

நாம் கோயிலுக்குச் செல்லும்போது பலவிதமான வழிபாடுகளை நடத்துகிறோம். அத்தகைய வழிபாடுகளில் எதை முதலில் செய்ய வேண்டும், எதை இறுதியாக செய்ய வேண்டும் என பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அப்படிப்பட்ட வழிபாட்டு முறைகளில் ஒன்றான சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வழிபடுவதன் காரணம் குறித்து இப்பதிவில் காணலாம்.
கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்யும்போது சாஷ்டாங்கமாக விழுந்து வழிபடுவதற்கு என்று ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி இருப்பார்கள். சில கோயில்களில் இந்த நடைமுறை இல்லாமலும் இருக்கும். கையெடுத்து வணங்குவதோடு, பக்தர்கள் சிலர் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து கைகளை தலைக்கு மேலாக கூப்பி வழிபடுவதைப் பார்த்திருப்போம். பரந்து விரிந்த வானம் தன்னிடத்தில் தோன்றும் அழகான வானவில்லின் வருகையை ஒருபோதும் அறியாது. அந்த வானவில் எப்போது மறையும் என்றும் தெரியாது. அதைப்போலவே மனிதர்களாகிய நம்மிடையே இருக்கும் இந்த உயிரும் எப்போது வரும், எப்போது போகும் என்பது யாருக்கும் தெரியாது.
காற்றின் அசைவுக்கு ஏற்ப அசைகின்ற மரத்தில் பழுத்து விழும் கனிகளைப் போல சில நேரங்களில் வாழ்ந்து முடித்து ஆண்டு அனுபவித்த பிறகும் உயிர் உடலை விட்டுப் போகலாம். வீசுகின்ற காற்றின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விழும் பிஞ்சுகள், காய்களை போல சில நேரங்களில் வாழ்வின் பகுதியிலேயேயும் இந்த உயிர் உடலை விட்டு இறைவனிடம் சேரலாம். அத்தகைய நிலையாமையான இந்த வாழ்க்கையில், ‘இப்பிறவிலேயே நாம் எண்ணியவை அனைத்தும் நிறைவேற வேண்டும்’ என்பதை அர்த்தமாகக் கொண்டுதான் கோயில்களில் தரையில் படுத்து இறைவனை வணங்கும் சாஷ்டாங்க வழிபாட்டு முறையும் உள்ளது.
தரையிலேயே கால் படாத இறைவனின் திருவடிகளை நினைத்து தரையில் விழுந்து சாஷ்டாங்கமாக வழிபடும்போது நாம் எண்ணியவை எல்லாம் இறைவன் இப்பிறவியில் கொடுத்து அருள்வதாக ஒரு மிகப்பெரிய நம்பிக்கை உண்டு. அதனால்தான் எப்பொழுதும் இறைவனின் பரிபூரண அருளை முழுமையாக பெறுவதற்கு தரையில் விழுந்து சாஷ்டாங்கமாக வழிபாடு செய்கிறோம். இந்த வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து எப்பொழுதும் மற்றவர்களுக்கு துன்பம் தரக்கூடிய செயல்களைச் செய்யாமல், மற்றவர்களிடம் அன்பு பாராட்டி இந்த வாழ்க்கையை முழுமையாக கடந்து செல்ல வேண்டும் என்பதை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ளும் விதமாகத்தான் நம்மிடையே இன்று நடைமுறையில் உள்ள பல்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன.
இந்தக் கருத்தினை நம் தமிழ் இலக்கியங்களில் மிக முக்கியத்துவம் பெற்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியார் பாடலில் மிக அருமையாக விளக்கி இருப்பார்கள்.
‘வானிடு வில்லின் வரவறியா வாய்மையால்
கானிலம் தோயாக் கடவுளை – யானிலம்
சென்னியுற வணங்கிச் சேர்துமெம் உள்ளத்து
முன்னியவை முடிக என்று’
ஒவ்வொரு முறை கோயிலுக்குச் செல்லும்போது நாம் நமக்கு வேண்டியவற்றை கடவுளிடம் முறையிடுவது போல, நாம் பிறருக்கு என்ன தீங்கு செய்தோம் என்பதையும் எண்ணிப் பார்த்து அந்தத் தீமையை மறுபடியும் மற்றவர்களுக்கு செய்யாமல் நம்மை நாமே திருத்திக் கொள்வதுதான், கடவுளை நினைப்பதற்கான மிகச் சிறந்த வழியாகும்.
எனவே, ஒவ்வொரு முறை கோயிலுக்கு செல்லும்போது, நம்முடைய கோரிக்கைகளை முன்வைக்கும் ஒரு இடமாக கோயிலை பார்க்காமல் இந்த வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து, நம்முடைய செயல்களையும் சிந்தனைகளையும் அறவழியில் அமைத்துக்கொள்வதே இறைவனைச் சென்றடையும் முக்கிய வழியாகும்.
அருமையான மனிதப் பிறவியினை எடுத்து இருக்கிறோம். அதனை முறையாக பயன்படுத்திக்கொள்ளுதல் வேண்டும். அயர்வினாலோ, அறியாமையினாலோ அதனைத் தவறவிடுவோமானால் ஒரு நல்ல வாய்ப்பினை இழந்துவிட்டவர்கள் ஆவோம் என்பதை ஒவ்வொரு நாளும் மனதில் கொண்டு பிறருக்குப் பயனுள்ள வகையில் இந்த வாழ்க்கையை வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ராதா ரமேஷ்