்மத்தை விரும்புபவன் விஷ்ணு
வாரிசுகளை அடைய விரும்புபவன் பித்ரு தேவதைகள்
துக்கமின்றி சுகத்தை விரும்புபவன் யக்ஷர்கள்
பலத்தை விரும்புபவன் மருத் கணங்கள்
அரசாள விரும்புபவன் மனு தேவதைகள்
எதிரியை அழிக்க விரும்புபவன் ராட்சஸர்கள்
காம சுகத்தை விரும்புபவன் சந்திரன்
வைராக்யத்தை விரும்புபவன் பரம புருஷன்
இப்படி தெளிவாக எதைப்பெற யாரை ஆராதித்து வழிபட வேண்டும் என்று சுக மகரிஷி விளக்குகிறார்.
இவற்றில் எதையும் விரும்பாமல் ஆழ்ந்த மதியை உடையவனாகி, முக்தியையே விரும்புபவன் பக்தி யோகத்தால் பரம புருஷனை ஆராதிக்க வேண்டும்.
சுக மகரிஷியின் இந்த விரிவான விளக்கத்தை அனுசரித்தே மனிதர்கள் தங்களுக்கு வேண்டியதைத் தரும் தெய்வங்களையும் அதை உபாஸிக்கத் தகுந்த பாதையைக் காட்டும் குருமார்களையும் பண்டைய காலத்தில் அணுகிப் பலன் பெற்றனர்.
பக்தியில் சிறந்த பெரிய மகான்களிடம் பகவானுடைய கதைகளைக் கேட்டு பக்தியை தங்களிடம் பக்தர்கள் நிலைப்படுத்திக் கொண்டனர். சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி முக்தியை நோக்கிச் சென்றனர்.