
ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ அட்சலேஷ்வர் மகாதேவர் திருக்கோயில். இக்கோயில் கருவறையில் அருளும் சிவலிங்கம் காலை நேரத்தில் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதே சிவலிங்கம் நண்பகலில் காவி நிறத்திலும், இரவில் இதன் நிறம் கருமையாகவும் மாறி விடுவது ஆச்சரியம்.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் சிவலிங்கம் அதிசயம் மிக்கதாகவும் ஆச்சரியம் கொண்டதாகவும் விளங்குகிறது. இந்த சிவலிங்கத்தின் மேலே குடையாகக் காட்சி தரும் நாகர் சிலை செம்பினால் செய்யப்பட்டதாகும்.
இக்கோயில் கருவறை சிவலிங்கம் ஒரே நாளில் மூன்று வேளைக்கு மூன்று நிறமாக மாறுவது ஆச்சரியம். இந்த அதிசய நிகழ்வு வருடத்தில் அனைத்து நாட்களிலும் தினசரி நிகழ்வது ஆச்சரியம். காலை நேரத்தில் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் இந்த சிவலிங்கம், நண்பகலில் காவி நிறத்தில் காட்சி தருகிறது. இரவில் இதன் நிறம் கருமையாக மாறிவிடுகிறது. மறுநாள் காலை இந்த சிவலிங்கம் மீண்டும் சிவப்பு நிறமாக மாறி விடுவது ஆச்சரியம்.
மகாதேவர் ஆலயம் கட்டப்பட்ட காலத்திலேயே இந்த சிவலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், இந்த சிவலிங்கத்தின் உயரத்தை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அடி, முடி காண முடியாதவர் சிவபெருமான் என்பதை உணர்த்தும் விதமாக இக்கோயில் சிவலிங்கம் ஆயிரம் அடிகளையும் தாண்டி தரைக்கு கீழே புதைந்து இருப்பதாக நம்பப்படுகிறது.
சிவபெருமான் பூலோகத்தில் கால் பதித்த ஒரே இடம் இதுதான் என்று இந்த ஆலய தல வரலாறு சொல்கிறது. இந்த ஆலய இறைவனை வழிபாடு செய்பவர்களுக்கு மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணை அமையும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.