

அம்மன் கோவில் என்று கூறினாலே பொங்கல் வைப்பது, மாவிளக்கு ஏற்றுவது என்பதுதான் நம் நினைவுக்கு வரும். மேலும் மாரியம்மன், துர்க்கை, மீனாட்சி, காமாட்சி போன்ற தெய்வங்களை வழிபடுவதற்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் (Amman Visheshangal) மாவிளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.
அதேபோல் விநாயகர், பெருமாள், முருகன் போன்ற தெய்வங்களை வணங்கும் பொழுதும் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது உண்டு. சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கும்போது மாவிளக்கு ஏற்றி வழிபடுவது விசேஷம். அப்படி வழிபடுவதின் நோக்கம் வேண்டுதல்கள் நிறைவேறவும், சுபகாரியங்கள் தடையின்றி நடக்கவும், குடும்ப நலனுக்காகவும் மாவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியை பெண்கள் விரும்பி செய்கின்றனர்.
மாவிளக்கு ஏற்றுவதன் நோக்கம் வேண்டுதல் நிறைவேறவும், தீராத நோய்கள் நீங்கவும், செல்வ வளம் பெருகுவதற்கும், குடும்பத்தில் கஷ்டங்கள் தீருவதற்கும், வம்சம் தழைக்கவும் பெண்கள் இந்நோன்பை மேற்கொள்வார்கள். மேலும் குலதெய்வ வழிபாட்டில் இது ஒரு முக்கிய அங்கமாகும்.
பச்சரிசியை இடித்து, சலித்து வெல்லம், ஏலக்காய் கலந்து பிசைந்து, காமாட்சி விளக்கு வடிவில் செய்து, அதன் நடுவில் கிண்ணம் போல் செய்து அதில் நெய் ஊற்றி பஞ்சுத்திரிப் போட்டு தீபம் ஏற்றுவது வழக்கம். அதன்பின் 24 நிமிடம் அந்த மாவிளக்கு தீபம் எரிவது அவசியம்.
படையலில் நாம் விரும்பும் குலதெய்வத்தை மனதார வேண்டி வெற்றிலை, பாக்கு , பழங்கள், பூக்கள் வைத்து வழிபட்டு மாவிளக்குடன் பானகம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றையும் படைக்கலாம்.
மாவிளக்கு வழிபாடு வீட்டில் மட்டுமல்லாமல் அம்மன் கோயில்களிலும், குலதெய்வ கோயில்களிலும் சிறப்பாகச் செய்யப்படுகிறது. மாவிளக்கு ஏற்றும்பொழுது மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வேண்டுதல் செய்யும் பொழுது எப்படி விளக்கேற்றி படையல் செய்து வழிபடுகிறோமோ, அதேபோல் வேண்டுதல் நிறைவேறியவுடனும் அதே முறையில் மற்றும் ஒருமுறை மாவிளக்கு ஏற்றி படையலிட்டு தெய்வத்திற்கு நன்றி செலுத்தி விடைபெற வேண்டும்.
இப்படி அம்மன் கோவிலில் மாவிளக்கு ஏற்றுவதன் தத்துவம் என்ன கூறுகிறது என்றால், அம்மன் ஒளிமயமானவள், சூரிய பிரகாசம் போன்றவள் என்கின்றன புராணங்கள். ஒளியை ஒளியாலேயே வணங்குவது நம் மரபு. நம் வாழ்க்கைக்கு வெளிச்சத்தை தரக்கூடியவள் அம்மன்.
அவளை நாம் தினமும் அல்லது செவ்வாய், வெள்ளி தினங்களில் மா விளக்கு, எலுமிச்சை விளக்கு, அகல் விளக்கு என்று எந்த வகையிலாவது தீபம் ஏற்றி அம்மனை வழிபடலாம். இதனால் நம் பிரார்த்தனை நிறைவேறும். கேட்டது கிடைக்கும். தொட்டது துலங்கும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆதலால் தீபம் ஏற்றுவோம்; சிறப்படைவோம்.